கூட்டாட்சி தத்துவத்தை பாதிக்கும் ஜிஎஸ்டி கவுன்சில்! மாநில அரசுகளைக் கவுன்சிலால் கட்டுப்படுத்த முடியாது!

0
208

குஜராத் மாநிலத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள முரணான தகவல்களைக் களைவதற்காக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர, மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்துவதல்ல என தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

Representative image

அதில், `வரிவிதிப்பில் மாநில மற்றும் மத்திய அரசிற்குள்ள பிரத்யேக அதிகாரங்கள் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டவை ஆகும். அரசியல் சாசன பிரிவு 246A படி, வரி விதிப்பு விஷயங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு சம அதிகாரம் உள்ளது. அதுபோல அரசியல் சாசன சட்டத்தில் 279-வது பிரிவு மத்திய -மாநில அரசுகளுக்கான ஒருங்கிணைந்த கூட்டாட்சி தத்துவத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

ஜிஎஸ்டி கவுன்சிலில் வாக்களிக்கும் கட்டமைப்பு என்பது, 1/3 என்ற விகிதாச்சாரத்தில் மத்திய அரசுக்கும், 2/3 விகிதாச்சாரத்தில் மாநில அரசுகளுக்கும் உள்ளது. ஆனால் ஜிஎஸ்டி கவுன்சில் என்பது அரசியல் போட்டிகளுக்கான இடமாக மாறி உள்ளது. இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தைப் பாதிக்கிறது. ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றது.

குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகத்தான், கூட்டாட்சித் தத்துவத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசுக்குச் சற்று அதிகமான அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால் இந்தியக் கூட்டாட்சி என்பது மாநிலங்களும் – மத்திய அரசும் எப்போதும் ஒருங்கிணைந்து உரையாடக்கூடிய இடமாகும். இதனடிப்படையில் பார்த்தால், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுரைகளை மற்றும் பரிந்துரைகளை வழங்கலாம். ஆனால் இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி விவகாரங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கும், அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் சம உரிமை உள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும்.’ என்று நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Finance Minister Nirmala Sitharaman

ஜிஎஸ்டி வரி விதிப்பு, அதில் மாற்றங்கள், நிலுவைத் தொகை போன்ற பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்தக் கவுன்சிலே பொருட்களுக்கான வரியைக் கூட்டுவது, குறைப்பது, நீக்குவது உள்ளிட்ட முடிவுகளை எடுத்து வருகிறது. இந்தக் கவுன்சிலில் மத்திய நிதியயைமைச்சர், பல மாநிலங்களிலன் நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry