மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புது பல் துலக்கியை(டூத் பிரஷ்) மாற்றுவது ஆரோக்கியமானது என்று கூறப்படுகிறது. சரி, நாம் உபயோகித்த அந்தப் பல் துலக்கி அதற்குப் பின் என்னவாகிறது என என்றைக்காவது யோசித்திருப்போமா?
அத்தனை பல் துலக்கிகளும் இன்னும் அழியாமல் இருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?
ஆம். தயாரிப்பதற்கு மிக எளிதாகவும், பயன்படுத்துவதற்குச் சுலபமாகவும் உள்ள ‘ஹை டென்ஸிட்டி பாலி-எதிலீன்’ ஞெகிழிப் பல் துலக்கிகளும் அவற்றின் நைலான் நார்களும் பயன்படுத்தித் தூக்கியெறியப்பட்ட நாள் முதல் இன்றுவரை ஒன்றுகூட அழியாமல், இன்னும் அப்படியே இருக்கின்றன: மக்காத பல் துலக்கிகளாகவும், ஓரளவு சிதைந்த ஞெகிழியாகவும், நுண் ஞெகிழியாகவும்!
கிறிஸ்து பிறப்பதற்கு 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே பாபிலோனியர்கள் ஒருவகை வாசனைக் குச்சிகளின் கூர்மையான முனையைக் கொண்டு பற்களில் சிக்கிய உணவை வெளியே எடுக்கவும், மறு முனையைக் கடித்துப் பல் துலக்கவும் உபயோகித்ததாகக் குறிப்புகள் காணப்படுகின்றன. சீனாவில் டாங் வம்ச ஆட்சியின்போதுதான் (பொ.ஆ. 619-907) பல் துலக்கி தற்போதைய வடிவத்தைப் பெற்றது. விலங்கு எலும்பு அல்லது மூங்கில் குச்சியில் ஓட்டைகளிட்டு சற்றுக் கடினமான காட்டுப்பன்றி முடிகளைச் சொருகி பல் துலக்கிகளாக அப்போது உபயோகித்துள்ளனர்.
17ஆம் நூற்றாண்டில் பயணிகள் மூலமாக சீனாவிலிருந்து ஐரோப்பா சென்ற பல் துலக்கிகள் அங்கே மெதுவாகப் புழக்கத்துக்கு வரத் தொடங்கின. 1780இல் வில்லியம் ஆடிஸ் எனும் இங்கிலாந்து சிறைக்கைதி, மாட்டு எலும்பில் துளையிட்டு, அதில் பன்றி முடிகளைப் பசையால் ஒட்டி துலக்கிகளைத் தயாரிக்க, அதைத் தொடர்ந்து 1844ஆம் ஆண்டு டாக்டர் மேயர் ரைன் என்பவர் மூன்று வரிசை கொண்ட துலக்கிகளைத் தயாரித்துள்ளார். இதற்குக் காப்புரிமை பெற்ற சில நிறுவனங்கள், 1885இல் பல் துலக்கிகளை அதிக அளவில் தயாரித்து சந்தைப்படுத்தும் வரைகூட பெரிய ஆபத்து இருக்கவில்லை. ஆனால், 1938ஆம் ஆண்டு நைலான் முனைகளைக் கொண்ட ஞெகிழிப் பல் துலக்கி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே பிரச்சினைகளும் தொடங்கின.
ஒரே ஒரு பல் துலக்கி என்ன மோசமான விளைவை ஏற்படுத்தி விடும் என்று நினைப்பவர்களுக்கு ஒரு சிறிய கணக்கு. ஓர் ஆண்டில் உலகம் முழுவதும் 800 கோடி மக்கள் உபயோகிக்கும் பல் துலக்கிகளின் எண்ணிக்கை 3,000 கோடிகளைத் தாண்டக்கூடும். ஒரு பல் துலக்கியின் சராசரி எடை 20 கிராம். இந்தக் கணக்கின்படி, வெறும் பல் துலக்கிகளால் மட்டும் உண்டாகும் ஞெகிழிக் கழிவின் எடை 60 கோடி கிலோ.
இதே அளவில் உபயோகிக்கப்படும் பற்பசைக் குழல்களின் அளவையும் சேர்த்துக் கணக்கிட்டால், 120 கோடி கிலோ குப்பை. பல் துலக்குவதன் மூலம் மட்டும் இந்தப் பூமியில் ஒவ்வோர் ஆண்டும் இவ்வளவு கழிவு சேர்கிறது. இந்த அழிவற்ற ஞெகிழி ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள், பறவைகளின் அழிவுக்குக் காரணமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, இதுவரை நிலத்திலும், நீரிலும் அழியாமல் உலவிக்கொண்டிருக்கும் ஞெகிழிக் கழிவை நாமும் உட்கொண்டோ பருகியோ வருகிறோம் என்கிற அச்சுறுத்தும் தகவலையும் கவனித்தாக வேண்டும்.
இதுவரை நாம் உற்பத்தி செய்துள்ள கோடிக்கணக்கான கிலோ ஞெகிழியில் 11 சதவீதம் எரிக்கப்பட்டுள்ளது. 9 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 80 சதவீதம் இன்னமும் நிலத்தடியிலும், நீருக்குள்ளும் அழியாமல் உலவிக்கொண்டிருக்கிறது. இந்த மக்காத ஞெகிழி சூரிய ஒளி, காற்று, நீர் அல்லது வெப்பத்தில் 5 மி.மீ. அளவுக்கும் குறைவான நுண்ஞெகிழித் துகள்களாக மாறி உணவிலும், நீரிலும் கலந்துவிட்டது. வெறும் கண்ணுக்குப் புலப்படாத இன்னும் சிறிய நுண்ஞெகிழித் துகள்கள், சுவாசிக்கும் காற்றிலும் கலந்துள்ளன.
இந்த சிறிய துகள்கள் எளிதாகச் செயற்கை ரசாயனங்கள், உரங்கள், சேர்க்கைகளை ஈர்த்துக்கொண்டு, ஓர் உயிர் மென்படலமாக மாறிவிடுகின்றன. மனிதர்களின் நுரையீரல், குடல், எலும்புகள், நரம்புகள், ரத்த நாளங்கள் முக்கியமாக என்டோகிரைன் ஹார்மோன்கள் ஆகியவற்றில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி, குழந்தைப்பேறின்மை தொடங்கி புற்றுநோய் வரை பல்வேறு நோய்களுக்கும் காரணமாக மாறுகின்றன. அதே வேளை, இதுபோன்ற பாதிப்புகளால் பல்லாயிரக் கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் அழிந்தே விட்டன. நுண்ஞெகிழி சிறிய உயிரினங்களைக் கொன்றழித்து, பெரிய உயிரினங்களில் ஆரோக்கியக் குறைபாட்டை விளைவிக்கிறது.
புதிய ஞெகிழிப் பொருள்களை முற்றிலும் தடைசெய்வது, ஏற்கெனவே உள்ள ஞெகிழிக் கழிவை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது மட்டுமே இதற்கான தீர்வு. இந்த வழிமுறைகளைப் பின்பற்றி ‘ஜீரோ வேஸ்ட் ட்ரெய்ன் (Drain)’ எனப் பல நாடுகளும், பல்வேறு அமைப்புகளும் ஞெகிழியைப் புறக்கணித்து வருகின்றன. அந்த வகையில் பல் துலக்கியில் ஞெகிழியைத் தவிர்த்து, நைலான் வகை நார்களை ஆள்காட்டி விரலில் மாட்டிக்கொண்டு பல் துலக்கும் முறை பிரபலமாகிவருகிறது.
இயற்கையை மீறும் மனிதனை மீண்டும் இயற்கையுடன் இயைந்து வாழ அழைக்கின்றன இந்த முயற்சிகள். காலை எழுந்தவுடன் பல் துலக்கி, பற்பசை என்று ஞெகிழியைத் தொடாமல் மூங்கில் துலக்கி அல்லது வேப்பங்குச்சி/ ஆலங்குச்சிகளைப் பயன்படுத்தத் தொடங்கினால், 800 கோடி பேர் உபயோகிக்கும் 800 கோடி பல் துலக்கிகளையும், பற்பசை குழல்களால் உருவாகும் ஞெகிழிக் கழிவையும் குறைக்கலாம். பூமியையும் காக்கலாம்.
கட்டுரையாளர் – டாக்டர் சசித்ரா தாமோதரன், மகப்பேறு மருத்துவர்.
நன்றி – இந்து தமிழ் திசை
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry