
பக்தர்கள் எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பு ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டால் அந்தக் காரியம் ஜெயமாக முடியும் என்பது நிச்சயம். இவருக்கு மிகவும் பிடித்தமானது செந்தூரமும், வெண்ணெயும், வெற்றிலையும் தான். அதனால் தான் இவரை தரிசிக்க செல்லும் பெரும்பாலானவர்கள் வெண்ணெயையும், வெற்றிலை மாலையையும் சாற்றி வேண்டி வணங்கி வருகின்றனர்.
ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும், அனுமனை சனிக்கிழமை அன்று வழிபட்டால் சனியின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை. அந்த வகையில் அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி ஏன் வழிபடுகின்றனர்? என்பதை தெரிந்துகொள்வோம்.

அசோகவனத்தில் சீதையை கண்ட ஆஞ்சநேயருக்கு வெற்றிலையை தூவி ஆசி வழங்கியதாலும், போரில் ஏற்பட்ட காயத்தினால் உண்டான வெம்மையை குறைக்கவும் ஆஞ்சநேயருக்கு சீதை வெண்ணெயை தடவியதாலும், ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பும், வெற்றிலை மாலையும் அணிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
சீதா தேவியை காண ஆஞ்சநேயர் இலங்கையை சுற்றி வந்தபோது, ராவணனின் வீரர்கள் வைத்த நெருப்பு இவரை ஒன்றம் செய்யவில்லை. இருந்தாலும், அந்த வெப்பத்தின் தாக்கத்தால் அவருடைய உடல் சூடானது. அதோடு, ராவணனை எதிர்த்து ஸ்ரீராமபிரானும், லட்சுமணரும் போரிட்ட போது, ஆஞ்சநேயரும், தன்னுடைய வானரப் படைகளோடு சேர்ந்து ராவணனின் படையுடன் போரிட்டார்.
அப்போது, ஆஞ்சநேயர் பிரமாண்டமான தோற்றத்தில் இருந்தைப் பார்த்த இலங்கை வீரர்கள், அவர் மீது பல்வேறு வகையான கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் ஏகப்பட்ட காயங்கள் உண்டானது. இருந்தாலும், இந்த காயங்கள் அனைத்தும் தன் இதயத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீராமருக்காகத் தானே என்று நினைத்து அவற்றை கண்டுகொள்ளவில்லை.
போரில் ராவணனைக் கொன்று, ஸ்ரீராம பிரான் சீதா தேவியை சிறையிலிருந்து மீட்ட உடன், இருவரையும் பணிந்து வணங்கினார் ஆஞ்சநேயர். அப்போது அவருடைய உடல் முழுவதும் இருந்த காயங்களைப் பார்த்து பதறி சீதா தேவி வேதனை அடைந்தார். உடனே, அன்னை சீதா தேவி, வெண்ணெயைக் கொண்டு ஆஞ்சநேயரின் உடல் முழுவதும் பூசிவிட்டார்.
இதனால், அவரின் உடலில் இருந்து காயங்கள் மறைந்ததோடு, அவரின் உடலில் இருந்த வெக்கையும் தணிந்தது. அன்னை சீதா தேவியின் செயலால் மனம் நெகிழ்ந்த ஆஞ்சநேயர், தனக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுபவர்களின் நோய் ஸ்ரீராம பிரானின் அருளால் முழுமையாக குணப்படுத்துவேன் என்று உறுதியளித்தார். அன்றிலிருந்து ஆஞ்சநேயரை தரிசிக்க செல்பவர்கள் வெண்ணெயை அவர் மீது சாற்றி வழிபடுகின்றனர்.
அதேபோல், ராவண வதத்திற்குப் பிறகு இரண்டு அசுரர்கள் தப்பி ஓடி தவம் செய்து வரங்களைப் பெற்று தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களை எப்படி சமாளிப்பது? என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வதம் செய்ய யாரை அனுப்புவது என்று கலந்து ஆலோசித்தபோது, அனுமன் தான் அதற்கு தகுதியானவர் என்று முடிவு செய்தனர். அனுமனுக்கு போரில் உதவ ஸ்ரீராமர் வில்லையும், பிரம்மாவும், சிவபெருமானும் இன்னும் பிற கடவுள்களும் சக்தி வாய்ந்த ஆயுதங்களை அளித்தார்கள்.
Also Read : ஆழ் மனதில் ஸ்டோராகும் எண்ணச் சுமைகள்! இயல்பாக வாழ வழிகாட்டும் ஆன்மிகம்! Part – 2
ஸ்ரீராமர், தன்னுடைய அடுத்த அவதாரமான கிருஷ்ணனுக்குப் பிடித்த வெண்ணெயை அளித்து, இந்த வெண்ணெய் உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடுவாய் என்று சொல்லி ஆசீர்வதித்தார். அதன்படி, அனுமன் வெண்ணெய் உருகுவதற்குள் இரண்டு அசுரர்களையும் அழித்துவிட்டார்.
அதுபோல, நாம் அனுமனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால், நாம் சாற்றிய வெண்ணெய் உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பதே நம்பிக்கை. திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயிலில், அனந்த பத்மநாபன் சந்நிதி முன்புறம் உள்ள ஆஞ்சநேயருக்கு முக்கியமான வழிபாடு வெண்ணெய் சாற்றுவது ஆகும். இந்த வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த அனுமனை வழிபாடு செய்து வாழ்க்கையில் வளம் பெறுவோம்.
வெற்றிலை மாலை சாற்றுவது ஏன்?
பக்தர்கள் தங்கள் காரியம் வெற்றி பெற வெற்றிலை மாலை சாற்றி வேண்டி வழிபடுகின்றனர். அதற்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அன்னை சீதா தேவியை தேடியலைந்த ஆஞ்சநேயர் கடைசியில் அவரை இலங்கையில் அசோகவனத்தில் சிம்சுகா மரத்தடியில் சோகமே உருவாக இருந்ததைக் கண்டு கலங்கினார். தான் பகவான் ஸ்ரீராமபிரானின் தூதுவனாக வந்திருப்பதை விவரித்து, ஸ்ரீராமபிரான் கொடுத்த கணையாழியை சீதா தேவியிடம் கொடுத்து அவரிடம் இருந்து சூடாமணியை பெற்றுக்கொண்டார்.
அன்னை சீதா தேவியிடம் விடைபெற்று கிளம்பும்போது, ஆஞ்சநேயர் ஆசீர்வாதம் பெற எண்ணினார். ஆனால், ஆசீர்வதிக்க அட்சதையோ புஷ்பங்களோ கிடைக்கவில்லை. அங்கே ஒரு வெற்றிலைக் கொடி படர்ந்திருந்ததைக் கண்ட ஆஞ்சநேயர், அதிலிருந்து சில வெற்றிலைகளை பறித்து மாலையாக கோர்த்து, அதை சீதா தேவியிடம் கொடுத்து, என்னை ஆசீர்வதியுங்கள் அன்னையே என்று வேண்டி பணிந்து நின்றார்.
ஆஞ்சநேயரின் சமயோசித புத்தியை கண்டு மகிழ்ந்த அன்னை சீதா தேவி, அந்த வெற்றிலை மாலையை ஆஞ்சநேயரின் கழுத்தில் அணிவித்து, என்றைக்கும் நீ சிரஞ்சீவியாக வாழ்வாயாக என்று ஆசீர்வதித்தார். அதன் காரணமாகவே, பக்தர்கள் அனைவரும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. வெண்ணெயும், வெற்றிலை மாலையும் சாற்றி ஆஞ்சநேயரை வணங்கி வழிபட்டால், தடைபட்ட காரியங்கள் இனிதே முடியும். கடன் தொல்லையும் ஒழியும். நல்ல உத்தியோகமும், பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவார்கள் என்பது நிச்சயம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry