தினசரி சமையலில் நாம் பயன்படுத்தும் முக்கியமான இரண்டு பொருட்கள் தான் உப்பும், சர்க்கரையும். அப்படிப்பட்ட உப்பு மற்றும் சர்க்கரை குறித்த ஒரு அதிர்ச்சிகரமான செய்தி தற்போது வெளிவந்துள்ளது.
இந்தியாவின் ஒவ்வொரு பிராண்டு உப்பு மற்றும் சர்க்கரையிலும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மைக்ரோபிளாஸ்டிக்குகள் 5 மிமீ விட்டம் கொண்ட மிகச்சிறிய துகள்கள். இவை பெரிய பிளாஸ்டிக் குப்பைகளின் முறிவால் அல்லது தயாரிக்கும் பொருட்களில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த சிறிய துகள்கள் நமது சுற்றுச்சூழலில் பரவலாக உள்ளன. அதுவும் இவை கடல்கள், ஆறுகள், மண் மற்றும் காற்றிலும் காணப்படுகின்றன.
Source : Microplastics in Salt and Sugar – Toxics Link Study Report.
இந்த ஆய்வை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனமான டாக்ஸிக்ஸ் லிங்க்(Toxics Link) நடத்தியுள்ளது. சராசரி இந்தியர் நாளொன்றுக்கு 10.98 கிராம் உப்பை உட்கொள்வதாக ‘டாக்ஸிக் லிங்க்’ ஆய்வறிக்கை கூறுகிறது. உலக சுகாதார நிறுவனம் சொல்லும் அளவைவிட இது இரு மடங்கு அதிகம். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அளவுகோல்களின்படி, சராசரியாக ஒரு மனிதர் நாளொன்றுக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பு உட்கொள்ள வேண்டும். நாளொன்றுக்கு 10 ஸ்பூன் சர்க்கரையை உட்கொண்டால், ஒரு சராசரி இந்தியர் ஆண்டுக்கு 18 கிலோ சர்க்கரையை உட்கொள்வதாகப் பொருள்.
இந்த ஆய்வில் இந்தியாவில் விற்பனை செய்யும் பல்வேறு உப்பு மற்றும் சர்க்கரைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டன. அதில் தான் அதிர்ச்சியே காத்திருந்தது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து உப்பு மற்றும் சர்க்கரையிலும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மைக்ரோபிளாஸ்டிக்குகள் அனைத்தும் மிகவும் ஆபத்தானவை. குறிப்பாக இவை புற்றுநோயை உண்டாக்கும்.
இந்த ஆய்வானது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டதாகவும், தமிழ்நாட்டில் தூத்துக்குடி, மரக்காணம் உள்பட பல பகுதிகளில் உப்பு, சர்க்கரை தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் டாக்ஸிக்ஸ் லிங்க் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் கடல் உப்பு, கிணற்று உப்பு (Borewell) ஆகியவற்றில் இருந்து தலா 7 மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருந்துள்ளன. மரக்காணம் மற்றும் பரங்கிப்பேட்டையில் நடத்தப்பட்ட ஆய்வில், உப்பு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள், கடைகளில் விற்கப்படும் உப்புகள் என தலா 6 மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், பிளாஸ்டிக் நார்கள் (fibre) இருந்ததாக கட்டுரை தெரிவிக்கிறது.
டேபிள் உப்பு, கல் உப்பு, கடல் உப்பு, உள்ளுர் மூல உப்பு உட்பட கிட்டத்தட்ட 10 வகையான உப்புக்களும், 5 வகையான சர்க்கரைகளும் சோதனை செய்யப்பட்டன. இவை அனைத்திலுமே மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. அதுவும் இந்த துகள்களின் அளவுகளானது 0.1 மி.மீ முதல் 5 மி.மீ வரை இருக்கும். உப்பு மாதிரிகளை சோதனை செய்ததில் ஒரு கிலோ உப்பில் 6.71 முதல் 89.15 துண்டுகள் மைக்ரோபிளாஸ்டிக்குகள் கலந்திருந்தது.
Also Read : தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!
சமையலில் பயன்படுத்தும் 1 கிலோ அயோடின் உப்பில் 89.15 துண்டுகளும், 1 கிலோ ஆர்கானிக் கல் உப்பில் 6.70 துண்டுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல் 1 கிலோ சர்க்கரையில் 11.85 முதல் 68.25 துண்டுகள் வரை மைக்ரோபிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆய்வை நடத்திய டாக்சிஸ் லிங்க் அமைப்பின் நிறுவனர் ரவி அகர்வால் கூறும்போது, “பிளாஸ்டிக் நுண் துகள்கள் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவியல்பூர்வமாக ஆய்வு நடத்தி விரிவான அறிக் கையை வெளியிட்டு உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென்று அரசு வலியுறுத்தி, ஆங்காங்கு தடைசெய்யப்பட், பிளாஸ்டிக் இல்லாத சூழலில் வாழ முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், உண்ணும் உணவிலேயே பிளாஸ்டிக்குகள் இருப்பது மிகப்பெரிய கவலையாக உள்ளது. ஏனெனில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். உணவு, தண்ணீர், காற்று வழியாக மனித உடலுக்குள் பிளாஸ்டிக் நுண்துகள்கள் நுழைகின்றன. இவை மனிதர்களின் நுரையீரல், இதயம், ரத்த நாளங்களில் படியக்கூடும்.
மைக்ரோபிளாஸ்டிக்குகள் ஈஸ்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹர்மோன்கள் மற்றும் நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைத்து, பல மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வைக்கலாம். குறிப்பாக இந்த மைக்ரோபிளாஸ்டிக்குகள் சர்க்கரை நோய், பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் பிசிஓஎஸ் மற்றும் கருவுறுதல் பிரச்சனைகள் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். பிளாஸ்டிக் நுண் துகள்களால் நுரையீரல் பாதிப்பு, மாரடைப்பு, உடல் எடை கூடுதல், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
ஆய்வுகளின் படி, மைக்ரோபிளாஸ்டிக்குகள் நீண்ட காலமாக நாளமில்லா சுரப்பியை சீர்குலைத்து வந்தால், அது இதய நோய்கள், வாதம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உடல் பருமன் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். மேலும் இவை குடல் ஆரோக்கியத்திலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவரது குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் அது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, மேலும் பல நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும்.
இந்த பிளாஸ்டிக் துகள்கள், மூன்று வழிகளில் மனித உடலுக்குள் செல்கிறது. ஒன்று, நேரடியாக உள்ளே செல்லுதல், மூச்சு இழுத்தல் மற்றும் நேரடியாகத் தோல் மூலம் செல்வது ஆகியவற்றின் மூலம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எச்சில், நுரையீரல், கல்லீரல், தாய்ப்பால், வயிற்றிலுள்ள குழந்தை, ஆகியவற்றில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்களின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry