67 ஆண்டுகளுக்கு முன்னால் நள்ளிரவில் தேவிகுளத்தில் தன்னுடைய வீட்டில் தமிழனாக தூங்கப்போன ஒரு தேயிலைத் தோட்ட தொழிலாளி, காலையில் எழும்பும்போது மலையாளியாக எழுந்தான். மொழிவழிப் பிரிவினை எனும் பெருந்துயர், ஒருநாள் இரவில் அவனை மலையாளி ஆக்கியது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீதியரசர் பசல் அலி தலைமையிலான மொழி வழி பிரிவினை கமிட்டி கொடுத்த மொழி சார்ந்த நிலவியல் வரையறை, ஒரு பெருத்த மோசடி என்று நான் மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கானோர் இன்றைக்கு பதிவு செய்து கொண்டிருக்கிறோம்.
ஆந்திராவின் கஞ்சம், விசாகப்பட்டினம், கோதாவரி, கிருஷ்ணா, கர்னூல், நெல்லாரி, குண்டூர், அனந்தபூர், பெல்லாரி, சித்தூர், கடப்பா மாவட்டங்கள், கர்நாடகத்தில் தெற்கு கனரா மாவட்டம், கேரளாவில் மலபார் மாவட்டம் அதாவது கொச்சிக்கு வடக்கே காசர்கோடு வரை உள்ள பகுதி, மத்திய கேரளாவில் இடுக்கி மாவட்டம், தெற்கு கேரளாவில் நெடுமங்காடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டையின் பாதி நிலம், என தமிழகம் வகைதொகை இல்லாமல் பசலலியால் துண்டாடப்பட்டது.
காவிரி பிறப்பெடுக்கும் குடகு மாவட்டம் தமிழகத்தோடு இணைந்திருக்க வேண்டும். தமிழகத்தில் அன்று வாழ்ந்த சில பிற்போக்கு அரசியல்வாதிகளால் அதையும் இழந்தோம். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ‘வடவேங்கடம் ஆயிடை தென்குமரி’ என்று தொல்காப்பியத்திலே வரலாற்றை வரையறுத்த ஒரு நாடு, இன்று எல்லைகளை இழந்து பரிதவிப்பதோடு, எல்லைகளுக்குள்ளும் மொழிச் சிக்கலை எதிர்கொண்டு நிற்கிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா, பந்தலூர் தாலுகாக்களிலிருந்து தாயகம் திரும்பிய அப்பாவி தமிழர்கள் விரைவில் வெளியேற நேரிடலாம். மொழி வழி பிரிவினையால் தமிழகம் இழந்த பரப்பு 85 ஆயிரம் சதுர கிலோமீட்டர்கள். கேரளாவிடம் இழந்தது மட்டும் 1400 சதுர கிலோமீட்டர்.
வருத்தங்களை பதிவு செய்வதை விட, வரலாற்றை பதிவு செய்ய விழைகிறேன்..! இன்று தமிழக நாள்,
கேரளாவில் இன்று பிறவி தினம், ஆந்திராவில் இன்று ஜென்ம தினம். நவம்பர் 1 என்றாலே நா தழுதழுக்கிறது எனக்கு. ஒருவனுடைய நிலம் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இன்றைக்கு பாலஸ்தீனம் நமக்கு உரத்து அறிவித்துக் கொண்டிருக்கிறது.
Also Read : இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சனையின் பின்னணி! ஹமாஸ் இயக்கம் தோன்றிய வரலாறு! The Israeli-Palestinian conflict!
குற்ற உணர்வு எதுவுமற்ற நம்முடைய தலைவர்களால், இந்த தினத்தை கடந்து போகக்கூடிய ஒரு தினமாகவே நான் கருதுகிறேன். தன்னுடைய தடாலடி முடிவுகளால் தமிழகத்தையே கிடுகிடுக்க வைத்த ஈவெரா, தேவிகுளம் பீர்மேடு விடயத்தில் எந்த தடாலடி முடிவையும் கடைசிவரை எடுக்கவே இல்லை.
அவருக்கு முன்னால் இருந்த ஒரே ஒரு அஜெண்டா, மொழி வழி பிரிவினை கமிட்டியின் உறுப்பினரான சர்தார் பணிக்கர் தன்னை சந்தித்து விட்டார் என்பது மட்டுமே ஆகும். ஆசுவாசப்படுத்துதலில் இது ஒரு வகை. ஒரு இனத்திற்கு அதனுடைய பண்பாடு கலாச்சாரம் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியமானது நிலம்.
அந்த நிலத்தை மையப்படுத்திதான் இந்த உலகம், தோன்றிய நாளிலிருந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட நிலம் கண்முன் பறிபோவது தெரிந்தும், கடமையாற்ற வேண்டிய இடத்தில் இருந்த ஈவெரா, வாய் மூடி மவுனியானதுதான் வரலாற்றுத் துரோகம்.
ஈ.வெ.ராமசாமி என்பவரை, இந்த தமிழ்ச்சமூகம், தந்தை என்றும், பெரியார் என்றும் அழைத்து ஆனந்தப்படுத்தி, உச்சி முகர்ந்து கொண்டாடியதையெல்லாம், பணிக்கர் என்கிற ஒரு மோசடிப் பேர்வழிக்காக பவிசாய் காற்றில் பறக்க விட்டு விட்டாரே என்பதுதான், இந்த நாள் வரையிலான நம்முடைய தீரா வலி. தேவிகுளம் போனதால் ஒரு ஊர் போனதாக நினைத்துக் கொண்டார் ஈவெரா.
ஆனால் உண்மை அதுவல்ல..! தேவிகுளம் போனதால் ஆனையிரங்கல் அணையில் நெடுப்பமாய் தேங்கிக்கிடக்கும் தண்ணீர் போனது. அத்தனை பெரிய அணையிலிருந்து போடி மெட்டைக் குடைந்து, கொட்டக்குடி ஆற்றோடு ஆனையிரங்கல் தண்ணீரை சேர்த்து இருக்க முடியும். குண்டல அணையை மாட்டுப்பெட்டி அணையோடு சுரங்கத்தின் மூலமாக இணைத்து, செண்டுபாறை, சிட்டிபாறை வழியாக எல்லப்பட்டிக்கு தண்ணீரை திருப்பி, டாப் ஸ்டேஷன் வழியாக தலை கீழாக இறக்கினால் ஆண்டுக்கு 10 டிஎம்சி தமிழகத்திற்கு உறுதி.
மேல் வாகுவாரையில் துவங்கும் பாம்பாறு, தேயிலைத் தோட்டங்களை ஊடறுக்கும் சிற்றோடைகளோடு இணைந்து, லக்கம் எனுமிடத்தில் நீர்வீழ்ச்சியாக பிரவாகம் எடுத்து, மறையூர் அஞ்சுநாட்டை அடைகிறது. மறையூரில் பாம்பாற்றை எந்த இடத்திலும் மறிக்காமல், தூவானத்தில் பெரு நீர்வீழ்ச்சியாக பிரவாகமெடுக்க விட்டால், இந்திராகாந்தி தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் ஆங்காங்கே விரவிக் கிடக்கும் பசுமைமாறாக் காடுகளில் இருந்து புறப்படும் சிற்றோடைகளோடு இணைந்து ஆண்டு முழுவதும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணையில் நீர் ததும்பிக் கிடந்திருக்கும்.
வரலாற்று சிறப்பு மிகுந்த மறையூர் நகரம் நம் கையை விட்டு போயிருக்காது. மைசூர் வனப்பகுதிகளுக்கு அடுத்து மறையூர் வனப்பகுதியில் தான் சந்தனமரம் அதிகமாக இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். ஆண்டுக்கு அந்த சந்தனத்தினுடைய வர்த்தகம் மட்டும் 600லிருந்து 700 கோடி ரூபாய்.
மறையூரின் தரச்சான்று பெற்ற மண்டை வெல்லங்களை மலையாளச் சகோதரர்கள் சொந்தம் கொண்டாடி இருக்க மாட்டார்கள்.
உலக சுற்றுலா வாசிகளால் வியந்து பார்க்கப்படும், ஆதி தமிழர்களான முதுவான்கள் வாழும் இடமலைக்குடியை, ஆதிச்சநல்லூர், கீழடி வரிசையில் இலகுவாக இணைத்திருக்க முடியும்.
Kannan Devan Hills Plantations என்ற பெயரில், பள்ளிவாசல் மற்றும் பெரியகானல் பகுதிகளை மட்டுமே பூஞ்சார் சமஸ்தானத்திடம் குத்தகைக்குப் பெற்று, இன்று அதையே தன்னுடைய ஆக்கிரமிப்பின் மூலம் 48,000 ஹெக்டேர்களாக விரிவடையச் செய்திருக்கும் ரத்தன் டாட்டா கும்பலை சுளுக்கு எடுத்திருக்க முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் தேயிலைத் தோட்டங்களின் மூலம் டாட்டாவும், Harrison Malayalam limitedம், தலையார் டீ யும், அப்பாவித் தமிழர்களினுடைய உழைப்பை உறிஞ்சி வாரிச் சுருட்டும் 1,800 கோடி, தமிழகத்திற்கு வந்திருக்கும். வட்டவடை, கொட்டகம்பூரிலிருந்து பேரிஜம் ஏரி வழியாக கொடைக்கானலை இணைக்கும் எஸ்கேப் ரோட்டை சீரமைத்து சுற்றுலாவையும், வர்த்தகத்தையும் பேணியிருக்க முடியும்.
மூணாறில் இருந்து டாப் ஸ்டேஷன் வரை, சாலையோரங்களில் ஊர் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலா வாசிகளுக்கு, பச்சைப் பசேல் என கேரட்டுகளை பத்துக்கும் இருபதுக்கும் விற்கும் அவலம் முடிந்து, குரங்கணி வழியாக போடிக்கோ, பேரிஜம் ஏரி வழியாக கொடைக்கானலுக்கோ கொண்டு சென்று வர்த்தகமாக மாற்றியிருக்க முடியும்.
குரங்கணியிலிருந்து டாப் ஸ்டேஷனை இணைத்து, அங்கிருந்து மூணாறுக்கும், மூணாறில் இருந்து லாக்காடு வழியாக சூரியநெல்லிக்கும், இணைப்புச் சாலை அமைத்து, அங்கிருந்து தமிழகத்தின் ஒரு பகுதியாக இன்றளவும் நீடிக்கும் கொழுக்குமலையை இணைத்திருந்தால் ஆண்டுக்கு சுற்றுலா மூலம் தமிழகத்திற்கு கிடைக்கக்கூடிய வருவாய் மட்டும் ஆயிரம் கோடியை தாண்டும்.
நீலக்குறிஞ்சி சரணாலயம், இரவிகுளம் தேசிய பூங்கா, மதிகெட்டான் சோலை தேசிய பூங்கா, பாம்பாடும் சோலை தேசிய பூங்கா, இந்திராகாந்தி வன உயிரின உய்வகம், லக்கம் நீர்வீழ்ச்சி, தூவானம் நீர்வீழ்ச்சி, சித்ராபுரம் நீர்வீழ்ச்சி என தேவிகுளம் தாலுகாவில் பரந்து விரிந்து கிடக்கும் அத்தனை அமுதசுரபிகளிலிருந்தும், ஆண்டொன்றிற்கு குறைந்தது 400 கோடியில் இருந்து 500 கோடியை தமிழக கஜானாக்களில் சேர்த்திருக்க முடியும்.
Also Read : புறா இவ்ளோ டேஞ்சரா? புறா எச்சத்தால் வரும் 60க்கும் மேற்பட்ட நோய்கள்! Pigeon droppings causes 60 diseases!
கே.எம். பணிக்கர் – ஈவெரா சந்திப்பு, ஒரு இனத்தின் மிகப்பெரிய மாண்பையே குலைத்ததோடு, கோடிக்கணக்கான ரூபாய்கள் வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி, பெருத்த நீர் சிக்கலுக்குள்ளும் தமிழகத்தை தள்ளிவிட்டு விட்டது. குளமாவது மேடாவது என்கிற பெருந்தலைவர் காமராஜரின் வார்த்தைகளுக்கு பின்னால் இருப்பதும் ஒரு சந்திப்பு மட்டுமே.
ஈவெரா – பணிக்கர் இடையிலான அந்த சந்திப்பு மட்டும் நடக்காது போயிருந்தால், தேனி மாவட்டத்தில் இரண்டு மூன்று தாலுகாக்கள் கூடியிருப்பதோடு, குறைந்தது ஆண்டுக்கு 50 முதல் 60 டிஎம்சி தண்ணீரையும் பெற்றிருக்க முடியும். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களும், ஆண்டு முழுவதும் முப்போகம் விளைந்து செழித்திருக்கும்.
எல்லாவற்றையும் இழந்ததோடு, தேவிகுளத்தில் 140 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து, உழைத்து, தங்களுடைய செந்நீரையும், கண்ணீரையும் சிந்தி வாழக்கூடிய தமிழர்கள், நேற்று இந்த பகுதிகளுக்குள் வந்த மலையாள மக்களிடத்திலே அடிமையாக வாழவும் பழகிவிட்டார்கள்.
மலையாள அறிவாளியான பணிக்கர், தேவிகுளத்தை முற்றுமுழுதாக ஆய்வு செய்துவிட்டு, திருச்சிக்கு வந்தது போல, ஈவெராவும் திருச்சியில் இருந்து திண்டுக்கல், தேனி, போடி வழியாக தேவிகுளத்திற்குச் சென்று முழுமையாக ஆய்வு செய்திருந்தால் விட்டுக்கொடுக்க சம்மதித்திருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய கடந்த கால நடவடிக்கைகளை அடிப்படையாக வைத்து பார்த்தால், மனமுவந்து தான் அந்த விட்டுக்கொடுத்தலுக்கு அவர் சம்மதித்திருக்க வேண்டும் என்று முடிக்கிறேன்.
தென் எல்லைக்காகவும், தேவிகுளம் பீர்மேடு பகுதிகளுக்காகவும், வீரத்துடன் போராடிய மாமனிதர் மார்சல் நேசமணியின் மனநிலையில் இந்த ஈவெரா இருந்திருந்தால், இந்தியாவில் பெரிய மாநிலமாக உத்திர பிரதேசம் இருந்திருக்காது, தமிழ்நாடு இருந்திருக்கும். நான் பிறந்த செங்கோட்டை இன்று தமிழகத்தோடு இணைந்த நாளும் இதுதான். வரலாற்றை நேர் செய்யும் காலம் ஒன்று வரும், அந்தக் காலத்திற்காக காத்திருக்கிறேன்..!
கட்டுரையாளர் – ச. அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry