ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நகரமாக இருந்த திருவண்ணாமலை! சோழர் காலத்து கல்வெட்டுகள் கூறும் சுவாரஸ்ய தகவல்!

0
105
Stone inscriptions in Arunachaleswarar temple in Tiruvannamalai

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அம்மணி அம்மன் கோபுரம் அமைந்துள்ள 6ம் பிரகாரம், கோயில் மதிற்சுவரையொட்டியுள்ள வடஒத்தைவாடை தெருவில், சமீபத்தில் குடிநீர் பைப்லைன் அமைக்கும் பணி நடந்தது.

அதற்கான பள்ளம் தோண்டும்போது, அந்த பகுதியில் புதைந்து, சிதைந்து கிடந்த கற்களை எடுத்து பாதுகாப்பாக கோயிலில் வைத்திருந்தனர். அவ்வாறு மீட்கப்பட்ட கற்கள் சிலவற்றில், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே, இதுதொடர்பாக முறையாக ஆய்வு செய்திட கோயில் நிர்வாகம் அனுமதித்தது.

Also Read : கேடு விளைவிக்கும் ரீஃபைண்டு ஆயில்? சுத்திகரிக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் என்னென்ன? Adverse Effects of Refined Oil!

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், தொல்லியல் ஆலோசகர் வெங்கடேசன், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த வட்டாட்சியக் ச.பாலமுருருகன், த.ம.பிரகாஷ், சி.பழனிசாமி, மதன்மோகன், சிற்றிங்கூர்ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு நடத்தினர். வெவ்வேறு செய்திகளைக் கொண்ட 3 துண்டு கல்வெட்டுகள் அதில் இருப்பதை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்தக் கல்வெட்டுகளைப் படித்து விளக்கமளித்துள்ள தொல்லியல் ஆலோசகர் வெங்கடேசன், “விருத்தக் குமுதப் பகுதியில் உள்ள கல்வெட்டில், அண்ணாமலையார் கோயிலில் உள்ள பண்டாரமான கருவூலத்தில் இருக்கும் பொன் முதலானவற்றில் கிடைக்கும் வட்டியிலிருந்து, ஆண்டாண்டு தோறும் அண்ணாமலையாருக்கு பங்குனித் திருவிழா நடத்துவது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது துண்டு கல்வெட்டு என்பதால் மற்ற விவரங்கள் அறியப்பெறவில்லை. இந்தக் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு பார்க்கையில், இது முதலாம் இராஜராஜன் காலத்தியதாக இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

Stone inscriptions in Arunachaleswarar temple in Tiruvannamalai மற்றொரு துண்டு கல்வெட்டில், ஒப்பந்தங்களாக சில குறிப்புகள் உள்ளன. அதில், ‘கோயிலின் இறைவனுக்குத் தினசரி வழிபாட்டிற்காக ஒரு கலம் நெல்லும், 3 குறுணி அரிசியும் வழங்கப்பட வேண்டும்’ என்றும்; மற்றொரு ஒப்பந்தமாக, ‘உணவு படைத்தலின் போது நான்கு நாழி நெய் வழங்கப்பட வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு, ‘பண்டாரத்தில் சேமிப்பாக உள்ள ஒரு கழஞ்சு பொன் மற்றும் அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு இந்த ஏற்பாட்டை நடத்தி வரவேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டில் உள்ள `ஜகதி’ என்ற உறுப்பில் பல அழகிய சோழர்கால குறுஞ்சிற்பங்களும் உள்ளன. அவை, கஜசம்ஹார மூர்த்தி, மார்க்கண்டேயன் சிற்பம், உள்ளிட்டவை ஆகும். இதன் எழுத்தமைதியைக் கொண்டு பார்க்கையில், இந்தக் கல்வெட்டு முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என அறியப்படுகிறது.

மேலும், மற்றொரு துண்டு கல்வெட்டும் இங்குக் கிடைக்கப்பெற்றது. இதுவும் கோயில் அதிட்டானத்தின் ஒரு துண்டு பகுதியாகக் கிடைக்கிறது. இந்தக் கல்வெட்டில், ‘திருவண்ணாமலை உடைய தேவர்க்கு, செட்டியாகிய சதூரான பெருந்தச்சனுக்கு வைச்சபூண்டி நிலமாவது’ என்றும்; ‘புடவை செய்து கொடுத்தோம்’ என்றும்; ‘அண்ணாநாட்டு திருவண்ணாத்து செம்பியன் மகாதேவி நகரீஸ்வரம் கோயில்’ என்றும்; ‘பெரிய செறுவு காணிக்கையாகச் செய்து கொடுத்தேன் இம்மடமுடைய’ என்றும் துண்டு துண்டாகக் கல்வெட்டு வரிகள் கிடைக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்க, சிறப்பு வாய்ந்த ஒரு செய்தி புலப்படுகிறது.

Members of Tiruvannamalai Centre for historical research

கல்வெட்டின் 5-வது வரியில், ‘அண்ணாநாட்டு திருவண்ணாத்து செம்பியன் மகாதேவி நகரீஸ்வரம் கோயில்’ என்ற தொடரிலிருந்து, சோழ அரசி செம்பியன் மாதேவியார், திருவண்ணாமலைக்கு அருகில் அல்லது இந்தக் கோயிலில் தனது பெயரில் ‘செம்பியன் மகாதேவி நகரீஸ்வரம்’ என்ற கோயிலை அமைத்த செய்தி கிடைக்கிறது.

அந்தக் கோயில் தற்போது எங்குள்ளது என்பதைப் பற்றிய எந்தக் குறிப்புகளும் வேறு எங்கேயும் பதிவு செய்யப்பட்டதாக அறியமுடியவில்லை. இந்தக் கல்வெட்டில் நகரீஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது திருவண்ணாமலையைக் குறிப்பதாக உள்ளது. அவ்வாறெனில், திருவண்ணாமலை கி.பி 9, 10-ம் நூற்றாண்டிலேயே நகர் மயமான ஓர் ஊராக இருந்திருக்கும் என்று அறியலாம்.

Arunachaleswarar temple in Tiruvannamalai

இந்தக் கல்வெட்டின் காலம் 10-ம் நூற்றாண்டின் மையப்பகுதியாக இருக்கலாம். இந்தக் கோயிலில் கிடைத்துள்ள 3 சோழர் காலத்துக் கல்வெட்டுகளிலும் இதுவரை அறியப்படாத செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன. புதிய கற்களைப் பயன்படுத்தி, சில நூற்றாண்டுகளுக்கு முன்பாகச் செய்யப்பட்ட புனரமைப்பின் போது வரலாற்றுக்கு முக்கியமான செய்திகளைத் தரக்கூடிய இந்தக் கல்வெட்டுகளைத் தாங்கியிருந்த கற்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

Featured Videos from VELS MEDIA

காலை உணவை தவிர்ப்பது சரியா?Is it okay to skip breakfast?|Sadhu Janakiraman|Vels Media

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry