இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யாமல் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, இலங்கையில் மக்கள் மீண்டும் தீவிர போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
கடந்த 9-ம் தேதி கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர். இதன் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியால் இன்று(ஜூலை-13) கோத்தபய ராஜபக்ச தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். ஆனால் அவர் பதவி விலகாமலேயே இன்று அதிகாலையில் சிறப்பு விமானம் மூலமாக மாலத்தீவுக்கு தப்பி சென்றதாக விமானப்படையின் அறிக்கை வெளியானது.
இதன் காரணமாக இலங்கையில் மீண்டும் அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மறுபடியும் கொழும்புவில் குவியத் தொடங்கியுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகக்கோரி முழக்கமிட்டபடி அவரின் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரள ஆரம்பித்துள்ளனர். இவர்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. எனவே இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பதவி விலகல் கடிதத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே கையெழுத்திட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், அதை ஏற்க மறுத்த மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அனைத்து கட்சிகள் அடங்கிய ஒரு அரசு அமைய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதிபர் கோத்தபய ராஜினாமா செய்தவுடன், இலங்கை அரசியலமைப்பின்படி, பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கும் வரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் இடைக்கால அதிபராக இருக்கவேண்டும். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவும் அனைத்துக்கட்சி அரசாங்கத்தை உருவாக்க தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜூலை 9-ம் தேதி ட்வீட் செய்திருந்தார். ஆனால் மக்கள் ரணிலுக்கு எதிராகவும் கடுமையாக போராட தொடங்கியுள்ளனர். இதனால் ஒருவேளை ரணிலும் தனது பதவியை ராஜினாமா செய்தால் சபாநாயகர் இடைக்கால அதிபராக இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவியுடன் இலங்கையில் இருந்து புறப்பட்டார். அவருடன் பாதுகாவலர்கள் இருவரும் உடன் சென்றுள்ளனர். மாலத்தீவுக்குச் சென்றடைந்த அவர், ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: “அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியது என்பது அடிப்படையற்ற மற்றும் ஊக ஊடக அறிக்கையாகும். இதனை திட்டவட்டமாக மறுக்கிறோம்.
ஜனநாயகபெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள்,நிறுவனமயப்படுத்தப்பட்ட ஜனநாயகஅமைப்புகள் மற்றும் அரசியலமைப்புரீதியான கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க எதிர்பார்த்திருக்கும் இலங்கைமக்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்குமென மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது.
— India in Sri Lanka (@IndiainSL) July 13, 2022
ஜனநாயக வழிமுறைகள் மற்றும் விழுமியங்கள், ஜனநாயக நிறுவனங்கள், இலங்கை அரசியலமைப்பு கட்டமைப்பின் மூலம் மட்டுமே இலங்கை மக்களுக்கு இந்தியா உதவுகிறது. இலங்கை மக்களின் முன்னேற்றத்திற்கான அவர்களின் கனவுகளை நனவாக்க இந்தியா அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry