வியக்க வைக்கும் சோழர்களின் நீர் மேலாண்மை! சதய விழா நாளில் மாமன்னன் ராஜராஜசோழனை வணங்குவோம்!

0
1468

உலகின் பழமையான அணையை கட்டி தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்தவன் சோழன். சோழர்கள் வெட்டிய லட்சக்கணக்கான குளங்கள், ஏரிகளுக்கு நகர்மயமாக்கல் என்ற பெயரில் சமாதிகட்டி, சடங்குகளை முடித்துவிட்டு, ஊரே நீரில் தத்தளிக்கிறது என புலம்புவதால் என்ன பயன்? சதயவிழா நாளிலாவது சோழர்களின் நீர் மேலாண்மையை நினைவுகூர்வோம்.

அருண்மொழிவர்மன் எனப்படும் முதலாம் இராஜராஜன், சோழப் பேரரசின் புகழ்பெற்ற மன்னராவார். கி.பி 985 முதல் கி.பி 1014 வரையிலான இவரது ஆட்சிக்காலம்சோழ மரபினரின் பொற்காலம்என்று போற்றப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் சதய விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும். அதன்படி இன்று நடைபெற்ற விழாவில் அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மட்டும் மரியாதை செலுத்தினார்.

கலை, கட்டடக்கலை, நிர்வாகம், வணிகம் என அனைத்துத் துறைகளிலும் சோழர்கள் சிறந்து விளங்கினார்கள். நீர் மேலாண்மை கிபி மூன்றாம் நூற்றாண்டில் கரிகால் பெருவளத்தான் ஆட்சியிலேயே உருவானது. கரிகாலனின் கல்லணை கட்டுமான நுட்பங்களை அறிந்து ஆங்கிலேயர்களே வாய்பிளந்தார்கள். இவர்கள் நீர் மேலாண்மை குறித்து கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்து வைத்துள்ளார்கள். ஏரி, குளங்களை வெட்டவும், அவற்றை தூர்வாரி பராமரிக்கவும் இராஜராஜன், இராஜேந்திரன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் பெருமளவு மெனக்கெட்டனர். இதனாலேயே அப்போது வேளாண்மை சிறந்து விளங்கியது.

சோழர்கள் கால ஏரிகளில், வீராணம் எனப்படும் வீரநாராயண ஏரி முக்கியமானதாக கருதப்படுகிறது. நீர் நிலைகளை மேலாண்மை செய்வதற்காக கிராம சபைகள் மூலம் சோழ மன்னர்கள் ஏரிவாரியம் அமைத்துள்ளனர். இதற்கு உத்திரமேரூர் கல்வெட்டு சான்றாக உள்ளது. ஏரிகளை தூர்வாரி பராமரிக்க ஏரி ஆயம் என்ற வரியை சோழ மன்னர்கள் விவசாயிகளிடம் வசூலித்துள்ளனர். சாமானியர்கள் நீர் நிலைகளை சீரமைத்தால், அவர்களை கவுரவிக்கும் பொருட்டு கல்வெட்டில் அவர்கள் பெயர், அவர்கள் செய்த பணி பொறிக்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர்கள் நாகப்பட்டினம் முதல் கேரள மாநிலம் கோழிக்கோடு வரை ஒரு பெரும் பாதையை உண்டாக்கி இருந்தார்கள். இந்த பாதை ராஜகேசரி பெருவழி என்று அழைக்கப்பட்டது. இந்த பெருவழியின் பக்கமாக ஏராளமான ஏரிகள் வெட்டப்பட்டு இருக்கிறது. இந்த ஏரிகள்தான் நொய்யலாற்றின் உயிர் நாடிஇந்தப் பெருவழியில்தான் ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் வணிகர்கள் பயணிப்பார்கள்.

கோவை மாநகரத்தில் உள்ள அல்லிக்குளம், குறிச்சி குளம், நாகராஜபுர குளம், முத்தனங்குளம், பனங்காட்டு குளம், வாலாங்குளம் எல்லாம் இராஜராஜ சோழன் வெட்டியதுதான். இந்த நீர் நிலைகள் ஒன்றோடு ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டவை. நொய்யலாற்றிலிருந்து வரும் நீர் இந்த ஏரிகளை எல்லாம் நிரப்பிவிட்டு மீண்டும் நொய்யலாற்றோடு கலந்துவிடும். பொறியியல் படிக்காமல் இப்படியான வடிவமைப்பை செய்தவர்கள் சோழர்கள். தமிழகத்தில் பெருமளவு நீர் நிலைகளை ஏற்படுத்தி, நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கியவர்கள் சோழர்கள்தான்.

நமது முன்ணோர்களுக்கு ஆட்டுக்கல்தான் மழை மானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும்அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வார்கள்.

சோழர்களின் உறைகிணறு தொழில்நுட்பம்

ஆனால், நாம் நம் மோசமான நீர் மேலாண்மையால், அந்த ஏரி, குளம், கண்மாய் என 47 வகையான நீர்நிலைகளை கொன்று வருகிறோம். நீர் நிலைகளை காக்கத் தவறிவிட்டு நதி நீர் இணைப்பை பற்றி பேசி வருகிறோம். ஒரு இடத்தில் தண்ணீர் சிக்கலென்றால், அதே இடத்தில் உள்ள நீர் நிலைகளை சீரமைக்க வேண்டுமே தவிர, இன்னொரு இடத்திலிருந்து நீர் எடுத்துவந்து, சிக்கலுள்ள இடத்துக்கு வழங்க வேண்டும் என்று நினைக்க கூடாது. இது சிக்கலை மேலும் மேலும் அதிகமாக்குமே தவிர, நிரந்திர தீர்வை தராது. அதாவது, ஒரு ஊரில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து மற்றொரு ஊருக்கு வழங்குவது தற்காலிகத் தீர்வு மட்டுமே.

எனவே நமது முன்னோர்களான சோழர்கள் நமக்கு சொல்லித்தந்துவிட்டுப் போன நீர் மேலாண்மையை மீள் உருவாக்கம் செய்வது அவசியம். ஏரி, குளம், குட்டை, கண்மாய் போன்ற நீர்நிலைகளை போர்க்காலத்தில் மீட்டெடுக்க வேண்டும். நிதி ஒதுக்குவதோடு நில்லாமல், முறையான கண்காணிப்பின் கீழ் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி நீர் நிலைகளை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும். மேடு, பள்ளம், தண்ணீர் செலுலம் திசை அறிந்து வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட வேண்டும்.  நகர்மயமாக்கல் என்பது, நீர் நிலைகளை பாதிக்காதவாறு திட்டமிடப்பட வேண்டும்.

கொசஸ்தலை ஆறு, அடையாறு, கூவம் ஆறு, 17 கால்வாய்கள், 4100 ஏரி குளங்கள் என சென்னை மற்றும் அதன் புறநகரில் நீர் நிலைகள் இருந்தன. இவைகளின் கொள்ளளவு 150 டிஎம்சி. சென்னை நகரின் ஒரு மாதக் குடிநீர் தேவைக்கு ஒரு டிஎம்சி போதுமானது. இந்த நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படவில்லை. அதேபோல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 120-க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரி நீர் வருகிறது. கூவம் ஆற்றுக்கு 80 ஏரிகளில் இருந்து உபரி நீர் வருகிறது.

இவைகள் தூர்வாரி செப்பனிடப்பட்டிருந்தால், பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்பிருந்திருக்காது. தலைநகர் தற்போது தண்ணீரில் மிதக்கிறது, கோடைக்காலத்தில் சென்னை மக்கள் தண்ணீர் லாரிக்காக குடங்களோடு காத்திருப்பார்கள். இந்த நிலை மாற, சோழர்கள் காலத்து நீர்மேலாண்மை மட்டுமே நிரந்தரத் தீர்வாக இருக்கும்.    

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry