தங்கள் தளபதியையே கொன்ற ரஷ்ய வீரர்கள்! அதிக உயிரிழப்பால் விரக்தி! உக்ரைன் போரில் பலவீனமடையும் ரஷ்ய வீரர்கள்!

0
406

உக்ரைன் போரில், ரஷ்யத் தரப்பில் ஏற்பட்டுவரும் கடும் உயிரிழப்புகள் காரணமாக அந்நாட்டுப் படையினர் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விரக்தி காரணமாக தங்கள் படைத் தளபதி ஒருவர் மீது ரஷ்ய வீரர்களே ராணுவ டாங்கை ஏற்றிக் கொன்றதாக உக்ரைன் பத்திரிகையாளர் ஒருவர் தகவல் வெளியிட்டிருக்கிறார்.

பிப்ரவரி 24-ல் தொடங்கிய உக்ரைன் மீதான தாக்குதலில், 1.50 லட்சம் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தப் போரில் உக்ரைனைச் சேர்ந்த 1,081 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்திருக்கிறது. எனினும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. உக்ரைன் வீரர்கள் நடத்திவரும் பதில் தாக்குதலில், ரஷ்யத் தரப்பில் 7,000 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள் எனக் கருதப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைனைச் சேர்ந்த பத்திரிகையாளரான ரோமன் ஸிம்பாலியுக்(Ukrainian journalist Roman Tsymbaliuk), ஃபேஸ்க்புக்கில் எழுதிய பதிவில், தலைநகர் கீவின் மேற்குப் பகுதியில் உள்ள மகாரிவ் நகரில், ரஷ்யாவின் 37-வது மோட்டார் ரைஃபிள் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள், தங்கள் தளபதி மீது ராணுவ டாங்கை ஏற்றிக் கொன்றுவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த புதன்கிழமை (மார்ச் 23) இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். தங்கள் தரப்பில் 50 சதவீதம் பேரைப் பறிகொடுக்க நேர்ந்ததால் ஏற்பட்ட கோபத்தில் ரஷ்ய வீரர்கள் அவரைக் கொன்றதாகச் அவரது ஃபேஸ்புக் பதிவு சொல்கிறது.

Russian Army Lt. Gen. Yakov Rezantsev

ரஷ்ய வீரர்கள் தங்கள் தளபதி மீதே ராணுவ டாங்கை ஏற்றிக்கொன்றது உண்மைதான் என மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகளும் உறுதிசெய்திருக்கின்றனர். செச்சன்ய தலைவர் ரமஸான் கடிரோவ், இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் காணொலிப் பதிவில், படுகாயமடைந்த அந்தத் தளபதி காலில் ஏற்பட்ட காயங்களுடன் ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவ முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டது பதிவாகியிருக்கிறது. அதில், செச்சன்ய வீரர் ஒருவர் அந்தத் தளபதியிடம், “உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது? எங்களுடன் பேசுங்கள்” என்று கேட்கிறார். அதற்கு அந்தத் தளபதி, “நான் நன்றாக இருக்கிறேன். எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று பதிலளிக்கிறார். இதன் மூலம் உக்ரைன் போரில் களத்தில் இருக்கும் ரஷ்ய வீரர்கள் தார்மிக ரீதியில் பலவீனமடைந்திருப்பது மட்டும் உறுதி.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry