தமிழக வீரர்களை தேர்வு செய்வதில் பிசிசிஐ பாரபட்சம்! தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு!

0
60
Badrinath & Natarajan | Former India cricketer Badrinath has questioned why Natarajan was not picked in the T20 World Cup squad.

இந்திய அணியைத் தேர்வு செய்யும்போது தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மீது பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மட்டுமின்றி, சன்ரைசர்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிவரும் தமிழக வீரர் நடராஜன் ரிசர்வ் வீரராக கூட தேர்வுசெய்யப்படாதது சர்ச்சையாக மாறியுள்ளது. நடராஜனை ஏன் தேர்வு செய்யவில்லை என பத்ரிநாத்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

2024-ம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில், மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 29 ஆம் தேதி வரை உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ நேற்று அறிவித்துள்ளது. இதில் நடப்பு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழக வீரர்களான நடராஜன், தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன் ஆகியோரது பெயர்கள் இடம் பெறவில்லை.

இந்நிலையில் அணித் தேர்வு குறித்து இந்திய முன்னாள் வீரரான பத்ரிநாத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். Star Sports Tamil சேனலில் பேசியிருக்கும் பத்ரிநாத், “உலகக்கோப்பைக்கான வீரர்கள் தேர்வில் நிறைய கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டும். மற்ற வீரர்கள் ஒரு மடங்கு perform செய்தால் உலகக்கோப்பைக்குள் சென்றுவிடலாம், ஆனால் தமிழ்நாட்டு வீரர்கள் மட்டும் ஏன் இரண்டு மடங்கு உழைத்தாலும் உலகக்கோப்பைக்கு எடுத்துசெல்லப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள்? ஏன் தொடர்ந்து தமிழ்நாடு வீரர்கள் மட்டும் பாதுகாக்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள்? இந்த பாரபட்சம் ஏன்?

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இடம்பெற்றிருக்க வேண்டும்.  பிற மாநில வீரர்களைப் போல தமிழ்நாட்டு வீரர்களுக்கு ஏன் கூடுதல் ஆதரவு கிடைப்பதில்லை? தனிப்பட்ட முறையில் நானும் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இதனை யாரும் வெளிப்படுத்துவதில்லை என்பதால் நான் பேசுகிறேன். 500 விக்கெட் வீழ்த்திய அஸ்வினை கேள்வி கேட்கிறார்கள். டெஸ்ட் வரலாற்றில் சிறந்த டாப் 5 தொடக்க வீரர்களில் முரளி விஜய் உள்ளார். அவர் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால் கேள்வி கேட்கிறார்கள். அணித் தேர்வு குறித்து கேள்விகள் ஏன் எழவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

டி. நடராஜன்

டி20 உலகக்கோப்பைக்கு அர்ஷ்தீப், கலீல் ஆகியோர் தேர்வாகியுள்ள நிலையில், நடராஜனை தேர்வு செய்யாதது ஆச்சரியம் அளிப்பதாக பத்ரிநாத் தனது எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜன் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற தகுதியானவர் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் கூறியுள்ளார். ரசிகர்களும் நடராஜனுக்காக ஆதரவு குரல் கொடுத்துவருகின்றனர். மே 25ம் தேதிவரை அணியை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் உள்ளது என கூறப்படும் நிலையில், இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படுமா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர்  இடம்பெற்றிருக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry