பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்கவே, ஆனவச்சால் கார் பார்க்கிங் திட்டம்! அம்பலமாகும் கேரளாவின் சதித்திட்டம்!

0
21
Anavachal car parking area | File Image

நாங்களும் இன்று முடியும் நாளை முடியும் என்று 40 ஆண்டுகளாக காத்துக் கிடக்கிறோம். ஆனால் இரண்டு மாநில உறவை தொடர்ந்து சீர்குலைக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை மட்டும் முடிவுக்கு வந்த பாடில்லை. எனக்கு ஆறு வயதாகும் போது ஆரம்பித்த முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, இன்று வரை தீராச்சிக்கலாக உருவெடுத்து இருக்கும் நிலைக்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டுமே.

ஆனால் பரந்து விரிந்த மனதோடு, இந்திய அமைச்சரவைச் செயலாளரான ஜான் சைல்டு கேனிங்டனும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் வெங்கட்ராமாவும் முல்லைப் பெரியாறு அணைக்காக செய்து கொண்ட ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு என்றாலும், ஒப்பந்தம் முடிவுற்ற பிறகு இதே ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் எழுதி கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

திருவிதாங்கூரோடு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட 8 ஆயிரத்து சொச்சம் ஏக்கருக்கும், தலா ஏக்கர் ஒன்றுக்கு 30 ரூபாய் வீதம் இப்போதும் கேரள மாநில அரசாங்கத்திற்கு செலுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் 1970ஆம் ஆண்டு கேரள முதல்வராக இருந்த அச்சுதமேனனுக்கும், தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பெரியாறு அணையினுடைய நீர்மட்டம் 136 அடியாக ஒரே நாளில் குறைக்கப்பட்டது.

Also Read : முல்லைப் பெரியாறு அணை பற்றி மலையாள ஊடகங்கள் மீண்டும் விஷமப்பிரச்சாரம்! கருணைக்கொலை செய்யுமாறு விவசாயிகள் கதறல்!

பத்தாண்டுகளுக்குள் முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்தி விட்டு, மீண்டும் 152 அடியாக தண்ணீரை தேக்கி கொள்ளலாம் என்பது ஒப்பந்தம். அணையின் நீர்மட்டத்தை குறைத்ததை சாக்காக பயன்படுத்திக் கொண்ட கேரள மாநில அரசியல்வாதிகள், அவசரகதியில் அணையில் நீர்தேங்கும் பகுதிகளில் கட்டடங்களை கட்ட ஆரம்பித்தார்கள்.

இன்னொரு மாநிலத்தோடு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளப்பட்ட பகுதியில் சொகுசு விடுதிகளை கட்டுகிறார்களே இந்த மலையாளத்து அரசியல்வாதிகள் என்று கேரள மாநில அரசு ஒருபோதும் கவலைப்படவில்லை. மனம் போல போக்கில் கட்டுமானங்களை செய்ய அனுமதித்தார்கள். ஒப்பந்த காலமான பத்தாண்டு நிறைவு பெற்றுவிட்ட பிறகும் கூட, அணையினுடைய நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது தொடர்பான, எந்த வாய்ப்பையும் கேரள மாநில அரசு தமிழகத்திற்கு கொடுக்கவில்லை.

நாட்கள் செல்லச் செல்ல அணையின் நீர் தேங்கும் பகுதிகளில் கட்டுமானங்கள் கூடியதே தவிர குறையவில்லை. இந்த நிலையில் தான் கடந்த 2016 ம் ஆண்டு, ஒரு நல்ல நாளில், முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேங்கும் பகுதியான ஆனவச்சாலில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஒரு கார் நிறுத்துமிடத்தை கட்ட முடிவெடுத்தது கேரள அரசு.

Also Read : கேரளா இடுக்கி மாவட்ட ஆக்கிமிப்புக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? நிலத்தை மீட்டு தமிழ் தோட்டத் தொழிலாளர்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை!

தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆனவச்சால் கார் பார்க்கிங் விடயத்தில் கடும் நெருக்கடியை ஆரம்பத்திலேயே கொடுத்திருந்தால், இந்த அளவிற்கு பிரச்சனை வளர்ந்து இருக்காது. கார் நிறுத்தும் இடத்தில் காட்ட வேண்டிய நெருக்கடியை, உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தணித்துக் கொண்டோம். தமிழக அரசின் மனு மீது உரிய விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், கார் பார்க்கிங் கட்டுமான விடயமாக அனுமதி அளிக்க முடியாது என்று கேரள அரசின் மீது கடுமை காட்டியது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கேரளா எப்போதுமே மதிப்பதில்லை என்பதன் தொடர்ச்சியாக, கார் பார்க்கிங் கட்டுமான வேலையை உச்ச நீதிமன்றத்தின் எதிர்ப்பையும் மீறி கட்டத் தொடங்கியது. அடுத்த மனுவை தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், கார் பார்க்கிங் விடயத்தில் தரைப் பகுதியை பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் எவ்வித கட்டுமானங்களும் கூடாது என்று தீர்ப்பளித்தது.

இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட கேரள மாநில அரசு, பார்க்கிங்கின் இரண்டு புறமும் காம்பவுண்ட் சுவர் எழுப்ப ஆரம்பித்தது. மறுபடியும் உச்சநீதிமன்றத்தை நோக்கி ஓடியது தமிழ்நாடு அரசு. இந்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்த நீதியரசர் கே.எம். ஜோசப் விசாரணையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். நீதியரசர் பாப்டே அமர்வில் வழக்கு விசாரிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஆனவச்சால் பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காட்டி வாதாடியது.

உச்ச நீதிமன்றத்திடமே வந்து பொய் சொல்கிறீர்களா..? உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்து வைத்தார் நீதியரசர் பாப்டே. அத்துடன் இதுகண்ட 15 நாட்களுக்குள் எவ்வித கட்டுமானமும் தாங்கள் ஆனவச்சாலில் செய்யவில்லை என்று கேரள மாநில அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். ஆனால் வழக்கம்போல் இதையும் கிடப்பில் போட்டது கேரள மாநில அரசு.

Also Read : காவிரி விவகாரத்தில் தத்தளிக்கும் திமுக! நட்பு வேறு, மாநில நலன் வேறு என்பதில் தெளிவாக இருக்கும் கர்நாடக, கேரள முதல்வர்கள்!

எதற்கும் மசியாத கேரள மாநில அரசு, ஆனவச்சாலில் கட்டுமானப் பணிகளை ஓரளவு நிறைவு செய்து விட்டது என்றே சொல்லலாம். கடந்த 2018 செப்டம்பர் மூன்றாம் தேதி அன்று, தென்னக பசுமைத் தீர்ப்பாயம் கொடுத்த உத்தரவின்படி, ஆனவச்சால் கார் பார்க்கிங்கில் உள்ள பெயர் பலகையும், சுற்றி கட்டப்பட்டிருந்த வேலிகளும் அகற்றப்பட்ட நிலையில், காம்பவுண்ட் சுவர்களாக அது எழுந்து நிற்கிறது.

ஆனவச்சால் நீர்பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து தேக்கடி ஏரிக்கான கார் பார்க்கிங்கை கேரள அரசு உருவாக்கும் நிலையில், கார் பார்க்கிங் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. புதன் கிழமையன்று வழக்கை விசாரித்த நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில், கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும். இது குறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” என தெரிவித்தார். வழக்கின் விசாரணையை நவம்பர் 28 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். நேற்று வரை நாம் குத்தகை பணம் செலுத்திய ஒரு இடத்தையே இன்றைக்கு கேள்விக்குறி ஆக்கி இருக்கிறது கேரள மாநில அரசு. எப்போது தீரும் இந்த சகோதரச் சண்டை?

கட்டுரையாளர் : ச. அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry