ஆயுர்வேதத்தில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான சில விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. உண்பது, குடிப்பது, குளிப்பது, தூங்குவது மற்றும் பல விஷயங்கள் தொடர்பான விதிகள் இதில் அடங்கும். உடல் சுத்தத்திற்கு குளியல், மன சுத்தத்திற்கு வழிபாடு, தியானம் என நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளார்கள். குளிப்பது, நீராடுவது, ஸ்நானம் செய்வது என பல சொற்களை நாம் குறிப்பிடுகிறோம்.
ஆனால் இந்த மூன்று சொற்களுக்கும் வேறு வேறு அர்த்தங்கள் இருப்பதாக வேதங்களும், சாஸ்திரங்களும் சொல்கின்றன. சாதாரணமாக இப்போது நாம் வீட்டில் உடல் சுத்தம் செய்து கொள்ளும் முறைக்கு குளியல் என்று பெயர். புனிதமான அருள் நிறைந்த நீர் நிலைகளில் மூழ்கி எழுவதற்கு நீராடுவது என்று பெயர். சாஸ்திரங்கள் கூறும் முறைகளில் உடலில் நீர் அல்லது புனித பொருட்களை தரித்து கொள்வதற்கு ஸ்நானம் என்று பெயர்.
பருவத்திற்கு ஏற்ப உணவு முறை மாற்றங்கள், குளிப்பதற்கு சரியான நேரம், சரியான நேரத்தில் தூங்குதல் மற்றும் உடலின் இயல்புக்கு ஏற்ப சில உணவுகளை தவிர்த்தல், இவை அனைத்தும் ஆயுர்வேதத்தில் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. உடலை உள்ளேயும் வெளியேயும் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். குளிக்கும் போதும் அதற்கு முன்பும் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். தவறான நேரத்தில் குளிப்பது நோய்வாய்ப்படுத்தும். உடலை வெளியில் இருந்து சுத்தம் செய்வது அழகுக்கு மட்டுமல்ல, தூய்மைக்கும்தான்.
சற்றே விளக்கமாகப் பார்த்தால், நீராடல் என்பது வேறு, குளிப்பது என்பது வேறு. கால் முதல் தலை வரை எல்லா பாகங்களிலும் நீர் படும் வகையில் குளிப்பதை ஸ்நானம் என குறிப்பிடுகின்றன. கால் முதல் தலை வரை என்ற முறையிலேயே நம்முடைய குளியல் முறை இருக்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஒரு குளித்திலோ, கடலிலோ நீராட போகும் போது முதலில் நனைவது நம்முடைய கால் பகுதி என்பதனால், நம்முடைய தினசரி குளியல் முறையும் இதே முறையிலேயே அமைய வேண்டும் என சொல்லப்படுகிறது.
ஆயுர்வேதத்தின்படி, ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். சூரியன் உதிக்கும் முன் வயிறு சுத்தமாகவும், பற்கள் சுத்தமாகவும், உடல் சுத்தமாகவும் இருப்பது அவசியம். இரண்டாவது முறை, மாலையில் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இது தசைகள் மற்றும் நரம்புகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
நீங்கள் யானையைப் போல குளிக்க வேண்டும் என ஆயுர்வேதம் கூறுகிறது. அதாவது உடலை சுத்தம் செய்ய போதுமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பது. நீங்கள் தண்ணீரை வீணாக்க வேண்டும் என்று இதற்கு அர்த்தம் இல்லை. ஆனால் உடலை முழுமையாக சுத்தமாக வைத்திருக்க தண்ணீரை சரியாக பயன்படுத்த வேண்டும்.
ஆயுர்வேதத்தில், குளிப்பதற்கு முன் மசாஜ் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. எள் எண்ணெய் மசாஜ் செய்ய சிறந்ததாக கருதப்படுகிறது. இருப்பினும், நீங்கள் பாதாம் அல்லது தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. குளிப்பதற்கு முன்பும், மசாஜ் செய்த பின்பும் மூலிகைப் பொடியைக் கொண்டு உடலை சுத்தம் செய்யவும். மூலிகைப் பொடியில் கடலை மாவு, பாசிப்பயறு பொடி, மஞ்சள், ரோஜா இதழ்கள், சந்தனம், வேப்ப இலைகள் மற்றும் கசகசா ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.
ஆயுர்வேதத்தின்படி, குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது. இருப்பினும், வெதுவெதுப்பான நீரை நேரடியாக தலை மற்றும் முடியில் ஊற்றக்கூடாது. தலையை கழுவுவதற்கு, அறை வெப்பநிலையில் தண்ணீர் எடுக்க வேண்டும். உணவு உண்ட உடனே குளிப்பதை தவிர்க்கவும். இது செரிமானத்தை கெடுக்கும்.
ஸ்நானம் செய்வதில் எட்டு வகைகள் உள்ளதாக நம்முடைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாருனம், ஆங்னேயம், பிராமம், வாயவ்யம், திவ்யம், காபிலம், சாரஸ்வதம், காயத்ரம் என எட்டு வகையான ஸ்நானங்கள் உண்டு. நதி, குளம் போன்ற நீர் நிலைகளிலே இறங்கி, மூழ்கி ஸ்நானம் செய்வது வாருன ஸ்நானம். மந்திரங்கள், பகவான் நாமத்தை சொல்லி உடல் முழுவதும் விபூதியை தரித்துக் கொள்வது ஆங்னேய ஸ்நானம்.
மந்திரம் அல்லது பகவான் நாமத்தை சொல்லி நீரை தலையில் தெளித்துக் கொள்வது பிராம ஸ்நானம் என சொல்லப்படுகிறது. பசு மாடு நடந்து செல்லும் வழியிலே அதன் கால் தடம் பட்ட இடங்களில் உள்ள மண்ணை எடுத்து உடலிலேயே பூசிக் கொள்வது வாயவ்ய ஸ்நானம் எனப்படுகிறது. நன்கு வெயில் அடிக்கும் போது பெய்யும் மழை, அதில் உடல் முழுவதும் நனைத்துக் கொள்வதற்கு திவ்ய ஸ்நானம் என்று பெயர். உடல் முழுவதையும் ஈரத்துணியால் துடைத்துக் கொள்வது காபி ஸ்நானம் ஆகும்.
சூரியன் மறைந்த பிறகு இரவில் மகான்களான பெரியோர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு, தன்னை சுத்தமானவன் என நினைத்துக் கொள்வது சாஸ்வத ஸ்நானம் எனப்படுகிறது. சுத்தமான நீரை கையில் எடுத்துக் கொண்டு காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, உடல் முழுவதும் நனைத்துக் கொள்வதற்கு காயத்ர ஸ்நானம் என சொல்லப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry