மதுரை தும்பைப்பட்டி சிறுமி மரணம்! காதலனை கைது செய்தது போலீஸ்! உயிரிழப்பு ஏற்படுத்தும் சந்தேகங்கள்!

0
381

மதுரை தும்பைப்பட்டி சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 8 பேரை கைது செய்துள்ள போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைபட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் – சபரி தம்பதியின் 17 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த நாகூர் கனி(29) என்ற இளைஞனுடன் கடந்த மாதம் 14-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல் பரவியது. மகள் கடத்தப்பட்டுவிட்டதாக பெண்ணின் பெற்றோர் மேலூர் காவல்நிலையத்தில் அடுத்த நாள் புகார் அளித்தனர்.

கடந்த மாதம் 21-ந் தேதி பெண்ணை காணவில்லை என்ற பிரிவில் வழக்குப் பதிந்த போலீஸார், அவரைத் தேடி வந்தனர். தும்பைபட்டி கிராமத்தை சேர்ந்த சுல்தான் என்பவரின் மகன் நாகூர் கனி என்பவரை அந்தச் சிறுமி காதலித்ததாகவும் அவருடன் சென்றிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி காலை நாகூர் கனியின் தாயார் மதினா பேகம், சிறுமியை மயக்க நிலையில் அவருடைய தாயார் வீட்டில் விட்டுச் சென்றதாகத் தெரிகிறது. தனியார் மருத்துவமனைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மேல் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் அழைத்து சென்றுள்ளனர்.

இதனூடே, மாவட்ட ஆட்சியரின் முகவரியிடப்பட்ட மனுவில் சிறுமியின் தாயார் சபரி குறிப்பிட்டுள்ளதன் சாராம்சம்:- “எனது கணவர் பழனியப்பன் மனநலம் பாதிக்கப்பட்டவர். சுயநினைவற்ற நிலையில் தனது மகளை வீட்டு வாசலில் போட்டுவிட்டுச் சென்றனர். மகளின் உடலில் காயங்கள் இருந்தன. போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகள் கொடுத்து வன்புணர்ச்சி செய்துள்ளார்கள்” என்று கூறியுள்ளார்.

போலீஸார் மூன்று தனிப்படைகள் அமைத்து, திருப்பூர், மதுரை, சென்னை என பல்வேறு இடங்களில் நாகூர் கனியை தேடிய நிலையில், நேற்று அவரை கைது செய்தனர். அந்த சிறுமியை காதலித்து வந்ததாகவும், நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளுக்குச் சென்று இருவரும் கணவன் – மனைவி போல வாழ்ந்ததாகவும் விசாரணையில் நாகூர் கனி கூறியுள்ளார்.

மேலும், பிரச்சனை ஏற்படும் என தாயார் எச்சரித்ததால், தற்கொலை செய்துகொள்ளலாம் என இருவரும் முடிவெடுத்து, மூன்று எலி பேஸ்ட் வாங்கியதாகவும், சிறுமி எலி மருந்தை சாப்பிட்ட நிலையில், தான் சாப்பிடவில்லை எனவும் நாகூர் கனி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், எலி மருந்து சாப்பிட்டதை மறைத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். பின்னர்தான் தனது தாயார் மூலம், சிறுமியை அவரது குடும்பத்திடம் ஒப்படைக்க சொல்லியுள்ளார். சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்த நிலையில், கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படவில்லை என்றும் சிறுமியின் உடலில் காயங்கள் இல்லை என்றும் மருத்துவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், பள்ளிபாளையத்தில் தலைமறைவாக இருந்த நாகூர் கனி, அவருக்கு உதவியாக இருந்த பிரகாஷ், பெருமாள் கிருஷ்ணன், ராஜாமுகமது, சாகுல் ஹமீது, நாகூர் கனியின் தாயார் மதினா பேகம், நாகூர் கனியின் தந்தை சுல்தான் அலாவுதீன் உறவினர் ரம்ஜான் பேகம் என்ற கண்ணம்மாள் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

உயிரிழந்த சிறுமியுடன், நாகூர் கனி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதால், போக்சோ வழக்காக போலீஸார் பதிவு செய்துள்ளனர். சிறுமி உயிரிழந்ததால் மேலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்ட அவரது கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறினார்.

மறியல் போராட்டத்தில் ஸ்ரீதர் வாண்டையார்
மதுரை மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன்

சிறுமிக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு, நாகூர் கனி மட்டும் எலி மருந்தை சாப்பிடாதது ஏன் என்று சமூக நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர். கொலை செய்யும் நோக்கில் சிறுமிக்கு எலி மருந்து கொடுத்திருக்கலாம் என்பதால், இறப்பின் பின்னணி குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry