பள்ளி மைதானத்தில் தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தை மூடாமல் அலட்சியம்! வாணியம்பாடி அருகே மாணவிகள் இருவர் மூழ்கி பலி!

0
27
An 8-feet-deep pit has been dug in the school premises near Vaniyambadi, in which stagnant rainwater | Photo Credit - Junior Vikatan

வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளி மைதானத்தில் அலட்சியமாக மூடாமல் விடப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியது. அதில், விளையாட்டாக கால் வைத்த மாணவிகள் 2 பேர் மூழ்கி உயிரிழந்தச் சம்பவம், பெரும் சோகத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள சிக்கனாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கோவிந்தராஜ். இவரது 10 வயது மகள் மோனிகா, அங்குள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்புப் படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு கூலித்தொழிலாளியான வேலு என்பவரின் 14 வயது மகள் ராஜலட்சுமியும், 9-ம் வகுப்புப் படித்து வந்தார்.

Students drown in water

தோழிகளான இந்த 2 மாணவிகளும், நேற்று இரவு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். வரும் வழியில், அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் தோண்டப்பட்டிருந்த 8 அடி ஆழமுள்ள மழைநீர் நிரம்பிய பள்ளத்துக்குள் 2 மாணவிகளும் விழுந்து, தத்தளித்தனர். இந்த மாணவிகளுடன் வந்த சிறுவன், அழுதபடியே ஓடிச்சென்று வீட்டில் தகவல் தெரிவித்துள்ளான்.

ஊர் மக்கள் விரைந்து ஓடிவந்து, பள்ளத்துக்குள் மூழ்கிய 2 மாணவிகளையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், 2 மாணவிகளும் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுபற்றி கூறும் அப்பகுதிமக்கள், “உயிரிழந்த மாணவிகளின் பெற்றோர், பெங்களூருவில் கூலி வேலைச் செய்கின்றனர். அங்கிருந்து உறவினர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளனர். அந்தப் பணத்தை வாங்கி வருவதற்காகத்தான் இந்த மாணவிகள் உறவினர் வீட்டுக்குச் சென்றனர். வரும் வழியில், மழைநீர் தேங்கியிருப்பதை பார்த்த மாணவிகளுக்கு அது பெரிய பள்ளம் என்று தெரியவில்லை. கால் நனைத்து, விளையாடுவதற்காக இறங்கியிருக்கிறார்கள். அதில், 2 மாணவிகளும் மூழ்கி இறந்துவிட்டனர்.

Also Read : தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!

சாலை போடுவதற்காகவும், பள்ளியைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் எழுப்புதவற்காகவும், இந்தப் பள்ளி வளாகத்திலேயே 8 அடிக்கு பள்ளம் தோண்டி ஒப்பந்ததாரர் மண் அள்ளினார். பள்ளத்தை மூடாமல், ஒருமாத காலமாக அப்படியே அலட்சியமாக விட்டதன் விளைவுதான் 2 மாணவிகளின் உயிர் பறிபோயுள்ளது. அலட்சியமாக விடப்பட்ட இந்தப் பள்ளத்தால், மேலும் விபரீதங்கள் ஏற்படாமலிருக்க உடனடியாக அதனை மூட வேண்டும்” என்றனர்.

இந்த நிலையில், பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுச்சென்ற ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உயிரிழந்த மாணவிகளின் உறவினர்கள் இன்றைய தினம் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் இறப்புக்கு கல்வித்துறையும், ஊராட்சி நிர்வாகமும், ஒப்பந்ததாரரும் பொறுப்பேற்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்த பிறகே அவர்கள் கலைந்துசென்றனர். இந்தச் சம்பவம், குறித்து அம்பலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பள்ளத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry