தமிழனின் அடையாளத்தை அழிக்கும் ‘மூப்பில்லா தமிழே தாயே’! ஏன் இப்படிச் செய்தீர்கள் ஏ.ஆர்.ரஹ்மான்?

0
841

ஏ.ஆர். ரஹ்மான் தயாரித்து நடித்துள்ள இசை ஆல்பம் ‘மூப்பில்லா தமிழே தாயே’, யூ டியூபில் வெளியாகி உள்ளது. தமிழின் தொன்மையையும், பெருமையையும் சொல்லும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்த வீடியோவை பார்க்கும்போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. முழுக்க முழுக்க வணிகநோக்கில் எடுக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. எந்த விதத்திலும் தமிழின் பெருமைகளை அது பறைசாற்றவில்லை. தேர்ந்த ஒரு வியாபாரியின் கைவண்ணங்கள் தான் வீடியோவெங்கும் விரவியிருக்கிறது.

தானே தயாரித்து இருப்பதால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஊதியம் வழங்கப்பட்டிருக்க மாட்டாது. அவருடைய மகன் அமீர், மகள் கதீஜா ஆகியோர் நடித்துள்ளனர். அவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டிருக்கமா? என்பது கேள்விக்குறியே. பின்னணி பாடகியும், ஜிவி பிரகாஷின் மனைவியுமான சைந்தவியும், ஏ.ஆர்.ரஹ்மானும் உறவினர். பிறகென்ன….! போதாதென்று விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த ரக்ஷிதா, பூவையார் போன்றவர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சொற்ப விலைக்கு, இன்னும் சொல்லப்போனால் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பேனரில் முகம் தெரிந்தால் போதும் என்றே அவர்களும் நினைத்திருப்பார்கள்.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தார்போல், வீடியோ முழுவதும் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம், ஷீன்லாக் பெயிண்ட், காவேரி மருத்துவமனை, ZOMOTO, I STEEL ஐ ஸ்டீல் முறுக்குக் கம்பிகள், MASSEY FERGUSION என்ற அமெரிக்க வேளாண் உழுகருவிகள் உற்பத்தி நிறுவனத்தின் டிராக்டர்கள், ராயல் என்பீல்ட் நிறுவனத்துடன் போட்டி போட முடியாமல் தவிக்கும் JAWA BIKE மற்றும் GOLD WINNER REFINED OIL போன்றவற்றின் விளம்பரங்கள் நீக்கமற நிறைந்துள்ளன. தமிழை போற்றிப்பாட எதற்கு இதெல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான்?

தமிழ் பற்றி சிறப்புற எழுதப்பட்டிருக்கும் வரிகளை (பாடலாசிரியர் தாமரை இப்பாடலை எழுதியிருக்கிறார்) உங்கள் குரல் வழியே கேட்கத் தானே இந்த பாடலை கேட்க விரும்பினோம். வேண்டாத விருந்தாளிக்கு மீந்துபோன உணவினை படையிலிட்டது போல், நிலைய வித்வான்களைக் கொண்டு, விளம்பரங்கள் துருத்திக் கொண்டு தெரியும்படியான இதனைப் பார்க்கவா தமிழ் மொழியை பயன்படுத்திக் கொண்டீர்கள்?

இதுமட்டுமா? தமிழின் அடையாளத்தைச் சொல்வதற்கு உங்களுக்கு என்னவெல்லாம் பயன்பட்டிருக்கிறது? தம்புராவை ஏந்திக்கொண்டு சாதகம் செய்பவர்கள், தொடையைத் தட்டி தாளக்கணக்கோடு கர்நாடக சங்கீதம் பயில்பவர்கள், அடவுகள் பிடிக்கும் பரத நாட்டியக் கலைஞர்கள்…! இவர்கள் தான் தமிழா? இவர்கள் தான் தமிழரா? இதுதான் மூப்பில்லா தமிழுக்கு நீங்கள் கொடுக்கும் விளக்கமா? நாட்டுப்புறக் கலைஞர்கள் என்று சிலரைக் காட்டுகிறீர்கள். எப்படி? தமிழ் மண்ணுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஆடை அலங்காரங்களுடன் வந்து போகிறார்கள். பரத நாட்டியக் கலைஞர்களை காட்டும்போது அடையாள அழிப்பு இல்லாமலும், நாட்டுப்புறக் கலைஞர்களை காட்டும்போது அடையாள அழிப்போடு காட்டுவதும் எந்த விதத்தில் சரி?

MAAJJA என்ற உங்களது இசை ஆல்பத்தின் வழியாக இந்த பாடலை வெளியிட்டுள்ளீர்கள். தனிப்பட்ட ஆல்பங்கள் வெளியாவது வரவேற்க தக்கது தான். கடந்த ஆண்டு MAAJJA வழியாக வெளியான எஞ்சாயி எஞ்சாமிக்குப் பிறகு மொத்தம் 26 பாடல்கள் வெளியாகி விட்டது. ஆனால் ஒன்றுகூட தமிழர்களால், இசை ரசிகர்களால் வரவேற்கப்படவில்லை. எப்படி வரவேற்பைப் பெறும்? எஞ்சாயி எஞ்சாமி பாடலில் இருந்தது தமிழ்க் கலைஞர்கள். ஆனால் MAAJJA வெளியிட்ட பாடல்களில் எத்தனைப் பேர் தமிழர்கள்? இந்த மண்ணோடு ஒட்டாத ஒன்று எப்படி வெற்றி பெறும்? வேறு வழியின்றி உங்கள் நிறுவனத்தை வளர்த்தெடுக்க நீங்களே களமிறங்கி விட்டீர்கள். அதற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட கருப்பொருள் தமிழா?

ஆஸ்கர் மேடையில் நீங்கள் தமிழை ஒலிக்கச் செய்தபோது மெய்யுருகிப் போனோம், விழா ஒன்றில் தமிழில் பேசாமல், தொகுப்பாளர் இந்தியில் பேசும்போது நீங்கள் விலகிச் சென்றதைக் கண்டபோது நரம்புகள் முறுக்கேறின. வடஇந்திய நடிகர் சல்மான்கான் மேடையிலேயே உங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியபோது அடுத்த நொடியே அவர் கை குலுக்க முயன்றும் அதை மறுத்து சுயமரியாதையை வெளிப்படுத்திய போது தமிழனாக தலைநிமிர்ந்தோம். ஆனால் இன்று உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தமிழை சந்தைப்பொருளாக்கியிருப்பது சரியா? ஏன் இப்படி செய்தீர்கள் ஏ.ஆர்.ரஹ்மான்?

– க. அரவிந்த்குமார், எழுத்தாளர், ஊடகவியலாளர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry