
மரணம் என்பது எல்லா செயல்பாடுகளும் முடிவடையும் ஒரு நிலை என்று நம்மில் பலர் நம்புகிறோம். ஆனால், சமீபத்திய மருத்துவ ஆய்வுகள், குறிப்பாக மனித மூளையில், மரணத்திற்குப் பிறகு கூட சில செல்கள் தொடர்ந்து செயல்படுவதையும், சில நேரங்களில் அதிகரித்தளவில் செயல்படுவதையும் வெளிப்படுத்துகின்றன. இது உயிரும் மரணமும் இடைப்பட்ட மூன்றாம் நிலை (Third State of Existence) என்ற புதிய உயிரியல் கருத்தை உறுதிப்படுத்துகிறது.
மரணத்திற்குப் பிறகு செல்கள் உயிருடன்?
இந்த ஆய்வு, உயிரணுக்களின் (Cells) அற்புதமான தகவமைப்புத் திறனையும், மரணத்திற்குப் பிறகும் சில செல்கள் செயல்படக்கூடிய ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. சில சமயங்களில், உயிருடன் இருக்கும்போது கூட இல்லாத புதிய திறன்கள் இந்த செல்களுக்கு கிடைக்கலாம் என்பது இந்த ஆய்வின் முக்கியமான கண்டுபிடிப்பு.
பாரம்பரிய எல்லைகளை மீறும் மூன்றாம் நிலை
மரணமடைந்த விலங்குகள் மற்றும் மனிதர்களின் செல்களில் கூட, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது, ‘சட்டரீதியான மரணம்’ என்ற வரையறைக்கு சவால் எழுப்பும் வகையில், புதிய உயிரணு அமைப்புகள் உருவாகும் திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வை வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியர் பீட்டர் நோபல் மற்றும் ஹோப் நேஷனல் மெடிக்கல் சென்டர் விஞ்ஞானி அலெக்ஸ் போஜிட்கோவ் ஆகியோர் நடத்தியுள்ளனர்.
மூன்றாம் நிலையில் செல்கள் செயல்படும் விதம்
மரணத்திற்குப் பிறகு, சில செல்கள் சத்துக்கள், ஆக்ஸிஜன், உயிரி மின்சாரம் அல்லது உயிர்வேதியியல் சமிக்ஞைகள் கிடைக்கும் போது, புதிய பலசெல்லுலர் உயிரினங்களாக மாறும் ஆற்றல் பெற்றுள்ளன. 2021-இல், அமெரிக்க விஞ்ஞானிகள் தவளைகளின் தோல் செல்களை ஆய்வகத்தில் மாற்றி, தானாகவே இயங்கும் “ஜீனோபோட்கள்” (Xenobots) என்ற உயிருள்ள இயந்திரங்களை உருவாக்கியுள்ளனர். இவை தங்களைத் தாங்களே புதுப்பித்து, நகர்ந்து, பொருள்களை சேகரித்து, சுய-குணப்படுத்தும் திறன்கள் கொண்டவை.
மனித நுரையீரல் செல்கள் – ஆந்த்ரோபோட்கள்
மனித நுரையீரல் செல்களும் தானாகவே ஒழுங்கமைக்கப்பட்டு, “ஆந்த்ரோபோட்கள்” (Anthrobots) என்ற சிறிய உயிரினங்களாக மாற முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை தங்களை ஒருங்கிணைத்து, அருகிலுள்ள சேதமடைந்த நரம்பு செல்களை குணப்படுத்தும் திறனும் பெற்றுள்ளன.
மூன்றாம் நிலையை பாதிக்கும் காரணிகள்
இந்த மூன்றாம் நிலை நிலைமைக்கு சூழல், வெப்பநிலை, ஆற்றல் கிடைப்பது, உயிரினத்தின் வயது, ஆரோக்கியம், பாலினம், இன வகை போன்றவை முக்கிய பங்காற்றுகின்றன. உயிரணுக்கள் இந்த நிலையில் நீடிக்க முடியுமா என்பதை இவை தீர்மானிக்கின்றன.
மரணத்திற்குப் பிறகு ‘ஜாம்பி’ செல்கள்!
அமெரிக்காவின் இளினாய்ஸ் பல்கலைக்கழக ஆய்வில், மனித மூளையில் மரணத்திற்குப் பிறகு சில செல்கள் மிகச் செயலில் இருந்து, பெரிதாக வளர்ந்தும் காணப்பட்டன. குறிப்பாக, ‘கிளியல்’ (Glial) எனப்படும் அழற்சி செல்கள், மரணத்திற்குப் பிறகு பல மணி நேரம் தங்கள் செயல்பாட்டை அதிகரித்து, நீண்ட கைப்பிடி போன்ற அமைப்புகளை வளர்த்துக் கொண்டன. இந்த செல்கள் மூளையில் ஏற்பட்ட சேதங்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
Also Read : அழற்சியை விரட்டணுமா? தினசரி ஒரு கப் இந்த டீ போதும்! – அதிசய பானங்கள்! Anti-Inflammatory Teas!
புதிய சிகிச்சை சாத்தியங்கள்
இந்த மூன்றாம் நிலை, புதுமையான சிகிச்சைகளுக்கான வாய்ப்புக்களையும் திறக்கிறது. உதாரணமாக, நோயாளியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உயிருள்ள திசுக்களில் இருந்து உருவாக்கப்படும் ஆந்த்ரோபோட்கள், நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டாமல் மருந்துகளை வழங்கலாம். இவை உடலில் செலுத்தப்பட்டபோது, பெருந்தமனி தடிப்பு அல்லது சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் போன்ற நோய்களுக்கு தீர்வாக இருக்கலாம்.
மூன்றாம் நிலை உயிரியல் – மரணத்திற்கும் உயிருக்கும் அப்பால்
இந்த கண்டுபிடிப்பு, மரணம் என்பது உடனடியாக எல்லா செயற்பாடுகளும் முடிவடையும் நிலை அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. மரணத்திற்குப் பிறகு கூட, செல்கள் புதிய செயல்பாடுகளை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இது மருத்துவ ஆய்வுகளில் மரணத்திற்குப் பிறகு பெறப்படும் திசுக்களைப் பயன்படுத்தும் முறைகளை மாற்றும் வகையில் உள்ளது.
கடைசியாக…!
இந்த மூன்றாம் நிலை, உயிரியல் ஆராய்ச்சியாளர்களுக்கு புதிய சாத்தியங்களைத் திறக்கிறது. மரணத்திற்குப் பிறகு செல்கள் எப்படி செயல்படுகின்றன, எந்த ஜீன்கள் அதிகரிக்கின்றன, எந்தவை குறைகின்றன என்பதைக் கண்டறிந்து, எதிர்காலத்தில் நவீன சிகிச்சை முறைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த ஆய்வு, உயிருக்கும் மரணத்திற்கும் இடையே ஒரு தெளிவான எல்லை இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. மரணத்திற்குப் பிறகும் செல்கள் செயல்பட்டு, புதிய உயிரினங்களை உருவாக்கும் திறன், எதிர்கால மருத்துவத்தில் புதுமையான சிகிச்சைகள் மற்றும் புரிதல்களுக்கு வழிவகுக்கும்.
படம் & மூலம் : எர்த்.காம்
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &