ரத்தம் சிந்தி சிறைக்குச் சென்றவனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்க மாட்டாங்க என ஆதங்கப்பட்ட மூத்த நிர்வாகியை, மு.க. ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார். இது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலையை அடுத்துள்ள சாவல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிஞர் சுந்தரேசன். தி.மு.க–வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக–வில் பயணிக்கிறார். முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டியிடம் உதவியாளராகத் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பின்னாளில் தி.மு.க–வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியாக வலம்வந்தார். சாவல்பூண்டி ஊராட்சித் தலைவராக தொடர்ந்து ஆறு முறை தேர்வாகியிருக்கும் சுந்தரேசன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.
இந்நிலையில், சாவல்பூண்டி சுந்தரேசன், கட்சி நிர்வாகி ஒருவரிடம் செல்ஃபோனில் பேசிய உரையாடல் பதிவு வெளியானது. அதில், கருணாநிதி புள்ளைக்கும் சேர்த்துதான் சொல்றேன். ரத்தம் சிந்தி சிறைக்குச் சென்றவனுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்க மாட்டாங்க. இது கட்சியா, இல்லை அடிமைச் சாசனமா எழுதிக் கொடுத்துட்டோமா? என்று கேள்வி எழுப்புகிறார். அத்துடன், எ.வ.வேலு, தனது மகன் கம்பனை கட்சியில் முன்னிறுத்துவது பற்றியும் அவர் ஆதங்கப்படுகிறார். எ.வ. வேலுவின் சொத்துப்பட்டியலையும் அவர் விவரிக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்து, சாவல்பூண்டி சுந்தரேசனை கட்சியிலிருந்து ஓரங்கட்ட முடிவு செய்த எ.வ. வேலு, அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமைக்கு அழுத்தம் கொடுத்தார். அதோடு, சாவல்பூண்டி சுந்தரேசன் கூறியிருந்த சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். இதையடுத்து, அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் சாவல்பூண்டி சுந்தரேசன் தற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் முரசொலியில் அறிவிப்பு வெளியானது.
கருணாநிதி குடும்பம் (ஸ்டாலின், அழகிரி, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, முரசொலி மாறன், தயாநிதி மாறன், துர்கா ஸ்டாலின், சபரீசன்) துரைமுருகன், டி.ஆர். பாலு, எ.வ.வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி, கே.என். நேரு, ஆற்காடு வீராசாமி, தூத்துக்குடி பெரியசாமி, ஆலடி அருணா, வீரபாண்டி ஆறுமுகம், ஈரோடு பெரியசாமி, முட்டம் கிருஷ்ணமூர்த்தி, பூண்டி கலைச்செல்வன், என்.வி.என். சோமு, அன்பில் பொய்யாமொழி, தங்கபாண்டியன் போன்று இவர்களின் குடும்ப வாரிசுகளை களமறிக்கியவர்களின் பட்டியலை திமுக–வில் அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும், திமுக–வில் மாவட்ட செயலாளர்களாக கோலோச்சுபவர்கள், அடுத்து தமது வாரிசுகளை களமிறக்கிவிடுவார்கள்.
இதுபற்றி வடமாவட்ட திமுக நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். பெயர் வெளியிட விரும்பாத அவர், “திமுக–வில் நடப்பது வாரிசு அரசியல் அல்ல, குடும்ப அரசியல். கட்சி, கருணாநிதியின் குடும்பத்தாரிடம் உள்ளது. மாவட்டங்களில், செயலாளர்களும், அமைச்சர்களும் அவர்களது வாரிசுகளை மட்டுமே வளர அனுமதிப்பார்கள். எங்களைப்போன்றவர்கள் கடைசி வரை வாழ்க, வாழ்க என முழக்கமிட்டுவிட்டு வீடு போய் சேர வேண்டியதுதான். இதைப்பற்றி முனுமுனுத்தாலே கட்சியை விட்டு நீக்குகிறார்கள். கருணாநிதி மீதான ஈர்ப்பால், திமுக–விலேயே ஊறியதால், வேறு கட்சிக்கு போகும் எண்ணம் எங்களுக்கு வராது. இதுதான் குடும்ப அரசியல் செய்பவர்களின் முதலீடு, என்ன செய்ய” என ஆதங்கத்தோடு முடித்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry