அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஐபெட்டோ) தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “டிட்டோஜாக் அமைப்பின் வீரம் செறிந்த போராட்டம் திட்டமிட்டபடி அக்டோபர் 13ஆம் தேதி, பேராசிரியர் க.அன்பழகனார் கல்வி வளாகத்தில் உள்ள SCERT அலுவலகம் முன்பு மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டமாக நடைபெறும்.
வழக்கம் போல் சடங்கு பேச்சுவார்த்தைக்காக, தொடக்கக் கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்துப் பேசுகிறார்களாம். எமிஸ் இணையதள பிரச்சினை, கல்லூரி மாணவர்களை வைத்து மதிப்பீடு செய்யும் பிரச்சினைகளுக்காக ஏற்கனவே இவர்கள் இருவரால் கூட்டப்பட்ட கூட்டத்தில், SCERT இயக்குநர் ந.லதாவை கலந்து கொள்ளச் செய்ய முடிந்ததா?

சரி போகட்டும்..! SCERT இணை இயக்குனர்கள் இத்தனை பேர் இருக்கிறார்களே, அவர்களில் ஒருவரைக் கூட அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்யமுடியவில்லையே? இந்த அரசினை, பள்ளிக்கல்வித்துறையினை, அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்களே என்பதை எண்ணும்போது நெஞ்சம் பொறுக்குதில்லையே..!
பேராசிரியர் க.அன்பழகனார் கல்வி வளாகம், நமக்குச் சொந்தமான வளாகம். This is Our Valagam. கல்விக்காவலர் நெ.து.சுந்தரவடிவேலு காலத்திலிருந்து அந்த உரிமை நமக்கு உண்டு. சட்டம் ஒழுங்கை காப்பாற்றுபவர்கள் நாம்தான். நாம் இருக்கப்போவது தொடர் உண்ணாவிரதம் அல்ல; சில மணி நேர கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தான், நம்மை வளாகத்தை விட்டு வெளியே அனுப்ப எவருக்கும் உரிமை இல்லை.
உரிமையை மீறினால், நமது அரசு, எங்கள் அரசு என்ற உணர்விலிருந்து விடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு திரும்ப வேண்டும் என எண்ணுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகும்..! போராட்டம் அறிவிக்கப்பட்டு விட்டது. MARCHON..! MARCHON..! வீறுநடைப்போட்டு முன்னோக்கிச் செல்கிறோம். ABOUT TURN…! என்று திரும்பிப் பார்க்கும் பேச்சுக்கே இடமில்லை. எமிஸ் இணையதளத்திலிருந்து விடுதலை பெறும்வரை… எண்ணும் எழுத்தும் திட்டத்திலிருந்து விடுதலை பெறும் வரை.. எங்களுடைய களம் பெரும் கொந்தளிப்பாக, அன்றாடம் பீறிட்டு எழுந்து கொண்டிருக்கும் என்பதை அரசுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
1985இல் நடைபெற்ற ஜாக்டீ போராட்டம், 1988-ல் நடைபெற்ற ஜாக்டீ ஜியோ போராட்டம், 2003 இல் நடைபெற்ற எஸ்மா, டெஸ்மா போராட்டங்களை எல்லாம் சந்தித்து, அதன் பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாத்தவர்கள் எல்லாம் இன்னும் உயிரோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். திட்டமிட்டபடி 13ஆம் தேதி நமது உணர்வுகளை கோரிக்கை முழக்கமாக எழுச்சிமிக்க போராட்டமாக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் பதிவு செய்வோம்.
புத்தக அறிவில்லாத கல்வி, எழுத்தறிவு இல்லாத கல்வி, ஆசிரியர் போதனையில்லாத கல்வி, வாசிப்புத் திறன் இல்லாத கல்வி… இதற்குப் பெயர்தான் எண்ணும் எழுத்தும் திட்டம். கொரோனா காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தினை, கொரோனா முடிவுற்ற பின்பும் அதிகாரிகள் நடத்தி வருகிறார்கள்.
அவரவர் பிள்ளைகளை மான்ஃபோர்ட் போன்ற பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களை விஸ்வகர்மா யோஜனா போன்ற திட்டத்தில் கொண்டு விடும் திட்டமே எண்ணும் எழுத்தும் திட்டம். முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும் விளம்பரத்தில் மிதக்க வைத்துள்ளார்கள்.
ஆட்சியைப் பற்றியோ, அரசினைப் பற்றியோ? நாம் கவலைப்படும் அளவுக்கு அவர்கள் கவலைப்படுவதாக, அல்லது இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. ஏழை, எளிய மாணவர்களின் கல்வி நலனைப் பாழ்படுத்தி வரும் எண்ணும் எழுத்தும் திட்டம், எமிஸ் இணையதளம் போன்றவை உயிர் கொல்லித் திட்டங்கள்.
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஆசிரியர் திருமதி.அன்னாள் ஜெயமேரி, மதிப்பீட்டுப் பணி செய்து கொண்டிருக்கும் போதே மன அழுத்தத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த போதே வகுப்பறையில் விழுந்து உயிர் பிரிந்ததே! அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது?
Also Read : அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் சீரழிவு! ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம் என பாமக குற்றச்சாட்டு!
இன்னும் எத்தனை பேர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்கள்? பணி நிறைவு பெறுவதற்குப் பல ஆண்டுகள் இருந்த போதிலும், எத்தனையோ ஆசிரியர்கள் விருப்ப ஓய்வில் சென்றார்கள். மேலும், விருப்ப ஓய்வில் செல்வதற்கு விண்ணப்பித்துள்ளவர்களின் பட்டியலினை வெளியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். சங்கத் தலைவர்கள் அனைவரும் ஆசிரியர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் உள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டுள்ளது. 110 விதியின் கீழ், எமிஸ் இணையதள பதிவுகள் செய்வதில் இருந்தும், எண்ணும் எழுத்தும் திட்டத்திலிருந்தும் ஆசிரியர்களை விடுவிக்கிறோம் என்று முதலமைச்சர் அறிவிக்கட்டும். எண்ணும், எழுத்தும் திட்டத்தினை மறு பரிசீலனை செய்கிறோம், என்று உத்தரவாதம் அளிக்கட்டும்..! மனம் இருந்தால் சொல்லலாம் அல்லவா? பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் என்பதை உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து சொல்ல முடியாவிட்டாலும், வாக்குறுதியாகவாவது சட்டப்பேரவையில் கூறி உறுதிப்படுத்தலாமே?
எதை இழந்தாலும் திரும்பப் பெறலாம், ஆனால் ஆசிரியர்கள் நம் மீது கொண்டுள்ள நம்பிக்கை உணர்வினை இழந்துவிட்டால் எந்தக் காலத்திலும் திரும்பப் பெற இயலாது என்பதை சங்கத் தலைவர்கள் உணர்ந்துதான் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். அச்சம் தவிர்த்து அறப்போராட்டத்தினை தீவிரமாக்குவோம். கோரிக்கை முழக்கமிட அணிவகுத்து வருகைதரும் உங்களை வரவேற்பதற்காக கள நுழைவு வாயிலில் காத்திருக்கிறோம்..! இன்னும் இந்த அரசின்மீது நம்பிக்கை தளாராமல் இருக்கத்தான் செய்கிறோம்.” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry