போக்குவரத்துத்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா! சாதி ரிதீயான தாக்குதலுக்கு உள்ளாவதாக பகீர் குற்றச்சாட்டு!

0
59
Puducherry Transport Minister Chandra Priyanka, Chief Minister N. Rangasamy.

புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா. 33 வயதான இவர், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு(தனி) சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்துத்துறை ஒதுக்கப்பட்டது.

மேலும் இவரிடம், ஆதி திராவிடர் நலம், வீட்டு வசதி, தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, கலைப் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆகிய துறைகள் உள்ளன. இந்த நிலையில், திடீரென தனது அமைச்சர் பதவியை சந்திர பிரியங்கா ராஜினாமா செய்திருக்கிறார். இவர், புதுச்சேரியின் 41 ஆண்டுகால வரலாற்றில் இரண்டாவது பெண் அமைச்சர் ஆவார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ராஜினாமா கடிதத்தில், “என்னைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் வலையில் சிக்கியிருக்கும் நிலையில், நான் இந்தக் கடிதத்தினை எழுதுகிறேன். ஒரு சட்டமன்ற உறுப்பினராக மாநில அமைச்சராக என் பணியினை மனத் திருப்தியுடனும் மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம்வரை ஓயாமல் செய்து வருகிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்தும், பெண்களும் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும் என பொதுவாகக் கூறுவார்கள்.

ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப்பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளதைப் பார்த்து, களமிறங்கிக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி, மக்களுக்காக இரவுபகலென ஓடி ஓடி உழைத்து வருகிறேன். மக்கள் செல்வாக்கு மூலம் மன்றத்துக்குள் நுழைந்தாலும், சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்பும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.

தலித், பெண் என இரு பெருமைகளோடு இருந்த எனக்கு, அதுதான் மற்றவர்களின் உறுத்தல் என்பது தெரியாமல்போனது. தொடர்ந்து சாதியரீதியிலும், பாலினரீதியிலும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்தேன். சொந்தப் பிரச்னைகளை ஆணாதிக்க கும்பல் கையிலெடுத்துக் காய் நகர்த்துதல் நாகரிகமல்ல… ஆனால், தொடர்ந்து குறிவைக்கப்பட்டேன்.

ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள இயலாதல்லவா… கண்மூடித்தனமாக, அமைச்சராக என் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்பவர்களுக்கு, நான் அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் என் துறைகளில், என்னென்ன மாற்றங்கள், முன்னேற்றங்கள், சீர்பாடுகள் செய்திருக்கிறேன் என்பதை விரைவில் பட்டியலாகச் சமர்ப்பிக்கிறேன் என உறுதியளிக்கிறேன்.

Also Read : தேசிய தபால் தினம்! மொழி அறிவை மேம்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும் போஸ்ட் கார்டு! National Post Day!

என்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து, எனது அமைச்சர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். இதற்காக எனது தொகுதி மக்களிடம் நான் மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். மேலும் என் மக்களுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினராக என் பணியைத் தொடர்ந்து ஆற்றுவேன் என உறுதி அளிக்கிறேன். எனக்கு இந்தப் பதவியினைக் கொடுத்த முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், அவரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். புதுச்சேரியில் பெரும்பான்மையாக உள்ள இரு சமூகங்கள் வன்னியர், தலித். இந்தச் சமூகங்களில் இருந்து வந்திருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகிறார்கள். அந்தச் சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சியில்லாத அரசியலை உறுதிசெய்ய, காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அளித்து, நியாயம் செய்ய வேண்டும்.

Also Read : வாடகை வீட்ல இருக்கீங்களா..? எப்ப சொந்த வீடு அமையும்னு தெரிச்சுக்கோங்க? According to astrology, who will own a house?

மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும், பணத் திமிரினாலும், அதிகார மட்டத்திலுள்ள செல்வாக்கினாலும், பதவிக்கு வந்துவிட துடிப்பவர்களுக்கு இந்தப் பதவியினைக் கொடுத்து, பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம். எனக்கு வாக்களித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக்கி அரசுக்கு முழு ஆதரவு அளித்துவரும் என் மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் அளிக்காமல், தனித் தொகுதியான என் நெடுங்காடு தொகுதிக்கு மக்கள் நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டுகிறேன்.

இதுநாள் வரையில் அமைச்சர் பணியினை திறம்பட செய்வதற்கு உறுதுணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும், எனக்கு உறுதுணையாக இருக்கும் எனது தொகுதி மக்களுக்கும், என் நலன் விரும்பிகளுக்கும் குறிப்பாக என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து அம்மாக்கள், சகோதரிகள், தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை, இரு கரம் கூப்பி தெரிவித்துக்கொள்கிறேன். இறுதியாக, பெண்களுக்கான முன்னுரிமை அதிகாரத்தில் பங்கு, 33 சதவிகித இட ஒதுக்கீடு என மேடைகளில் மட்டுமே முழங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு, எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry