
3.45 Mins : ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ஆம் தேதியை உலக தண்ணீர் தினமாக கொண்டாடி வருகிறோம். 1992-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த ஐ.நா. சபை மாநாட்டில் “உலக தண்ணீர் தினம்” முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் 1993 முதல், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ந் தேதி “உலக தண்ணீர் தினம்” கொண்டாடப்படுகிறது. நீர்வளத்தைக் காப்பதும், அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் தான் உலக தண்ணீர் தினத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்த ஆண்டு(2025), உலக நீர் தினத்தின் கருப்பொருள் “பனிப்பாறை பாதுகாப்பு”. பனிப்பாறைகளைப் பாதுகாப்பது, முக்கிய நன்னீர் ஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பது, எதிர்கால சந்ததியினருக்கு நீர் பாதுகாப்பை உறுதி செய்வது, காலநிலை மாற்றத்திற்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றை இந்தக் கருப்பொருள் வலியுறுத்துகிறது.

தமிழை தண்ணீரோடு ஒப்பிட்டு “இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்” என்கிறது பிங்கல நிகண்டு. அதாவது, தமிழ் மொழி இனிமையானது, அது நீர் போல மென்மையாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும் என்பது இதன் பொருள். மேலும், கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். ஆனால், கோவிலைவிட குளமே முதன்மை என்றார் குன்றக்குடி அடிகளார்.
முதலில் தோன்றியது கோவில் அல்ல, குளமே. குளம் தோண்டிய மண்ணை நிரப்பியே கோவில்கள் உருவாக்கப்பட்டன. திருவாரூரில் உள்ள கமலாலயம் என்ற குளம் தோண்டிய மண்ணை கரையில் கொட்டி எழுப்பப்பட்டதே தியாகராஜர் கோவிலும், அதைச் சுற்றியுள்ள வீதிகளும் என்று எழுத்தாளர் தங்க. ஜெயராமன் குறிப்பிடுகிறார்.
Also Read : வியக்க வைக்கும் சோழர்களின் நீர் மேலாண்மை! சதய விழா நாளில் மாமன்னன் ராஜராஜசோழனை வணங்குவோம்!
பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் வசதியை பூமி இழந்து வருகிறது. இதுமட்டுமல்ல, பூமியின் மேற்பரப்பில் இருக்கும் நீரில் 97.5 சதவீதம் உப்புத் தன்மையும், 2.5 சதவீதம் மட்டுமே நல்ல தண்ணீரும் உள்ளது. உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.
உலக அளவில் ஆண்டுதோறும் நிலத்தடி நீரை உறிஞ்சுதல், ஒன்று முதல் இரண்டு சதவிகிதம் வரை அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகின்றன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. மத்திய நீர் ஆணையத்தின் தரவுகளின்படி சராசரியாக ஒரு ஆண்டுக்குப் பயன்படுத்தக்கூடிய இந்தியாவின் மொத்த நீர் வளம் சுமார் ஆயிரத்து 123 பில்லியன் கன மீட்டர். ஆனால் 2050ம் ஆண்டுக்குள் தண்ணீருக்கான தேவை ஆயிரத்து 447 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேவைக்கும், வழங்கலுக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்படப்போகிறது.

வேளாண்மையில் சிறந்து விளங்கும் பஞ்சாப், ஹரியாணா, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிலத்தடி நீர் உறிஞ்சுதல் மிக அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் நகரமயமாக்கல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. விளை நிலங்கள் கான்கிரீட் காடுகளாகின்றன.
கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பல்வேறு காரணங்களுக்காக நகரங்களில் குடியேறுகிறார்கள். அதனால் நகரங்களின் வளர்ச்சி வெகுவேகமாகிறது. நகரங்களுக்கான நீர் தேவையும் அதிகமாகிறது. இந்தக் கூடுதல் நீரை விவசாயத்துக்கு வழங்கப்பட்ட நீரிலிருந்து கையாள வேண்டியுள்ளது. நீர்ப் பற்றாக்குறையில் விவசாயமும் குறைந்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தியும் குறைகிறது.
சென்னை மற்றும் புறநகரில் ஒரு சிறிய பரப்பளவில் 20 மாடிகள் வரை கொண்ட கட்டடங்கள் கட்டப்படுகின்றன. அங்கு எண்ணிக்கையில் ஒரு சிறு கிராமம் அளவிலான மக்கள் குடியிருக்கிறார்கள். இதைப்போன்று சென்னையில் ‘ஹைரைஸ்’ கட்டிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தண்ணீர் தேவை அதிகரிக்கிறது. இது நீர் வளங்களின் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

விவசாயத்துக்கும் மக்களின் வீட்டு உபயோகத்துக்கும் பயன்படுத்தும் தண்ணீர் 30 விழுக்காட்டுக்கு மேல் விரயமாகிறது. திருமணம் மற்றும் பல்வேறு விழாக்களில் 300 மி.லி., 500 மி.லி., பாட்டில்களில் தண்ணீரை வழங்குகிறார்கள். ஆனால், பலரும் அந்த நீரை முழுமையாகக் குடிப்பதில்லை. அதேபோல் விவசாயத்தை பொறுத்தவரை, பெரும்பாலான தாவரங்களுக்கு வேர்களில் ஈரம் இருந்தால் போதும். ஆனால், வாய்க்கால் வரப்புகளில் நீர் விடுவதால் விரயமாகிறது. சொட்டு நீர்ப் பாசனம் மட்டுமே இதற்கான தீர்வாக இருக்கும்.
விழிப்புணர்வு வாசகங்களாக அரசு வலியுறுத்தும் ‘மழைநீரைச் சேமியுங்கள்’ என்பது மக்களுக்கு மட்டும்தான். அரசாங்கமே மழை நீரை சேமிக்கத் தவறும் நிலையில், மக்கள் சேமிக்கும் மழை நீர் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்காகத்தான் இருக்கின்றனவே தவிர, மக்களை பற்றி, இயற்கை வளம் பற்றி அரசுகளுக்கு கிஞ்சித்தும் கவலையில்லை.
காலநிலை மாற்றத்தால் பருவமழைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய மழை, பத்து நாட்களுக்குள் கொட்டித் தீர்த்துவிடுகிறது. அதனால் மழைநீர் வெள்ளமாக மாறி வெளியேறிவிடுகிறது. தண்ணீரை சேமிக்கும் திறன் மற்றும் கட்டமைப்பு நம்மிடம் இல்லாததால் பெரும்பாலான நீர் கடலில் கலக்கிறது. அதைத் தொடர்ந்து கோடைகாலங்களில் வறட்சி ஏற்படுகிறது. வெள்ளமும் வறட்சியும் ஒரே ஆண்டில் ஏற்படுகின்றன.

நிலவியல்படி தமிழ்நாடு, மழை மறைவுப் பகுதியாகும். இங்கு வற்றாத ஜீவநதிகள் கிடையாது. ஆகையால் நமது முன்னோர்கள் மழைநீரை தேக்கி வைத்து, தேவைக்கு ஏற்றாற்போலப் பயன்படுத்தும் வகையில் ஏரி, கண்மாய், ஊருணி மற்றும் குளம் எனப் பல்வேறு வகையான நீர் நிலைகளை உருவாக்கினர். அவற்றைச் சிறப்பான முறையில் நிர்வகித்தனர். அந்த நீர்நிலைகளின் பெரும்பாலான பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
தமிழகத்தில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் துணையோடு இளைஞர்கள் எஞ்சியிருக்கும் ஏரிகள், குளங்களைத் தூர்வாருகிறார்கள். நீர் நிலைகளை மீட்பதில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றும் இருக்கிறது. மணலற்ற ஆறுகளில் வெள்ள நீர் விரைவாகச் சென்று கடலில் கலந்துவிடும். மணல் என்பது மிகப்பெரிய நீர்த்தேக்கம். கோடைகாலத்தில் ஆற்றில் ஊற்று போட்டு குடிநீர் எடுத்தவர்களுக்கு அதன் அருமை புரியும். மணல் குவாரிகள் இவற்றை சிதைத்துவிட்டன.

கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தர மறுக்கின்றன. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் மணல் அள்ளுவதை முழுமையாகத் தடை செய்திருக்கிறார்கள். அந்த மாநிலங்களுக்கு நமது நீர் ஆதாரமான மணலை தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் அனுப்பி வருகிறோம்.
ஆற்று மணல்தான் பஞ்சு போல தண்ணீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கிறது. மணலை முழுமையாக அகற்றினால் பழைய நிலைமைக்கு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆற்றுமணல் முழுவதும் சுரண்டப்படுவதால் ஆறு சாகடிக்கப்படும்.
மேலும், நிலத்தடி நீர் வற்றி விடும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் பாழாகும், எதிர்கால சந்ததியினர் குடிநீருக்காக கையேந்த வேண்டிய அவலம் ஏற்படும், ஆடு மாடுகள், செடி கொடிகள் பாதிக்கப்படும். இதுபற்றிய கவலை தற்போதைய அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு இல்லை. பாதுகாப்பான குடிநீரை வழங்க அரசுகள் தவறியதுதான் தனியார் நீர் வணிகத்தின் கதவுகள் திறக்கக் காரணம் என்று பசிபிக் இன்ஸ்டிடியூட்டின் உலக நீர் அறிக்கை கூறுகிறது.
ராஜஸ்தானைச் சேர்ந்த இராஜேந்திர சிங் இந்தியாவின் தண்ணீர் மனிதர் என்று போற்றப்படுகிறார். ராஜஸ்தானில் 5 ஆறுகளை அவர் மீ்ட்டெடுத்துள்ளார். இதற்காக மகசேசே விருது, நோபல் பரிசு போன்ற உயரிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. தனிமனிதரால் அல்லது இயற்கையை காப்பாற்றும் முனைப்பு கொண்டவர்களால், அரசின் தயவின்றி நீர் நிலைகளைக் காப்பாற்ற முடியும் என்பதே இராஜேந்திர சிங் போன்றவர்களிடம் இருந்து நாம் கற்கும் பாடமாக இருக்க வேண்டும்.
நீர்வளத்தை பாதுகாத்திடவும், பராமரித்திடவும், சேமித்திடவும் தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வோம். மழை நீர் சேமிப்பு தொட்டிகளை வீடுகளிலும் அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் தவறாமல் உருவாக்குவோம். மழை வருவதற்கான தேவையான மரங்களை வளர்ப்போம். காற்றை மாசுபடுத்தாமல் இருப்போம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry