கல்வித்துறையை நாசமாக்குவதுதான் அஜெண்டாவா? அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றால் இளக்காரமா? அவமானப்படுத்திய கடலூர் மேயர்!

0
66
Representational Image

4.00 Minute(s) Read : பள்ளிகளைக் கோயில்கள் என்றும், ஆசிரியர்களை தெய்வங்கள் என்றும் கைகூப்பித் தொழுதக் காலம் ஒன்றிருந்தது. இப்போதோ ஆசிரியர்களைப் பெற்றோர்கள் செருப்பால் அடிப்பதும், பொதுமக்கள் அவதூறு பேசுவதும் வெகு சாதாரணமாக நடக்கிறது.

ஆளும் அரசுகள் கல்வியைத் தங்கள் பிடியில் கொண்டுவரும் போக்கு பல வழிகளில் தொடர்ந்து நடக்கிறது. அதனால் கற்பித்தல் பணி என்ற முக்கியமான இடத்திலிருந்து ஆசிரியர்கள் விலகிச் சென்று சில வருடங்கள் ஆயிற்று. மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் பல திட்டக் கூறுகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் நமது பள்ளிகளும், ஆசிரியர்களும் படும் துன்பங்களை பட்டியல் போட இயலாது.

அதன் நீட்சியாக பல தொல்லைகளுக்கு ஆளாகி உள்ளனர் ஆசிரியர்கள். சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை ஒன்றியத்தில் ஆலந்தூர்நாடு ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர் குப்பண்ணன் என்பவர், கற்பித்தல் பணியில் சுதந்திரம் இல்லை என எண்ணும் எழுத்தும் ஆன்லைன் மதிப்பீடு செய்வதை எதிர்த்து, கல்வி அலுவலரிடம் ஆசிரியர் பணியிலிருந்து பதவி விலகுவதாகக் கடிதம் கொடுத்தார்.

Also Read : ஆழ்ந்த உறக்கத்தில் கல்வித்துறை! அவமதிக்கப்படும் ஆசிரியர்கள்? பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்தால் கொந்தளிப்பு!

ஆன்லைன் பதிவேற்றங்கள், எண்ணும் எழுத்தும் திட்ட மதிப்பீடு இவற்றால் மன அழுத்தத்தைச் சந்திக்கும் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதற்கு உதாரணமாக, சமீபத்தில்  திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் பணியாற்றிய அன்னாள் ஜெயமேரி என்ற ஆசிரியரின் இறப்பைப் குறிப்பிடலாம்.

எமிஸ் ஆன்லைன் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தத்தால், வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்தபடியே அவர் இறந்து விட்டார். கடைசியாக அவர் பேசிய உரையாடல் தமிழ் அசஸ்(மதிப்பீடு) செய்தும், திருப்பி நாட் அஸ்ஸெஸ்மெண்ட்(Not Assessment) என்று வருது என்பது தான். ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மனம் வெம்பி சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

உயிரிழந்த ஆசிரியர் அன்னாள் ஜெயமேரி

மயிலாடுதுறையில் உள்ள தியாகிஜி நாராயணசாமி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்துள்ளார். வகுப்புகளுக்குச் சென்று ஆசிரியர்கள் நன்றாகப் பாடம் நடத்துகிறார்களா என்று கேட்டுள்ளார். அதோடு 12ஆம் வகுப்பில் கணக்குப் பாடம் நடத்திக்கொண்டு இருந்த ஆசிரியரது வகுப்பிற்குள் சென்று கேள்வி மேல் கேட்டு திணற அடித்துள்ளார்.

மாணவர் சிலரை எழுப்பி கணக்கைக் கரும்பலகையில் போடக்கூறி, சரியாகப் போடாத மாணவர்கள் புரியாமல் இருப்பவர்களுக்கு நன்றாக சொல்லிக் கொடுத்து தேர்வு வைக்கக் கூறியுள்ளார். போகிற போக்கில், தனியார் பள்ளிகளில் நல்ல பயிற்சி கொடுக்கிறார்கள், இங்கு ஏன் தருவதில்லை? என்று  கேட்கிறார். அவருக்கு அரசுப் பள்ளிகள் குறித்த புரிதல் இல்லை என்று நன்றாகத் தெரிகிறது.

ஒரு கும்பலுடன் நின்று ஆசிரியரைக் கேள்வி கேட்டால், அதுவும் கலெக்டர் கேட்டால் பயப்பட மாட்டார்களா? முதன்மைக் கல்வி அலுவலர் பதற்றத்துடன் அங்கு நின்று கொண்டு இருந்தார்.அடுத்து நடந்துள்ள ஒரு நிகழ்வு பேரதிர்ச்சியைத் தருகிறது. கடலூர் மாநகராட்சியில் 45வது வார்டு பகுதியில் அமைந்துள்ளது  முதுநகர் சிங்காரத் தோப்பு அரசு தொடக்கப் பள்ளி.

அங்கு காலை உணவுத் திட்டத்தை மேயர் சுந்தரி ராஜா ஆய்வு செய்யச் சென்ற போது, தலைமை ஆசிரியர்  தாமதமாக வந்துள்ளார். அதற்கு அவரை ஒருமையில் பேசியதோடு, தலைமை ஆசிரியரை இழிவுபடுத்தும் வகையில் கேள்விகள் கேட்டுள்ளார் மேயர். அந்தக் காணொளி மிகப் பரவலான செய்தியாக மாறியுள்ளது.

கடலூர் மேயர் சுந்தரி ராஜா

அதைப் பார்க்கும் போது சாதாரண சபை நாகரிகமோ, மனிதாபிமான உணர்வோ இல்லாமல் ஒரு அதிகார மிடுக்கு தூக்கலாக இருந்தது. மேயர்  கூறும் போது, இந்தப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியருக்கு தலைமை ஆசிரியரும் நீங்க தான், ஆசிரியருக்கு ஆசிரியரும் நீங்க தான். ரொம்ப வொர்ஸ்ட்டா இருக்குது பள்ளி என்கிறார்.

மேயருக்குத் தெரியவில்லை போல, பள்ளி என்றால் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் சேர்ந்து இயங்க வேண்டும் என்று.‌ அந்த வேலையை, அதாவது தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியரை  நியமிக்க வேண்டிய வேலையை மேயர் உள்ளிட்ட ஆட்சியர், ஊராட்சி மன்றத் தலைவர் போன்றோர் கவனிக்க வேண்டும். ஆனால், அவற்றை விட்டு விட்டு இந்த மேயர் ஆசிரியரை மிரட்டும் அடியாள் வேலையை அல்லவா செய்கிறார்?

தலைமை ஆசிரியர் தேன்மொழி தனது தாமதமான வருகைக்கு “மாதவிலக்கு காரணம், அதற்குரிய உடை மாற்ற (Sanitary Pad )சென்றதால் தாமதம் என்று கூறியிருப்பதாக”, அந்தக் காணொளியிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. எத்தனை தைரியமான பெண்ணாக இருந்தாலும் இதை வெளிப்படுத்தக் கூச்சப்படுவார்கள்.

அப்படியான சூழலில் பல ஆண்கள் நிறைந்த சபையில் பள்ளி மாணவர்கள் நிறைந்த இடத்தில் மேயர் கேட்கும் கேள்விகள் கேட்போர் காதுகளைக்  கூசச் செய்யும் வகையில் இருக்கின்றன. “நாட்டுல யாருக்குமே வந்தது கிடையாதா பீரியட்(Menses Period), இங்க பாத்ரூம் இல்லையா? அதில் உன்னால மாத்த முடியாதா பேட் (Sanitary napkin Pad) என்று ஒருமையில் சாடுகிறார்.

Also Read : ஆசிரியர்களின் குரல் அமைச்சருக்குக் கேட்கவில்லையா? SCERT இயக்ககம் ரகசியத் திட்டத்துடன் செயல்படுகிறது! ஐபெட்டோ விமர்சனம்!

பெண்களை இப்படிக் கீழ்த்தரமாக பேசுவதே குற்றம். இதற்கு இவருக்குச் சட்டத்தில் என்ன தண்டனை என்று பார்த்து, இந்த மேயர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முதல்வர் தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தது மாணவர்களுக்காக. இதுபோல் அரசியல் தலையீடுகள் பள்ளிக்குள் நுழைந்து அராஜகம் செய்ய அல்லவே.

இந்த மேயரோ அல்லது மாவட்ட ஆட்சியரோ ஒரு தனியார் பள்ளியையோ அல்லது மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளையோ இப்படி ஆய்வு செய்து விட முடியுமா? பள்ளிகளை ஆய்வு செய்யவும் ஆசிரியர்களை வழிநடத்தவும் கல்வித் துறையில் பல அடுக்கு நிலைகள் இருக்கும் போது,  இவர்கள் எல்லாம் எதற்காக வரம்பு மீறுகிறார்கள் என்று புரியவில்லை. துறையின் உயர் அலுவலர்களது பணியையே நீர்க்கச் செய்கிறது இவர்களின் ஆய்வுகள்.

அதேபோல், பள்ளித் தலைமை ஆசிரியரின் நாற்காலியில் வேறு எந்த அலுவலரும் அமரக் கூடாது. மேயர் அலுவலகத்தில், அவரின் நாற்காலியில் வேறொருவர் அமர்வாரா என்று தெரியவில்லை. நீங்கள் மேயராக இருந்தாலும், பிரதமராகவே இருந்தாலும், அந்தப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் தான் தலைவர். அவரது நாற்காலியில் மற்றவர் அமர்வதே  அநாகரிகம்.

முதலில் சபை நாகரிகமும் இல்லை. ஆய்வின் போது எப்படிப் பேச வேண்டும் என்ற வரைமுறையும் இல்லை. அடக்கி ஆளும் வர்க்கத்தினராக இருக்கும் இவர், மக்களாட்சி என்ற தத்துவத்திற்கே களங்கம் விளைவிக்கிறார். ஒரு தலைமை ஆசிரியர் தவறே செய்தாலும், ஆய்வுக்கு வருபவர் துறையின் உயர் அலுவலர்களிடம் தெரிவிப்பதே சரியானது.

Also Read : விருது பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்தது ஏன்? மத்திய அரசுக்கு ஐபெட்டோ அமைப்பு கண்டனம்!

பொதுவாகவே கல்வித் துறையின் மீது அக்கறை உள்ள ஆட்சியராகட்டும், மேயராகட்டும், அவர்கள் மாவட்டத்தில் எந்தெந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறைகள் இருக்கின்றன? வகுப்பறை பற்றாக்குறைகள் இருக்கின்றன?  வகுப்பறைகளில் காற்றோட்ட வசதிகள் இருக்கிறதா? மின்விசிறிகள் இருக்கின்றனவா? விளையாட்டு மைதானம் இருக்கிறதா? விளையாட்டு ஆசிரியர்கள் இருக்கின்றனரா? பள்ளிக்கு சுற்றுச் சுவர் இருக்கிறதா? உள்ளிட்டவற்றை கவனிக்க வேண்டும்.

அவற்றை விடுத்து தமது துறைகளுக்கு சம்மந்தமே இல்லாத ஆசிரியர்களை அடக்கி அச்சுறுத்துவது எதற்காக? கல்வி ஏன் இங்கு அரசியல் கட்சிகளின் பிடிகளுக்குள் சிக்கித் தவிக்கிறது?  கல்வியை மத்திய அரசிடமிருந்து மாநில அதிகார வரம்பிற்கு கேட்கும் நாம், இங்கு கல்விக் கூடங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதை எப்படிப் பார்க்கலாம்? ஒவ்வொரு நாட்டிலும் ஆசிரியர்களுக்கான மரியாதை எப்படி இருக்கிறது என்று இவர்களுக்கு யார் பாடம் எடுப்பது?

இது நடந்து மூன்று நாட்கள் ஆகின்றன, ஆசிரியர்கள் சங்கத்தினர் என்ன எதிர்ப்பை பதிவு செய்தனர் என்று தெரியவில்லை.  கல்வி அமைச்சர் இது பற்றி ஏதாவது விசாரித்தாரா என்று தெரியவில்லை. அந்தப் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழு இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? பெண்களுக்கான அமைப்புகள் தமிழ்நாட்டில் பல இருக்கின்றன. அவர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

Also Read : அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரம் சீரழிவு! ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம் என பாமக குற்றச்சாட்டு!

பள்ளிகளை ஆய்வு செய்ய துறை அதிகாரிகள் அல்லது அமைச்சர் செல்லலாம், இவர்களைப் போல வேறு துறையினர், பள்ளி நலன் கருதி ஏதாவது பள்ளிக்கு உதவி செய்ய செய்யலாமே ஒழிய,  ஆசிரியர்களை நிற்க வைத்து கேள்விகள் கேட்க பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்று அரசு சட்டம் இயற்றட்டும்.

இந்தப் பிரச்சினை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப் பட வேண்டும். ஆசிரியர்களைக் களங்கப்படுத்துதல், பெண்களை அவமானப்படுத்தும் நோக்கில் அத்து மீறல், மனித உரிமை மீறல் ஆகியவற்றில் ஈடுபட்ட  மேயருக்கு தக்கத் தண்டனை வழங்க வேண்டும். அதே‌போல, பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் செயலில் சுதந்திரமாக ஈடுபட வழிவகை செய்ய வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்பாக இந்தக் கோரிக்கையை வைக்கிறோம்.

கட்டுரையாளர் –  சு.உமாமகேஸ்வரி, கல்விச் செயற்பாட்டாளர்.
நன்றி – அறம் இணைய இதழ்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry