கற்பனையில் மிதக்கும் தொடக்கக் கல்வித்துறை..! பள்ளி தொடங்கி மூன்று மாதங்களில் மாணவர்களுக்கு இவ்வளவு பெரிய சோதனையா..?

0
1180
"The process of conducting the first term exams for students from grades one to five in the Department of Elementary Education, and the procedure for recording marks, is completely unacceptable - AIFETO Annamalai." Pic - School Education Director P.A. Naresh & AIFETO Annamalai.

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய கல்விக் கொள்கையினை எதிர்ப்பதில் உறுதியாக உள்ளோம். ஆனால் தொடக்கக் கல்வித் துறையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடத்திய முதல் பருவ தேர்வு முறையும், மதிப்பெண்களை பதிவு செய்யும் நடைமுறையும் ஏற்றுக் கொள்ளவே முடியாத செயல்பாடாக உள்ளது.

தொடக்கக் கல்வித்துறைக்கு உள்பட்ட (2024 – 2025ம் கல்வியாண்டு) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறிவு மதிப்பெண்கள் TNSED SCHOOLS செயலியில் உள்ளீடு செய்தல் தொடர்பாக, தொடக்கக் கல்வி இயக்குநர் 03.10.2024 அன்று செயல்முறை கடிதம் ந.க.எண் 018919/ஜெ2/2024ஐ வெளியிட்டுள்ளார்கள்.

தொகுத்தறிவு மதிப்பெண்கள் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை 10 கேள்விகளுக்கும், ஒரு கேள்விக்கு 6 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் உள்ளீடு செய்யுமாறும், 4, 5ம் வகுப்புகளுக்கு 12 கேள்விகளுக்கும், ஒரு கேள்விக்கு 5 மதிப்பெண்கள் வீதம் ஒவ்வொரு கேள்விக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் உள்ளீடு செய்யுமாறும், அதுவும் 09.10.2024 ஆம் தேதிக்குள் முடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளே 07.10.2024 ஆகும்.

எழுத்துக்கும், செயலுக்கும் இடைவெளி இருத்தல் கூடாது. தொடக்கக் கல்வித்துறையில் ஒன்றியம் வாரியாக உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் எத்தனை? ஓராசிரியர் பள்ளிகள் எத்தனை? மூன்று ஆசிரியர் பள்ளிகள் எத்தனை? ஐந்து ஆசிரியர் பள்ளிகள் எத்தனை? வகுப்பிற்கு 30 மாணவர்கள் 40 மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் எத்தனை? இந்த புள்ளி விவரத்தினை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

தொடக்கக் கல்வித் துறையில் பத்தாம் வகுப்பு,12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் முறையினை ஏதும் அறியாத தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டுமா? அப்படி நடைமுறைப்படுத்துவது ஏற்புடையதாக ஒரு போதும் அமையாது. எமிஸ் பணிகளை மேற்கொள்வதற்கு பணியாளரை நியமனம் செய்தும் ஆசிரியர்களை இப்பணியினை மேற்கொள்ளச் சொல்வது ஏற்புடையதாகுமா..?

Also Read : லீவு கிடையாது, ஒன்னுக்கு கூட போக முடியாது! ஊழியர்களை கசக்கிப் பிழியும் சாம்சங் நிறுவனம்! துணைபோகும் தமிழக அரசு! நீடிக்கும் போராட்டம்!

தொடக்கக்கல்வி இயக்குனராகிய நீங்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராகப் பணியாற்றி இருப்பீர்கள் என்று நம்புகிறோம். மாவட்ட ஆட்சியாளர்கள் பள்ளிகளில் பார்வையிட்டு வெளியிட்டு வருகிற கருத்து நமக்கு ஒருபோதும் அமைய வேண்டாம்.

தொடக்கக் கல்வி இயக்குனரும், இணை இயக்குனரும் ஒரு கடிதத்தினை அனுப்புவதற்கு முன்னர் நாம் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றுகிறோம் என்பதனை நினைவில் கொண்டு செயல்படுத்த பெரிதும் கேட்டுக் கொள்கிறோம். பள்ளி தொடங்கி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இம்மாணவர்களுக்கு இவ்வளவு பெரிய சோதனையா..?

மறு பரிசீலனை செய்ய வேண்டுகிறோம். வாய்ப்பு இல்லை எனில் எக்ஸ் தளத்திலும், பெரு ஊடகங்கள் மத்தியிலும், பொது வெளியிலும் இந்த நிலைமையினை வெளியிடுவதை தவிர வேறு வாய்ப்பு இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. யதார்த்த நடைமுறையினை பகிர்ந்து கொள்கிறோம்.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry