பெரும் சிக்கலில் செந்தில்பாலாஜி! பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!

0
56

போக்குவரத்து துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரணை நடத்தவும், தேவையெனில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில்பாலாஜி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இவை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே, இந்த மோசடி மூலமாக சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

Also Read : கோவையை பாலைவனமாக்கும் கனிமவளக் கொள்ளை! அரசு செய்ய வேண்டியது என்ன?

இந்த வழக்கு விசாரணையின்போது செந்தில்பாலாஜி தரப்பில், சென்னை குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ள மோசடி வழக்குகளின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது என்றும், அமலாக்கத் துறை கோரிய ஆவணங்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது என்றும் வாதிடப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி பொறியாளர் தர்மராஜ் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வழங்க முன்னாள் அமைச்சர் முடிவெடுத்ததன் காரணமாக தகுதியான மாணவர்கள் பணியில் சேர முடியவில்லை. தங்களது மதிப்பெண் குறைத்து காட்டப்பட்டது. சமூகத்தை பாதிக்கும் குற்றங்கள் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

ஆனால், குற்றத்தின் வீரியத்தை உணர்ந்தும் அரசுத் தரப்பு இந்த வழக்கில் சமரசத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அதேபோல, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி ஒய்.பாலாஜி, ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் கார்த்திகை ராஜன் ஆகியோர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Also Read : பள்ளிக் கல்வித்துறைக்கு மீண்டும் இயக்குநர் பதவி! ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு முழுநேரத் தலைவர்! தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

இந்த மனுகள் பல கட்டங்களாக விசாரிக்கப்பட்டு, சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது எனக் கூறி, பண மோசடி தொடர்பான வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த முறைகேடு தொடர்பான வழக்கை மீண்டும் தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரிக்கவும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், செந்தில்பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதியாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், வேலைக்காக லஞ்சம் பெற்ற விவகாரத்தில் செந்தில்பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியாத சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் கார்த்திகை ராஜன் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதேவேளையில் இந்த லஞ்ச விவகாரத்தில் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்த அனுமதி கோரியும், ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள செந்தில்பாலாஜிக்கு அனுப்பிய சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Also Read : 4 ஆண்டுகளில் டீசல் வாகனங்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு எரிசக்தி மாற்றத்திற்கான குழு பரிந்துரை!

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனுவுக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை (Job Racketing Wing), சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை உதவி ஆணையர் சுரேந்திரன், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை ஆய்வாளர்கள் ரெஜினா மற்றும் கலாராணி ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது. அதேநேரம், இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இணைத்து விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வும் ஏற்படுத்தப்பட்டது.

அதன்படி நீதிபதிகள் கிருஷ்ணமுராரி, ராமசுப்பிரமணியன் அடங்கிய சிறப்பு அமர்வில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு அமர்வு வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில், நீதிபதிகள் இன்று பிறப்பித்த தீர்ப்பில், “அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக போக்குவரத் துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக, தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். தேவையெனில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கலாம். செந்தில்பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலக்கத் துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. செந்தில்பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய உத்தரவிட்டும், அதனை செயல்படுத்தாத சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறை மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிய மனு முடித்து வைக்கப்படுகிறது.”இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry