வன்னியர் இட ஒதுக்கீடு ரத்துக்கு அரசுதான் காரணம்! போதைப் பொருள் தாராளமாக புழங்குகிறது! எடப்பாடி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டு!

0
82

வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு ரத்துக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக அரசுதான் காரணம் என்று எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம், வீரபாண்டியில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் திமுக அரசுதான் காரணம். சரியாக சட்டம் இயற்றி, தாக்கல்செய்து இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தோம். இதைப் பொருத்துக் கொள்ள முடியாத திமுகவும், முதலமைச்சர் ஸ்டாலினும், மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடவில்லை. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியிருக்க வேண்டும்.

அம்பாசங்கர் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அந்த அறிக்கை தாக்கல் செய்திருந்தால், அனைத்து விவரங்களும் அதில் உள்ளது. உயர் நீதிமன்றக் கிளையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதியே சரியான தரவுகள் கொடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால், அரசாங்கத்தின் மீதுதானே தவறு.

மூத்த வழக்கறிஞர்களை வைத்து நீதிமன்றத்தில் வாதாட காரணத்தால்தான், இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த விவகாரத்தில் சரியான முறையில் அதிகாரிகளை நியமித்துதான் இந்த இடஒதுக்கீட்டை அறிவித்தோம். இதுதொடர்பான முழு தரவுகளை மதுரை கிளையில் தாக்கல் செய்யவில்லை. மேல்முறையீடு செய்யும்போது அதைவைத்துதான் அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். வழக்கை விசாரித்த நீதிபதியே சரியான தரவுகளை தாக்கல் செய்யவில்லை என்று கூறிவிட்டார்.

சட்ட வல்லுநர்களை வைத்து ஆலோசிப்பதாக அமைச்சர் துரைமுருகன் தற்போது கூறுகிறார். ஏன் அப்போதே மூத்த வழக்கறிஞர்களை வைத்திருந்தால், இந்தப் பிரச்சினைக்கே இடமில்லாமல் போயிருக்கும். தரவுகளை சரியாக தாக்கல் செய்திருந்தால், நீதி கிடைத்திருக்கும். திட்டமிட்டே இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை.

அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான நடவடிக்கை வெறும் கண்துடைப்பு. எப்போது பார்த்தாலும் திமுக அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் சமூகநீதி குறித்து பேசுகிறார்கள். இதுவா சமூகநீதியை பாதுகாப்பது? ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த, பட்டியலினத்தைச் சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலரை, அமைச்சர் சாதியை சொல்லித் திட்டுகிறார். அவர் மனம் நொந்து ஊடங்களின் வாயிலாக தனது மன அழுத்த்தை தெரிவிக்கிறார். இதற்கு பரிகாரமாக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருந்தால் பரவாயில்லை.

தமிழகத்தில் அவர்களை எங்கு சமூகநீதியை பாதுகாத்துள்ளனர். இதில் இந்தியா முழுவதும் சமூகநீதியை பாதுகாக்கப் போவதாக கூறுகின்றனர். தமிழகத்திலேயே சமூகநீதியை பாதுகாக்காத முதலமைச்சர் இந்தியா முழுவதும் சமூகநீதியை பாதுகாக்கப் போகிறாராம். அமைச்சர் சாதியைச் சொல்லி திட்டுகிறாரே இதுவா சூப்பர் முதல்வர்?

தமிழகம் முழுவதும் 3, 4 மாத காலமாக கூட்டுப் பாலியல் பலாத்காரங்கள் நடந்து கொண்டிருக்கிறது. பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வந்த செய்திகளின் ஆதாரத்தின் அடிப்படையில்தான் இதை கூறுகிறேன். இதை தடுக்க தவறிவிட்டார்கள். இந்த அரசாங்கத்தை மக்கள் ஒரு கையாலாகாத அரசாகத்தான் பார்க்கின்றனர். சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அரசு செயலிழந்துள்ளது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள்கள் தாராளமாக கிடைக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry