லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது. விஜய், த்ரிஷா நடிக்கும் லியோ படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் என்ற பேனரின் கீழ் எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேலைகள் நடந்துவந்தன.இந்த நிலையில்தான், அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “விழா அனுமதிச் சீட்டு கோரி ஏகப்பட்ட கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்புக் காரணங்களாலும் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க, படம் குறித்த தொடர்ச்சியான அப்டேட்களை வழங்கிவருவோம். பின்குறிப்பு: பலரும் கற்பனை செய்வதைப் போல, அரசியல் அழுத்தம் காரணமாகவோ, வேறு காரணங்களாலோ இது செய்யப்படவில்லை” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருக்கிறது.
Considering overflowing passes requests & safety constraints, we have decided not to conduct the Leo Audio Launch.
In respect of the fans’ wishes, we will keep you engaged with frequent updates.
P.S. As many would imagine, this is not due to political pressure or any other…
— Seven Screen Studio (@7screenstudio) September 26, 2023
பாடல் வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், செப்டம்பர் 30ஆம் தேதி அந்த விழா நடக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிகழ்வு தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விஜய்யின் மேனஜரும், படத்தின் இணைத் தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பழனிச்சாமி, “இது மிகவும் கடினமான முடிவு” என்று தெரிவித்திருக்கிறார்.
“ஒவ்வொரு ரசிகரும் எந்த அளவுக்கு ஏமாற்றமடைவார்களோ, அதே அளவுக்கு நாங்களும் ஏமாற்றமடைந்திருக்கிறோம். பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்தும், கடுமையாக முயற்சி செய்தும் இந்த கடினமான முடிவைத்தான் எடுக்க வேண்டியிருந்தது. டிக்கெட்டுகள் கேட்டு பல கோரிக்கைகள் வந்ததாலும் விருந்தினர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டும் இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது” என ஜெகதீஷ் குறிப்பிட்டிருக்கிறார்.
Also Read : தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரக்கூடும் எனப் பேசப்படும் நிலையில், இந்த ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக, லியோ படத்தின் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கேட்பதாகவும், அதன் காரணமாகவே நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் அந்த விழாவை நடத்த அனுமதி இதுவரை அளிக்கப்படவில்லை என்றும் சிலர் ட்விட்டரில் பதிவிட்டனர். ஆனால், செவன் ஸ்க்ரீன் நிறுவனம் உடனடியாக அதனை மறுத்தது.
இப்போது இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டிருப்பதால், விஜய் ரசிகர்கள் கடும் கோபமடைந்திருக்கின்றனர். அதனை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியும் வருகின்றனர். #DMKFearsThalapathyVIJAY, #WeStandWithVIJAY, #LeoAudioLaunch, #LeoUpdate என்ற ஹாஷ்டாகின் கீழ் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்.
“துப்பாக்கி, மெர்சல், வாரிசு, ஜெய்லர் படங்களின் ஆடியோ லான்ச்சை நேரு ஸ்டேடியத்தில் நடத்தும்போது பிரச்னை ஏதும் ஏற்படவில்லை. இப்போது சில சாதாரண காரணங்களைக் கூறி, ரத்து செய்வது ஏன்? விஜய்க்கு படம் பிடிக்காததால் ரத்து செய்தாரா? அல்லது அரசியல் அழுத்தமா?” என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். நடக்காத ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு டிக்கெட் அடிக்கப்பட்டது ஏன் என சிலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
Also Read : உலகை அச்சுறுத்தக் காத்திருக்கும் Disease X! கொரோனாவைவிட அதிக உயிரிழப்பு நேரிடலாம் என எச்சரிக்கை!
இந்நிலையில், கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,” நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்பட பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடத்த அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த செயல் கண்டிக்கத்தக்கது. ஜெயிலர் இசை வெளியிட்டு விழா தடையின்றி நடந்தது. நடிகர் விஜய்க்கு அரசியலுக்கு வருகை தருகிறார் என்பதற்காக நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு தரமுடியவில்லை என்பது காவல்துறையின் இயலாமையை காட்டுகிறது” என்றார்.
தொடர்ந்து அரசியலுக்கு வரும் எத்தனிப்பைக் காட்டும் விஜய்க்கு அரசு கொடுக்கும் மறைமுக அழுத்தம் இது என ஏற்கெனவே சமூக வலைதளங்களில் இதுகுறித்து பேசப்பட்டு வந்தது. ஆளும் கட்சி, குறிப்பாக உதயநிதி ஸ்டாலின், லியோ படத்தின் விநியோக உரிமையை தனது நிறுவனத்திற்கு வழங்காததால், லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை அனுமதிக்கவில்லை என பிரபல தமிழ் யூ ட்யூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் கூறியுள்ளார். ஆடியோ லான்ச் நடக்காது என அறிவித்ததில் அரசியல் அழுத்தம் இல்லை எனக்கூறி எங்களை முட்டாள் ஆக்காதீர்கள் என சவுக்கு சங்கர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லியோ ஆடியோ லான்ச் ரத்தானதால் திமுகவுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry