பயணம் என்றலே நீண்டதூரம் பயணிப்பதை தான் பலரும் நினைக்கிறார்கள். ஒரு இடத்தில் இருந்து அருகில் உள்ள இடத்திற்கு செல்வதும் பயணம்தான். நமது வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதும் பயணம்தான். இத்தகைய பயணங்களுக்கும் பெரும்பாலானோர் பயன்படுத்துவது இருசக்கர வாகனம் எனப்படும் பைக். நீண்ட தூரம் நாம் மேற்கொள்ளும் பயணத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை அருகில் பயணம் செய்வதற்கு நாம் கொடுப்பதில்லை.
எந்தவொரு பயணத்திற்கும் பாதுகாப்பு என்பது தேவை. பலரும் தினசரி பைக்கை பயன்படுத்துகிறார்கள். இதை மாதத்தில் கணக்கிட்டால் பல ஆயிரம் கிலோ மீட்டர் வரும். இப்படி நாம் பைக்கை பயன்படுத்துவதால் முதுகு வலி என்பது தவிர்க்கமுடியாத அவஸ்தையாக மாறும். பைக் உதவியுடன் எங்கும் சென்றடைவது எளிது என்பது உண்மைதான். ஆனால், தினமும் பைக்கில் பயணம் செய்வதால் பலர் முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படுவதை புறக்கணிக்க முடியாது. ஏற்கனவே வலி உள்ளவர்களுக்கு இந்த வலி என்பது மேலும் அதிகரிக்கும்.
டூவீலர்களில் விதம் விதமான மாடல்கள் வருகின்றன. ஃபேன்சி பைக்குகளை ஓட்ட விரும்பும் மனநிலை அதிகரித் திருக்கிறது. 20 வயதில் இருக்கும் ஓர் இளைஞருக்கு அப்படிப்பட்ட பைக்கை ஓட்டுவது சிரமமாக இல்லாமல் இருக்கலாம். அதுவே வயதானவர்களுக்கு அப்படிப்பட்ட டூவீலர்களை ஓட்டுவது நிச்சயம் உட்காரும் பொசிஷனை பாதித்து, அதன் தொடர்ச்சியாக முதுகுவலியைத் தரும்.
பைக் ஓட்டும்போது கடுமையான முதுகு வலி ஏற்படுவதை தவிர்க்க வேண்டுமென்றால், முதலில் நீங்கள் பைக்கில் எப்படி அமர்கிறீர்கள்? என்பதில் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதாவது ரைடிங் பொஷிஷன் நன்றாக இருப்பது அவசியம். அத்துடன் உங்கள் முதுகை பாதுகாப்பதற்கு ஒரு சில கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்வதும் மிகவும் முக்கியம்.
Also Read : ஒற்றை தலைவலியில் இருந்து விடுபட இந்த சிம்ப்பிள் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க! Effective remedies for migraine pain!
ரைடிங் பொசிஷனை கவனித்துக்கொள்ளவும்
நீங்கள் பைக் ஓட்டும் போதெல்லாம், சரியான பொசிஷனில் உட்கார வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெரும்பாலானோர் பைக்கில் முன்னோக்கி சாய்ந்து அமர்ந்திருப்பார்கள், சிலர் கூனிக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். இப்படி முறையற்ற தோரணையில் உட்கார்ந்திருப்பதால் முதுகுவலி அதிகரிக்கிறது. இது முதுகுத் தண்டுவடத்தில் அழுத்தத்தையும் உருவாக்குகிறது. உட்காரும் பொசிஷனை மேம்படுத்துவது முதுகு மற்றும் இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
உடற்பயிற்சி செய்யுங்கள்
தினமும் பைக் ஓட்டுவது முதுகெலும்பு, தோள்பட்டை மற்றும் கழுத்தில் அதிக அழுத்தத்தை உருவாக்குகிறது. உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் இவ்வகை வலிகளில் இருந்து விடுபடலாம். முதுகுவலியிலிருந்து நிவாரணம் அளிக்கும் சில பயிற்சிகளை செய்ய வேண்டும். இதற்கு கேமல் போஸ், கேட் போஸ், ஸ்ட்ரெச்சிங், வால் புஷிங் போன்ற சில பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். இது தோரணையை மேம்படுத்துவதோடு, எலும்புகளும் நெகிழ்வானதாக மாறும், இது முதுகுவலியைப் போக்கும்.
அவ்வப்போது ஓய்வு அவசியம்
தினமும் அதிக நேரம் இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டியிருந்தால், இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் இடுப்பு மற்றும் கால்களை நீட்ட ஒரு வாய்ப்பை வழங்கும். சிறிது நேரம் நிறுத்துங்கள், பிறகு உங்கள் பயணத்தைத் தொடருங்கள். உங்களால் முடிந்தால், பைக் சவாரிகளில் இருந்து அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இது இடுப்புக்கு நன்மை பயக்கும்.
பைக் தேர்வு முக்கியம்
பைக் ஓட்டும் போது, நீங்கள் அமர்ந்திருக்கும் பொசிஷன் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ரைடிங் பொசிசனையும் கவனிப்பதும் முக்கியம். தவறான பொசிஷன் உங்கள் தோள்கள், முதுகு மற்றும் இடுப்பில் கூடுதல் அழுத்தத்தை உருவாக்குகிறது. எப்போதும் வசதியான மற்றும் இடுப்புக்கு சப்போர்ட் தரும் பைக்கையே தேர்ந்தெடுங்கள். மேலும், எப்போதும் உங்கள் சவாரி நிலையை சரியாக சரிசெய்யவும். இது முதுகு வலியிலிருந்து விடுபட உதவும்.
உங்களை நீரேற்றமாக வைத்திருங்கள்
பைக் ஓட்டும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்தால், முதுகுவலி, தோள்பட்டை வலி, கழுத்து வலி போன்றவை மோசமடையலாம். இதைத் தவிர்க்க, உங்களை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியம். உடலில் போதுமான அளவு தண்ணீர் சத்து இருந்தால், எந்த வகையான உடல் பிரச்சனையும் உங்களை எளிதில் தொந்தரவு செய்யாது.
டூவீலர் ஓட்டுவதைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில், உங்கள் முதுகுப் பகுதியை உறுதியாக்கும் பயிற்சிகளை பிசியோதெரபிஸ்ட் அல்லது ஜிம் பயிற்சியாளரிடம் கேட்டு, தொடர்ந்து செய்து வர வேண்டும். தினமும் இந்தப் பயிற்சிகளை காலையில் செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். வீடு திரும்பியதும் முதுகுப் பகுதிக்கான ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளைச் செய்த பிறகுதான் மற்ற வேலைகளைச் செய்ய வேண்டும்.
நீங்கள் புதிய பைக்கை வாங்குகிறீர்கள் என்றால், மிகவும் குனிய வேண்டிய அவசியம் இல்லாத ஒன்றை தேர்வு செய்யுங்கள். அதாவது ஹேண்டில்பார்களை பிடிப்பதற்கு, அதிகமாக வளைந்து கொடுக்க வேண்டிய அவசியம் இருக்க கூடாது. அதேபோல் பைக்கில் உட்காரும்போது எப்போதும் முதுகை நேராக வைத்திருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
மோசமான சஸ்பென்ஷனுடன், மோசமான கண்டிஷனில் உள்ள டூவீலர், நிலைமையை இன்னும் மோசமாக்கும். குண்டும், குழியுமான சாலைகளில் ஓட்டும்போது உடல் குலுங்குவதால் பாதிப்புகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே முதுகு வலி ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், உங்கள் பைக் நல்ல கண்டிஷனில் இருப்பதும் அவசியம். சீரான இடைவெளிகளில் பைக்கை சர்வீஸ் செய்யுங்கள்.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry