பேரறிவாளன் விடுதலை! வரவேற்கும் திமுக; எதிர்க்கும் காங்கிரஸ்! போராட்டம் அறிவிப்பு!

0
264

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, அவரது குடும்பம் மகிழ்ச்சி கடலில் மூழ்கி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் வரவேற்று உள்ளனர்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர், பேரறிவாளன் விடுதலையை வரவேற்றுள்ளனர்.

பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருப்பது வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பாக அமைந்திருக்கிறது என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.  மேலும், மனிதாபிமான, மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை என்பது வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கும் அதே நிலையில், மாநிலத்தினுடைய உரிமையானது இந்தத் தீர்ப்பின் மூலமாக மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது. மாநில அரசினுடைய கொள்கையில், அதனுடைய முடிவில் ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்று நீதியரசர்கள் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள். இது மிகமிக முக்கியமான ஒன்று.’ என்றும் அவர் கூறியிருக்கிறார்.

எனினும், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை விமர்சனம் செய்துள்ளது. இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்ச நீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்ச நீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் எனக் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், ராஜிவை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும். நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாளை (19.5.2022) காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கே.எஸ். அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில், திமுக ஆதரவு தெரிவிக்கும் நிலையில், கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry