மோசமான நிலையில் தமிழக சுகாதாரத்துறை! அமைச்சரின் நிர்வாகக் குளறுபடிகள், உளறல்கள், அந்தர்பல்டிகள் அதிகரிப்பு!

0
86
Will the Chief Minister address concerns about the functioning of Health Minister Subramanian? Questions have arisen regarding the Health Ministry's performance and leadership, prompting calls for greater oversight and accountability from the state government.

(20.11.24 தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழில் வெளியான சிறப்புச் செய்தி, சுருக்கமாக வேல்ஸ் மீடியா வாசகர்களுக்காக!)

4 Mins Read : இந்தியாவின் மருத்துவத் தலைநகரம் என்றழைக்கப்படும் பெருமை, தமிழ்நாட்டுக்கு எப்போதுமே உண்டு. 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அவற்றுடன் இணைந்த 62 மருத்துவமனைகள், 37 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள், 1,832 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8713 துணை சுகாதார நிலையங்கள், 487 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட தமிழ்நாட்டில் மொத்தம் 13,214 அரசு மருத்துவக் கட்டமைப்புகள் இருக்கின்றன.

இந்த அளவுக்கு வலுவான அடிப்படை சுகாதாரக் கட்டமைப்பு, இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லை. ஆனால், இந்தப் பெருமையையெல்லாம் சல்லி சல்லியாக நொறுக்கத் தொடங்கியிருக்கின்றன, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையைச் சுற்றி எழும் சர்ச்சைகளும் குழப்பங்களும்!

“கடந்த சில ஆண்டுகளில், மெல்ல மெல்லச் சீரழிந்துவருகிறது தமிழக சுகாதாரத்துறை, மருத்துவர், செவிலியர், பணியாளர்கள் பற்றாக்குறை ஒருபக்கம் தலைவிரித்தாடும் நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு மருத்துவரைக்கூட நியமிக்க முடியாமல் ரொம்பவே திணறுகிறது அந்தத் துறை. சமீபத்தில்கூட, கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், பட்டப்பகலில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டார். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தவர், போராடித்தான் மீண்டெழுந்திருக்கிறார். அந்த அளவுக்கு மருத்துவர்களுக்கே பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது.

Dr. Balaji Jagannath

இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், முன்னுக்குப் பின் முரணான செய்திகளையும், பொய்யான தகவல்களையும் அள்ளித் தெளிக்கிறார் துறையின் அமைச்சரான மா.சுப்பிரமணியன். மீடியா வெளிச்சத்தோடு வாக்கிங் போவதில் காட்டும் ஆர்வத்தை, துறையை மேம்படுத்துவதில் அவர் காட்டுவதில்லை” எனக் கொதிக்கிறார்கள் அரசு மருத்துவர்களும், சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்களும். தமிழக சுகாதாரத்துறையில் என்னதான் நடக்கிறது..?” களமிறங்கி விரிவாகவே விசாரித்தோம்.

நிரப்பப்படாத காலிப் பணியிடங்கள்… மோசமாகும் சுகாதாரத்துறை!

பெயர் குறிப்பிட வேண்டாமென்கிற கோரிக்கையுடன் சுகாதாரத்துறைக்குள் நடக்கும் அவலங்களை குமுறிக் கொட்டினார்கள் அரசு மருத்துவர்கள் சிலர். “கட்டமைப்புரீதியாகவும், சிறப்புத் திட்டங்கள் ரீதியாகவும் தமிழக சுகாதாரத்துறையின் பலம், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வலுவாகவே இருக்கிறது. ஆனால், அரசு தொடங்கும் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்குப் போதிய மருத்துவர்கள் இருக்க வேண்டுமல்லவா…?

கடந்த சில ஆண்டுகளாகப் புதிய மருத்துவப் பணியிடங்களே உருவாக்கப்படவில்லை. தமிழ்நாட்டில், தற்போது 19,866 அரசு மருத்துவர்களும், 38,027 அரசு செவிலியர்களும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 6,000 மருத்துவர் பணியிடங்களும், சுமார் 18,000 செவிலியர் பணிமிடங்களும் காலியாக இருக்கின்றன. அதேபோல, 8,671 மருத்துவர் அல்லாத பணியாளர்கள் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. அவற்றையெல்லாம் நிரப்புவதற்கு இத்தனை ஆண்டுகளில் உருப்படியாக ஒரு முயற்சியும் செய்யவில்லை துறை அமைச்சர் மா.சு.

Also Read : முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர் மா.சு.! உண்மை வலிக்கும் என்றாலும் உரக்கச் சொல்வோம்! டாக்டர் பெருமாள் பிள்ளை திட்டவட்டம்!

மருத்துவ மேற்படிப்பு மாணவர்களையும், ஒப்பந்த மருத்துவர்களையும் வைத்துத்தான் அரசு மருத்துவமனையை ஓட்டுகிறார்கள். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அவர்கள்மீது நடவடிக்கைகூட எடுக்க முடியாது. இந்த லட்சணத்தில்தான் அரசு மருத்துவமனைகள் இயங்குகின்றன.

அதி.மு.க ஆட்சிக்காலத்தில், அறிவிக்கப்பட்ட காலிப் பணியிட எண்ணிக்கையைவிட இரு மடங்கு அதிகமான மருத்துவர்களைப் பணியமர்த்தினார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, எம்.ஆர்.பி. எனப்படும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் ஒரு மருத்துவரைக்கூட நியமிக்கவில்லை. கடந்த மார்ச் மாதம்தான், 3,645 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியானது. டிசம்பருக்குள் தேர்வு நடத்தப்படும்’ என்று அமைச்சர் மா.சு. உறுதியளித்திருந்தார். ஆனால், இன்றுவரை அதற்கான அறிகுறியே இல்லை, தமிழக சுகாதாரத்துறையில் இது போன்ற ஒரு மோசமான நிலைமை எந்தக் காலகட்டத்திலும் இருந்தது இல்லை.

ஐ.சி.யூ-வில் சுகாதாரத்துறை!

மருத்துவர்களும் செவிலியர்களும் பற்றாக்குறையாக இருப்பதால், கட்டமைப்பு வலுவாக இருந்தும்கூட கிராமப்புற மருத்துவ சேவையில் பின்தங்கிப் போய்க்கொண்டிருக்கிறது தமிழ்நாடு. அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காகச் சேர்பவர்களில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கும் மேல், பிரசவத்துக்கு முன்பாகவே வெளியேறி விடுகிறார்கள். அதற்கு மருத்துவர் பற்றாக்குறைதான் மூல காரணம். ஐ.சி.யூ-வில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்கலாம். ஒரு துறையே ஐ.சி.யூ-வில் இருந்தால் எப்படி சிகிச்சை அளிப்பது? இன்றைய தமிழக சுகாதாரத் துறை அந்த நிலையில்தான் இருக்கிறது” என்றனர் காட்டமாக.

தரமில்லாத மருந்துகள்… நிர்வாகக் குளறுபடிகள்!

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியளர்களின் பற்றாக்குறை ஒருபக்கம் சுகாதாரத்துறையை நெருக்குகிறது என்றால், நிர்வாகக் குளறுபடிகள் மறுபக்கம் சுற்றலில் விடுகின்றன. நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை உயரதிகாரிகள் சிலர் “அரசு மருத்துவமனைகளுக்குத் தரமில்லாத மருத்துகளை விநியோகம் செய்யும் நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்து, அந்த நிறுவனம் வெளி மார்க்கெட்டில் மருந்து சப்ளை செய்திருந்தால், அதையும் பறிமுதல் செய்ய வேண்டியது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் பொறுப்பு.

தற்போது, அரசு மருத்துவமனைகளுக்குத் தரமில்லாத 46 மருந்து வகைகளை சப்ளை செய்த 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அந்த நிறுவனங்கள் வெளி மார்க்கெட்டில் சப்ளை செய்த மருந்துகளை இதுவரை பறிமுதல் செய்யவில்லை. எந்தெந்த நிறுவனங்கள் மருந்துகளை சப்ளை செய்தன? என்ற விவரத்தையும் பொதுமக்களிடம் தெரிவித்து சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.

விழிபிதுங்கும் மா.சு!

முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, குழப்பத்தை ஏற்படுத்துவதையும் தொடர்ச்சியாகச் செய்கிறார் அமைச்சர் மா.சு. 2022-ல், “பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமில்லாத பொருள்களை வழங்கி, அபராதம் விதிக்கப்பட்ட அனிதா டெக்ஸ்கார்ட் என்ற நிறுவனத்துக்கு, மெடிக்கல் கிட் டெண்டர் எப்படி வழங்கப்பட்டது என்கிற கேள்வியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுப்பியிருத்தார். அதற்கு, அண்ணாமலை கூறிய நிறுவனத்துக்கு டெண்டரே வழங்கப்படவில்லை’ என்று அவசரகதியில் சொன்னார் மா.சு. உண்மையில், அந்த நிறுவனம் எல் 2-வாக இருந்து 4,21,200 மெடிக்கல் கிட்டுகளை அரசுக்கு வழங்கியிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட மாதமே டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவத் தொடங்கிவிட்டது. அது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டபோது, ‘தமிழகத்தில் எங்கே டெங்கு இருக்கிறது என்று எடப்பாடி காட்ட வேண்டும்’ என்று காட்டமாக பதிலளித்திருந்தார் மா.சு.

LoP Edappadi K Palaniswami

ஊரெங்கும் டெங்கு காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு மரணங்கள் நிகழ்ந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூருக்கு அருகே 6 வயது சிறுமி கடந்த நவம்பர் 5ம் தேதி உயிரிழந்த பிறகுதான் விவகாரம் பெரிதானது. உடனே, மருத்துவத்துறை சார்பில் நவம்பர் 7ம் தேதி ஒரு செய்திக்குறிப்பும் வெளியானது. அதில் 5.11.2024 வரை 20,138 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், அவர்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் 2023-ல் 29,401 பேரும், 2022-ல் 30,425 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்னதாக டெங்கு பாதிப்பு குறித்து 2024-ம் ஆண்டுக்கான அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில், 2022-ல் 6,430 பேரும், 2023-ல் 9,121 பேரும், 2024 (31.05.2024) வரை 4,384 பேரும் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் எது உண்மை? என்று அமைச்சருக்குத்தான் தெரியும். கொள்கை விளக்கக் குறிப்பில் டெங்கு பாதிப்பைக் குழைவாகக் காட்டிவிட்டு, தற்போது பிரச்னை எழுத்ததும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவு என்பதாகக் காட்ட, ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் மா.சு.

Also Read : கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 50 தொகுதிகளில் வெற்றி பாதிக்கும்! ஆசிரியர் சங்க மூத்த தலைவர் ஐபெட்டோ அண்ணாமலை எச்சரிக்கை!

முன்னதாக, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் பேசுபொருளான ‘Fomepizole’ மருந்து உண்மையில் நம்மிடம் இல்லை. இல்லாத மருந்தை ‘இருக்கு’ என்று சொல்லிவிட்டு, பின்பு, ‘இதன் தயாரிப்புப் பணி நிறுத்தப்பட்டு நீண்ட நாள்களாகின்றன. மும்பையில் ஒரே ஓர் இடத்தில் விற்பனைக்கு இருந்த இந்த மருந்தை வாங்கி வந்தோம்’ என்று மாற்றிப் பேசினார்.

சமீபத்தில்கூட கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டபோது, ‘தாக்கிய நபர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்’ என்று கூறிவிட்டார் அமைச்சர். உண்மையில், தாக்கியவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான். இப்படி, அவரது நிர்வாகக் குளறுபடிகள், உளறல்கள், அந்தர்பல்டிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. துறையை நிர்வகிக்க முடியாமல் அமைச்சர் திணறி விழிபிதுங்குவது, வெட்ட வெளிச்சமாகியிருகிறது” என்றனர்.

Minister Ma. Subramanian

“அமைச்சரின் செயல்பாடுகளைக் கண்காணிப்பாரா முதல்வர்?”

இறுதியாக, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்டோம் ‘திமு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மக்கள் நலன் சார்ந்து ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம். அரசின் மீது காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சியினர் அவதூறு கிளப்புகிறார்கள். அதற்கெல்லாம் எங்கள் செயல்பாடுகளின் மூலமாக பதிலளித்து வருகிறோம்” என்றார்.

தனது துறையின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். ஆனால், தொடர்ந்து நிகழும் மரணங்களும், பாதிப்புகளும், பிரச்னைகளும், குழப்பங்களும் சுகாதாரத்துறையின் நிர்வாகச் சீர்கேட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. வலுவான கட்டமைப்பைத் தமிழகம் கொண்டிருந்தாலும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை என்பது பெரிய அளவில் அந்தக் கட்டமைப்பையே சிதைத்துக் கொண்டிருக்கிறது.

Tamil Nadu’s Chief Minister M.K Stalin

தடைசெய்யப்பட வேண்டிய மருந்துகள் பொதுவெளியில் இன்னும் விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டவுடன், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டிருக்கிறார்கள். இதுதான் பிரச்னைக்கான தீர்வா… கோடிக்கணக்கான மக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவரும் ஒரு துறையின் பிரச்னைகளின் மீது, எப்படி ஓர் அமைச்சர் அக்கறையில்லாமல் இருக்க முடியும்? இனியாவது சுதாரிப்பாரா மா.சு… அவரின் செயல்பாடுகளைக் கண்காணிப்பாரா முதல்வர்?

நன்றி – ஜுனியர் விகடன்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry