தேசிய தபால் தினம்! மொழி அறிவை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும் போஸ்ட் கார்டு! National Post Day!

0
29
World Post Day is celebrated each year on 9 October, the anniversary of the establishment of the Universal Postal Union in 1874 in the Swiss Capital, Bern.

3.30 Minute(s) Read : 09.10.1874-ல் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் சர்வதேச தபால் ஒன்றியம் (Universal Postal Union) ஏற்படுத்தப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 9-ம் தேதி உலக தபால் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், இந்திய தபால் தினம், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தேசிய அஞ்சல் சேவையின் முக்கிய பங்கை போற்றும் வகையில் இந்திய தபால் தினம் கொண்டாடப்படுகிறது.

போஸ்ட் கார்டு, இன்லன்ட் லெட்டர் போன்றவற்றில் ’நலம், நலம் அறிய ஆவல்’ எனத் தொடங்கி, ‘மற்றவை நேரில்’ என முடியும் கடிதத்தைப் படிக்கும்போது, அந்தக் கடிதத்தை எழுதியவரின் முகம் நம் கண் முன்னே தெரியும். அந்தக் கடிதம், எழுதியவரின் உணர்ச்சியை நமக்குக் கடத்தும். 1990களுக்கு முன்புவரை இணைப்புப் பாலமாக, உறவுப்பாலமாக இருந்த கடிதத்தின் உணர்ச்சிக் கலவையை இன்றைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அதேபோல் அஞ்சல்துறை மூலம் அனுப்பப்படும் பொங்கல் வாழ்த்து அட்டைகள். விதவிதமான வாழ்த்து அட்டைகள், அதிலிருக்கும் வாசகங்கள், கவிதைகளை தேர்ந்தெடுப்பதே, தேர்வு எழுதி பாஸ் ஆவது போல்தான். வரைவதில் ஆர்வம் உள்ள சிறார்கள், 25 பைசா போஸ்ட் கார்டில், பொங்கல் பானை, கரும்புகளை வரைந்து வாழ்த்து அனுப்புவார்கள. அந்தவொரு உணர்ச்சிக் கடத்தலை, இன்றைய வாட்ஸ் அப், முக நூல் வாழ்த்துகளின் மூலம் பெற முடியவில்லை என்பது சத்தியமான உண்மை.

போஸ்ட் கார்டுகள், இன்லன்ட் லெட்டர்கள் அப்போதைய சிறார்களின், இளைஞர்களின் எழுத்தறிவை வளர்த்தது. தமிழை எழுதத் தூண்டியது. இப்போதோ, செல்ஃபோன்களில் தங்கிலிஷில் டைப் செய்து அனுப்பிவிட்டு கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள். செல்ஃபோனைப் போல நாமும் ஜடப்பொருளாக மாறிவிட்டோம். தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் அஞ்சல் அலுவலகத்தில் இருந்து விலகி நிற்பதால், இன்றைய இளைஞர்களுக்கு எழுத்தறிவு மிக மிக குறைந்துபோயுள்ளது என்பது நிதர்சனம்.

கையெழுத்துகளில் புதைந்திருக்கும் அன்புக்கும், நேசத்துக்கும் நிகர் இல்லை. குறிப்பாக அவை காதல் கடிதங்களாக இருக்கும்போது, கடிதங்களில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் உடலில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். கடிதம் எழுதுவதன் மூலம் புதிய விஷயங்களைக் கற்க முடியும். நம் எண்ணத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்த அஞ்சல் அட்டை உதவுகிறது.

இந்தியா போஸ்ட், 1854 அக்டோர் 1ல் டல்ஹவுசி பிரபுவால் நிறுவப்பட்டது. இது இந்தியாவில் தகவல் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முதல் புரட்சிகர நடவடிக்கைகளில் ஒன்றாகும். தேசிய அஞ்சல் தினம் அல்லது இந்திய தபால் தினம், தேசிய அளவில் இந்திய அஞ்சல் அமைப்பின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.

இந்திய தபால் தினம் அக்டோபர் 9 முதல் அக்டோபர் 16 வரை ஒரு வாரத்திற்கு கொண்டாடப்படும்.இந்திய தபால் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களை கவுரவப்படுத்தும் வகையிலிலேயே இந்திய தபால் தினம் அல்லது தேசிய அஞ்சல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்டாலும், மக்கள் இன்னும் பல்வேறு நோக்கங்களுக்காக அஞ்சல் சேவைகளையே நம்பியுள்ளனர். மார்ச் 2017 நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 1,54,965 தபால் நிலையங்கள் உள்ளன.

அஞ்சல் சேவைகளில் முதன்மையான கூறு PIN ஆகும். இது அஞ்சல் குறியீட்டு எண்ணை(PIN CODE) குறிக்கிறது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக இருந்த ஸ்ரீராம் பிகாஜி வேலங்கர், 1972 ஆகஸ்ட் 15 அன்று 6 இலக்க PIN அமைப்பை வழங்கினார். இதன் முதல் இலக்கமானது பிராந்தியத்தைக் குறிக்கிறது. இரண்டாவது இலக்கமானது துணைப் பகுதியைக் குறிக்கிறது. மூன்றாவது இலக்கம் மாவட்டத்தைக் குறிக்கிறது. PINன் கடைசி மூன்று இலக்கங்கள், அந்தந்த முகவரியின் கீழ் வரும் அஞ்சல் அலுவலகத்தின் குறியீட்டைக் காட்டுகின்றன.

Also Read : இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சனையின் பின்னணி! ஹமாஸ் இயக்கம் தோன்றிய வரலாறு! The Israeli-Palestinian conflict!

தபால்துறை என்பது மற்ற எல்லாத் துறைகளையும் விட சிறப்பான ஒன்றாகும். இது தற்பொழுதும் மனித வாழ்வின் அங்கமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அறிவியல் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன் செய்திக் கருவியாய் விளங்கியது தபால் துறை தான். ஆரம்ப காலத்தில் ஒருவர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை அனுப்பப் பயன்பட்டது கடிதங்கள். அவை வெறும் காகிதங்கள் அல்ல. சில கடிதங்கள் காவியமாகவும், வரலாறாகவும் இருக்கின்றன.

உலகின் முதல்தர விளையாட்டுப் போட்டியான ஒலிம்பிக் போட்டி கூட, கடிதப் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஒரு விளைவின் ஞாபகார்த்தமாகவே ஆரம்பிக்கப்பட்டது என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. உத்தியோகப்பூர்வமான தகவல் பரிமாற்றங்களுக்குத் தபால் முறை இன்றும் அவசியமாகின்றது.
ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு தபால்பெட்டிகள் பயன்படுத்தப்படவில்லை. கடிதங்களைக் கொண்டு செல்பவர்களே கடிதங்களைப் பெற்றும் வந்தனர்.

1653 ஆம் ஆண்டு லாங்குவிலே (Longueville) மாகாண மினிஸ்டர் பாகுட் (Minister Fouget) என்ற தபால் அதிபரின் மனைவியின் யோசனையின் பேரில்தால் தபால்பெட்டி அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தை சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் அமைத்துக் கொடுத்தார். சிவப்பு வண்ணத்தில் தபால்பெட்டிகன் வைக்கப்பட்டதன் காரணம் மக்களின் பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் ஆகும்.

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் அஞ்சல் சேவை வழங்கும் நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் உள்ளது. இந்தியா முழுவதும் நாம் தொடர்புகொள்ள 50 பைசா அஞ்சல் அட்டையே போதுமானது. உலக நாடுகள் அனைத்துக்கும் இந்தியாவில் இருந்து அஞ்சல் அட்டையில் தொடர்பு கொள்ள ரூ.15 அஞ்சல் தலை போதுமானது.

Also Read : டாய்லெட்டுக்கு ஃபோன் கொண்டுபோவீங்களா? பைல்ஸ் தொடங்கி மன அழுத்தம் வரை..! பதற வைக்கும் பாதிப்புகள்! Your Phone Is a Germ Factory

வாடிக்கையாளர்கள் சேவையை மேம்படுத்த இந்திய தபால் துறை புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து வருகிறது. பல அஞ்சல் நிலையங்கள் இப்போது இ-காமர்ஸ் விநியோக சேவைகளை வழங்குகிறது. இதன் மூலம் வணிகர்கள் தங்கள் தயாரிப்புகளை உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப முடிகிறது.

பணப்பரிமாற்றம் – சேமிப்புக் கணக்குகள் போன்ற அடிப்படை வங்கிச் சேவைகளையும் தபால்துறை வழங்கி வருகிறது. மட்டுமல்லாமல், பாஸ்போர்ட் புதுப்பித்தல், வரி செலுத்துதல், தொலைபேசி கட்டணம் செலுத்துதல் போன்ற அரசாங்க சேவைகளையும் தபால்துறை வழங்கி வருகிறது. அதேபோல், பார்சல் சேவையும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தியத் தபால் துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ‘My Stamp’ (மை ஸ்டாம்ப்) பற்றி பலருக்கும் தெரியவில்லை. இது என்னவென்றால் நம் புகைப்படங்களையே நாம் அஞ்சல் தலைகளாக பெறும் முறை ஆகும். இதற்கு ஆகும் செலவு ரூ.300. இதனை முறையாக தபால் துறையில் விண்ணப்பித்து ரூ.300-க்கு பணிரெண்டு தபால் தலைகளைத் பெறலாம். இவை அனைத்து வயதினருக்கும் பொருந்தும்.

Also Read : தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!

அஞ்சல் அட்டை பயன்படுத்துவது அரிதாகிவிட்ட நிலையில், இணையத்தில் கடிதம் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு www.postcrossing போன்ற பல இணையதளங்கள் கைகொடுக்கின்றன. இந்த இணைய தளத்தில் பதிவு செய்துகொண்டால், உலகம் முழுவதும் கடிதம் எழுத ஆர்வம் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். உங்கள் சுயவிவரங்கள் மூன்றாம் நபருடன் பகிரப்படாது என இதில் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.

ஒப்பீட்டளவில், வளர்ந்து நாடுகளான ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் இன்றும் அஞ்சல் அட்டை எழுதும் வழக்கம் அதிகமாகவே உள்ளது. உணர்வுகளை எழுத்தின் மூலம் அஞ்சல் அட்டையில் கொட்டும்போது மன அழுத்தம் குறையும் என்பதை நாம் உணர வேண்டும். எனவே இளைஞர்களிடையே, பள்ளி மாணவர்களிடையே போஸ்ட் கார்டு, இன்லன்ட் லெட்டர் எழுதும் பழக்கத்தை பெற்றோர் உருவாக்க வேண்டும். பெற்றோரும் கடிதம் எழுதும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry