இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலைகோரி, அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானம்! முதல்வர் கோபமும், எரிச்சலும் அடைவதாக ஈபிஎஸ் குற்றச்சாட்டு!

0
25
Leader of Opposition Edappadi K Palaniswami addresses a press conference in the assembly premises

தமிழக சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று தமிழக சிறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர், “கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக 36 இஸ்லாமியர்கள் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையிலிருக்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் 2021-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி போடப்பட்ட அரசாணை 458-ஆல் இவர்கள் விடுதலையாவது தடைபட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன.

எனவே, சிறைவாசிகளின் வயது மூப்பு, உடல்நலக் குறைவு, குடும்பத்தின் வேண்டுகோள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு கருணை அடிப்படையில், அரசு பரிசீலனை செய்து அவர்களை விடுதலை செய்ய முன்வர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். கோரிக்கைகளுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசு மீது சில குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கு பதில் அளிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் வாய்ப்பு தரவில்லை. இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Also Read : போக்குவரத்துத்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா! சாதி ரிதீயான தாக்குதலுக்கு உள்ளாவதாக பகீர் குற்றச்சாட்டு!

பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியார்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கவன ஈர்ப்புத் தீர்மானம் இன்றைக்கு பேரவையில் எடுக்கப்பட்டு, அந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திலே நான் சில கருத்துகளை அதிமுக சார்பில் பேசினேன். அப்போது, 1998ம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று, கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் பலர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனையும், 20 பேர் பல்வேறு சமூக குற்ற வழக்குகளில் தண்டனைப் பெற்றும் சிறையில் உள்ளனர். மொத்தம் 36 இஸ்லாமியர்கள், 20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். திமுக ஆட்சியில் 15.11.2021 அன்று போடப்பட்ட அரசாணையால் இவர்கள் முன்விடுதலையாவது தடைபட்டது என்று இஸ்லாமிய அமைப்புகள் தங்களது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் சிலர் உடல்நலக்குறைவு காரணமாக சிறையிலேயே உயிரிழந்தனர். தற்போது ஆயுள் தண்டனைப் பெற்று சிறையில் இருக்கும் 36 இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே, சுமார் 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளின் வயதுமூப்பு, உடல்நலக்குறைவு, மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் அரசு பரிசீலனை செய்து அவர்களை விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று பேசினேன்.

Also Read : முல்லைப் பெரியாறு அணை பற்றி மலையாள ஊடகங்கள் மீண்டும் விஷமப்பிரச்சாரம்! கருணைக்கொலை செய்யுமாறு விவசாயிகள் கதறல்!

இந்த கேள்விக்கு முதல்வர் பதில் அளிக்கும்போது, திடீரென்று அதிமுகவுக்கு இஸ்லாமியர்கள் மீது என்ன அக்கறை வந்தது? என்று ஒரு கேள்வி எழுப்பினார். அதோடு மட்டுமின்றி, இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு, ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டையும் அவர் வைத்தார். அதற்குத்தான் நான் பதிலளிக்க முற்பட்டேன். ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் நான் பதில் சொல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதைக் கண்டித்து நாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

ரமலான் நோன்புக்காக ஆண்டுதோறும் 5400 டன் அரிசி வழங்கியது அதிமுக அரசு. அதேபோல், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசு கொடுத்து வந்த ரூ.6 கோடி நிறுத்தப்பட்டது. அதை உயர்த்தி ரூ.8 கோடியாக வழங்கியதும் அதிமுக அரசுதான். ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் சென்னையில் தங்கிச் செல்வதற்கான ஹஜ் இல்லம் கட்டியதும் அதிமுக அரசாங்கம்தான். உலாமாக்களுக்கு பென்சன் வழங்க நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசுதான். நாகூர் தர்ஹா குளக்கரையை சீர்செய்வதற்கான நடவடிக்கை எடுத்தது, இப்படி பல திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றியது அதிமுக அரசு.

முதல்வர், இஸ்லாமியர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்று கூறுகிறார். பாதுகாப்பாக இருப்பதை குறைகூறவில்லை. ஆனால், எங்கள் மீது ஏன் முதல்வர் எரிச்சல்படுகிறார்? கோபம் கொள்கிறார்? இஸ்லாமியர்கள் எங்களைச் சந்தித்து, 36 இஸ்லாமிய சிறைவாசிகள் பல ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில்தான் நாங்கள் பேசினோம்” என்று அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry