தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தனது அறிவை உபயோகிக்காமல் இயந்திரத் தனமாக சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விமர்சித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிதரண் என்பவர், உத்திரமேரூர் அருகேயுள்ள எடமச்சி கிராமத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தில் குவாரி ஒன்றை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடமிருந்து 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெற்றிருந்தார்.
Also Read : சுற்றுச்சூழலும் டூத் பிரஷ்களும்! பல் துலக்கிகளால் மட்டும் உண்டாகும் ஞெகிழிக் கழிவின் எடை 60 கோடி கிலோ!
அனுமதி பெற்றிருந்த இடத்திற்கு அருகிலேயே இயற்கை விவசாயம் செய்து வந்த பணி நிறைவுபெற்ற ராணுவ அதிகாரியான அர்ஜூன் கோபாலரத்னம் என்பவர், குவாரிக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து 2022ஆம் ஆண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், குவாரிக்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பத்தில் பல்வேறு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் மறைக்கப்பட்டு உள்ளது; குறிப்பாக குவாரிக்கு அருகிலேயே இருக்கும் அனம்பாக்கம், நெற்குன்றம் ஆகிய கிராமங்களை விண்னப்பதாரர் தனது விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடவில்லை, இதனால் அக்கிராமங்களில் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, குவாரி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்திற்கு அருகிலேயே இருக்கும் எடமச்சி காப்புக் காடுகள், எடமச்சி ஏரி ஆகியவற்றையும் விண்ணப்பத்தில் குறிப்பிடாமல் விண்ணப்பதாரர் ஏமாற்றியிருப்பதாகவும் மனுதாரர் குற்றஞ்சாட்டியிருந்தார். எடமச்சி ஏரியானது காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே மூன்றாவது பெரிய ஏரி;
இது பல வலசைப் பறவைகள் வந்துபோகும் இடமாகும்; குவாரி நடவடிக்கையால் ஏரி பாதிப்படையக் கூடும்; ஏரியிலிருந்து 50மீ தொலைவிலேயே குவாரி அமைக்கப்படுவதால், இத்திட்டத்திற்கு வழங்கப்படட் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதும் மனுதாரர் முன்வைத்த முக்கியக் கோரிக்கையாகும்.
Also Read : துரத்தப்பட்ட ஃபேவரைட் நீலக்குருவி! உள்ளே வந்த ‘X’! டிவிட்டர் லோகோவை திடீரென மாற்றிய எலோன் மஸ்க்!
நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு இந்த மனுவை விசாரித்த நிலையில், மனுதாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிருபணமானது. 20.07.2023 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், இந்தக் குவாரிக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
“மிகப்பெரிய ஏரி, விவசாய நிலங்கள், காப்புக் காடுகள் இருக்கின்ற ஒரு இடத்தில், உரிய நேரடி ஆய்வுகள் மேற்கொள்ளாமல், விண்ணப்பதாரர் சமர்ப்பித்த தகவல்களின் அடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியிருக்கக் கூடாது, தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவும் தனது அறிவைப் பயன்படுத்தாமல், இயந்திரத்தனமாக சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்குவதற்கு இந்த நிகழ்வு சிறந்த உதாரணம் என அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
வறட்சி ஏற்படும் போது, காடு மற்றும் காடு அல்லாத பகுதிகள் இரண்டையுமே அது பாதிக்கிறது. விவசாயம் பொய்த்துப் போகும்போது, காடு மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது. காட்டின் விளைபொருட்கள் இல்லாமல் போவதால் காட்டை நம்பியிருக்கும் சமூகத்தினர் பாதிக்கப்படுவார்கள். சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிக்கு அருகில் சுரங்கம் தோண்டுவது காட்டை நம்பியிருப்போர் மற்றும் காட்டு விளைபொருட்களை நேரடியாக பாதிக்கும்” எனவும் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
With Input Poovulagu
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry