“நாடு முழுவதும் எழுப்பப்பட்ட ஆசிரியர்களின் இதயக்குமுறல்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு செவி வழியாவது செய்தி கிடைத்ததா? நீதிமன்றத்தில் எங்களுக்காக மூத்த வழக்கறிஞர்களையும் விஞ்சுகிற வகையில் வாதாடிய பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மௌனம் சாதிப்பது ஏன் என்றே தெரியவில்லை?” என ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “SCERT இயக்ககத்தின் ஆசிரியர் விரோத போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிட்டோஜாக் சார்பாக 11-09-23 அன்று மாலையில் 38 மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட குரல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பார்வைக்கு வந்ததா? இதயக் குமுறல்களை செவி வழியாவது அமைச்சர் கேள்விப்பட்டுள்ளாரா?
பள்ளிக்கல்வி ஆணையர் பதவியினை விடுவித்ததற்குப் பிறகு, SCERT இயக்குநர் அந்த அதிகாரத்தினை அப்படியே கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டு, முற்றிலும் அரசு விரோத, ஆசிரியர் விரோத, மாணவர்களின் கல்வி நலனுக்கு எதிரான செயல்பாடுகளை பிடிவாதமாகச் செய்து வருகிறார்.
Also Read : SCERT இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! டிட்டோஜாக் ஆர்ப்பாட்ட அறிவிப்புக்கு ஐபெட்டோ ஆதரவு!
‘எண்ணும் எழுத்தும்’ திட்டமே ஒரு விளம்பரத் திட்டம். முதலமைச்சரைம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும் விளம்பரப் படுத்துவதுதன் மூலமாக நம்பிக்கையினை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதைத் தவிர உண்மைத்தன்மை எதுவும் இல்லை. நிதி ஒதுக்கீடு வவுச்சர் பயன்பாட்டிற்கான திட்டமாகத்தான் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதனை வெளிப்படுத்துவதில் எங்களுக்கு எந்தவித அச்சமும் இல்லை.
முன்னேறிய மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தால் எவ்வித ஊக்கமும் இல்லை. மெல்ல கற்கும் மாணவர்களிடையே முன்னேற்றம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு இல்லை. அரும்பு, மொட்டு, மலர் என்கிற அந்த அழகான வார்த்தைகளைத் தவிர வேறு எந்தவித முன்னேற்றமும் இல்லை. இது கல்வியாளர்களின் கருத்து மட்டுமல்ல; ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்பட்டுள்ள சத்தியச் சோதனையாகும்.
இந்தத் திட்டத்தினை மதிப்பீடு செய்வதற்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களின் வகுப்பினை, பி.எட்., படிக்கக்கூடிய மாணவர்களை கொண்டு மதிப்பீடு செய்யலாமா? இது, ஆசிரியர் சமுதாயத்தின் சுயமரியாதைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சோதனையாகும். மதிப்பீடு செய்வதை நாங்கள் வரவேற்கிறோம், எதிர்க்கவில்லை. பி.எட்., படிக்கும் மாணவர்களை கொண்டு மதிப்பீடு செய்வதைத்தான் ‘தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள்’ ஒன்று சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றோம்.
29/08/2023 அன்று பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில், தொடக்கக்கல்வி இயக்குனர் முன்னிலையில், டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், SCERT இயக்குநரை அலைப்பேசி வழியாகத் தொடர்பு கொண்டு பேசிய போது, பி. எட்., மாணவர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதை நாங்கள் தவிர்த்து விடுகிறோம் என்று உறுதி அளித்தார்கள். அந்த முடிவு அனைவருக்கும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் திட்டமிட்டபடி 07/09/23 முதல் 15/09/23 வரை, பி.எட்., படிக்கும் மாணவர்களைக் கொண்டு மதிப்பீடு செய்வதற்குப் பிடிவாதமாக பள்ளி வாரியாக அனுப்பி உள்ளார்கள். தலைமையாசிரியர்கள் பல இடங்களில் எதிர்ப்புக் குரலினை பதிவு செய்து வருகிறார்கள். அதையும் பொருட்படுத்தாது, பள்ளிகளுக்கு அன்றாடம் மதிப்பீடு செய்யும் பணிக்கு மாணவர்களைத் தொடர்ந்து அனுப்பி வருகிறார்கள்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 08/09/2023 அன்று ஒரு சங்கம் அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. 11ஆம் தேதி மாலையில் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் ( டிட்டோஜாக்) சார்பாக இருபால் ஆசிரியர்களும் கொந்தளிப்பு உணர்வுடன் பெரும் எண்ணிக்கையில் பங்கு பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதும் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்ற அன்றும் மாணவர்களைக் கொண்டு பள்ளிகளில் மதிப்பீடு செய்வதை SCERT இயக்குநர் நிறுத்தவில்லை.
Also Read : விருது பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்தது ஏன்? மத்திய அரசுக்கு ஐபெட்டோ அமைப்பு கண்டனம்!
சொன்னச் சொல்லை, அளித்த வாக்குறுதியைப் புறந்தள்ளிவிட்டு, நாடாளுமன்றத் தேர்தல் வருகிற நேரத்தில், ஆசிரியர்களுக்கு விரோதமாக, வெறுப்புணர்வு உச்சம் தொடும் அளவிற்கு ஆசிரியர்களின் செயல்பாடுகளைத் தூண்டிவிடும் வகையில் SCERT இயக்ககம் தொடர்ந்து செயல்படுவதை எண்ணி நாங்கள் வேதனையுறுகிறோம்.
ஒட்டுமொத்த ஆசிரியர் இயக்கங்கள் வெளிப்படைத் தன்மையுடன் எதிர்ப்புணர்வினை வெளிப்படுத்தியும், பி.எட்., மாணவர்களைக் கொண்டு பிடிவாதமாக மதிப்பீடு செய்து வருகிறார்கள். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரோ, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளரோ இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா? SCERT இயக்ககம் திட்டமிட்டே ஆசிரியர்களுக்கு எதிராக செயல்படுகிறது.
இதனைப் பற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கவலைப்படுகிறாரா? என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆசிரியர் தின விழாவில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், எமிஸ் செயலியில் பதிவு செய்யும் பணியில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டு வரும் மன அழுத்தத்தை வெளிப்படையாகக் கூறி, மாற்றுத் திட்டம் அறிவிப்பதாகச் சொன்னார்கள். கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இதுவரை அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Also Read : ஜோதிடப்படி யாருக்கு ஹார்ட் அட்டாக் மரணம் வரும்..? நடிகர் மாரிமுத்து மரணமும், சோஷியல் மீடியா வதந்தியும்!
எண்ணும் எழுத்தும் திட்டத்தினை நான்கு, ஐந்து வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்ததையே கல்வியாளர்களுடன் இணைந்து, தொடர்ந்து எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறோம். ஆனால் இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு, மாணவர்களின் கல்வி நலனுக்கு எதிராக 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு, கண்ணும் கருத்தும் என்ற பெயரில் ‘கல்வி சிறந்த தமிழ்நாடு..! என்ற பெயருக்கு SCERT இயக்ககம் ஒரு கேள்விக் குறியாக ரகசியத் திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். அநீதி இழைக்கும் SCERT இயக்ககத்தின் செயல்பாடுகளைக் கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே..!
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாக்கு வங்கியினைப் பற்றி முந்தைய ஆட்சியாளர்கள் எப்போதும் கவலைப்பட்டதில்லை. ஆனால் திராவிட மாடல் அரசு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்களின் ஆதரவினால் ஆட்சியில் அமர்ந்தோம் என்ற நன்றி உணர்வினை வெளிப்படுத்திய அரசு என்பதையும் நாங்கள் மறக்கவில்லை.
முந்தைய ஆட்சியாளர்கள் காலத்தில், எவ்வளவு பெரிய அதிகாரங்களைப் பெற்றவர்களாக இருந்தாலும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்கு வராத எவராக இருந்தாலும், ஒரு வார காலத்திற்குள் அதிர்ச்சி மாறுதல்களை அளித்து நடைமுறைப்படுத்திய வரலாற்றினை மறக்க முடியுமா? ஆனால், தற்போதைய முதலமைச்சர் காலத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காலத்தில், ஆசிரியர்களுக்கு அன்றாடம் மன அழுத்தத்தைக் கொடுத்து வரும் செயல்பாடுகளால், ஆதிக்க சக்திகளாக அதிகாரிகள் செயல்பட்டாலும், ஏன் என்று கேட்பதற்கு எவரும் இல்லை.
முந்தைய ஆட்சியாளர்கள் காலத்தில் நாங்கள் போராடிய போது எங்களை ஆதரித்த இன்றைய ஆட்சியாளர்கள், இனி எங்களை முற்றிலும் போராட்டக் களத்தில்தான் காண வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்..! நாங்கள் புறநானூற்றினை இதயத்தில் பதிவு செய்துள்ளவர்கள், 1985, 1988 போராட்டம், 2003 ஜாக்டோ ஜியோ போராட்ட வரலாற்று நினைவுகள் இதயத்தில் பதிவலைகளாக வந்து கொண்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், உடனடியாக SCERT இயக்குநரை அழைத்து இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணாவிட்டால், தொடர் போராட்ட நடவடிக்கை முடிவிலிருந்து எங்களால் விலகி நிற்க முடியாத நிலைமைக்கு தள்ளப்படுவோம் என்பதனை உரிமை உறவுடன், இதயக் குமுறலாக வெளிப்படுத்திக் கொள்கிறோம்.
டிட்டோஜாக் சார்பாக அடுத்தக் கட்ட தீவிரப் போராட்டத்தையும் அறிவித்திட உள்ளார்கள். அடுத்த கட்டப் போராட்ட அறிவிப்பினை தவிர ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் வேறு வழி தெரியவில்லை. களத்தில் எங்களின் கண்டனக் குரல்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா?”
Also Read : Nipah Virus! கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்! 2 பேர் உயிரிழந்ததால் கண்காணிப்பு தீவிரம்!
இதனிடையே, கருத்தாளர்களாக ஆசிரியர்கள்..! ஏதுவாளர்களாக ஆசிரியர்கள்..! பயிற்சியாளராக ஆசிரியர்கள்..! என்று அவர்களையே நியமனம் செய்து, அவர்களுக்கு அவர்களே பாடத்தை நடத்திக் கொள்வதுதான் பயிற்சியா? இப்படிப் பயிற்சி, பயிற்சி என்றால், பள்ளிக் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்துவது எப்போது?
வாரம் தோறும் 1,2,3ம் வகுப்புகளுக்கு, ஆசிரியர்களின் திறன்பேசி வழியாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. பயிற்சிப் புத்தகம், பாடப் புத்தகம் இரண்டும் ஒருங்கிணைத்து நடத்தப்பட வேண்டும் என்றால், மாணவர்கள், ஆசிரியர்கள் படும்பாடு ஆட்சி நடத்துபவர்களுக்கு இன்னும் தெரியவில்லையா? இவ்வாறு ஐபெட்டோ அண்ணாமலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry