‘கனகசபை’ மீது ஏறி நடராஜரை தரிசிக்கலாம்! அரசாணை வெளியீடு! அரசு உத்தரவை ஏற்பார்களா தீட்சிதர்கள்?

0
204

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி நடராஜரை தரிசிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயில், தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோயிலின் நடை முறைகள், வழிபாட்டு முறைகள், பக்தர்களை அனுமதிப்பது உள்ளிட்ட எல்லா விஷயங்களிலும் தீட்சிதர்களே முடிவு எடுக்கின்றனர். அறநிலைத்துறை உத்தரவுகளை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

கொரோனா பரவல் காரணமாக கோயில்களில் வழிபட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோது, நடராஜர் கோயிலில் கனகசபையில் பக்தர்களை ஏற அனுமதி மறுக்கப்பட்டது. அதன்பின் கொரோனா குறைந்து தமிழகம் முழுவதும் கோயில்கள் திறக்கப்பட்டு பழைய முறைப்படியே கோயில்களில் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

ஆனால் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டும் கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. கனகசபை மீது ஏற முயன்றவர்களை தீட்சிதர்கள் தடுத்து தாக்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை கண்டித்தும், கனகசபை மீது ஏறி வழிபட அனுமதி வழங்க வேண்டும் என்றும் தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் சிதம்பரத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இதனால் ஒரு கட்டத்தில் சிதம்பரத்தில் போராட்டங்கள் நடத்த கோட்டாட்சியரால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அறநிலையத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தீட்சிதர்கள் தரப்பில் பேச்சு நடத்தியும்கூட பக்தர்களை கனகசபை மீது அனுமதிக்க தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த நிலையில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்றும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும், கடலூர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ஏற்றும் அரசாணை வெளியிடப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. உரிய விதிமுறைகளை பின்பற்றி கனகசபை மீது ஏறி நடராஜரைத் தரிசிக்கலாம் என்று அந்த அரசாணை கூறுகிறது.

அரசாணை வெளியிடப்பட்டாலும் அதை தீட்சிதர்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அரசாணை குறித்த விவரம் வெளியானதும், தீட்சிதர்கள் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அரசாணையை ஏற்று கனகசபை மீது பக்தர்களை அனுமதிப்பதா? அல்லது கோயில் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு விதிகளை காரணம் காட்டி அனுமதிக்க மறுப்பார்களா என்பது இந்த ஆலோசனைக்குப் பிறகே தெரியவரும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry