நான்கு நாள்களாகக் காணாமல் போயிருந்த காங்கிரஸின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரான கேபி ஜெயக்குமாரை காணவில்லை என்று அவரது மகன் கருத்தையா ஜாஃப்ரின் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு கே.பி. ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை எனவும் புகாரில் அவர் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் ஜெயக்குமார் போலீசில் புகார் அளித்து இருந்த நிலையில், கரைசுத்து புதூர் அருகே உள்ள அவரது தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக கிடந்துள்ளார். ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்டஒழுங்கு சீர்கேட்டின் உச்சம். சட்டத்தின் மீதோ காவல்துறையின் மீதோ எந்தவித அச்சமுமின்றி சமூக விரோதிகள் செய்யத் துணிந்துவிட்டனர். இந்த ஆட்சியும் அதற்கேற்றாற்போலவே சட்டம் ஒழுங்கின் மீது எந்த அக்கரையுமின்றி கும்பகர்ண தூக்கத்தில் இருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ஜெயக்குமார் தன்சிங் அவர்கள் 2 நாட்களாக காணவில்லை என்று அவரது மகன் புகார் அளித்திருந்த நிலையில், அவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அன்னாரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
இந்த விடியா…
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) May 4, 2024
இதனிடையே, கடந்த 30 ஆம் தேதி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலரிடம் மரண வாக்குமூலம் என்ற தலைப்பில் ஜெயக்குமார் புகார் மனு ஒன்றை அளித்து இருந்தார். அதில், “வீட்டு முன்பு சில நபர்கள் சுற்றி வருகிறார்கள். வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதற்காக சுற்றி வருகிறார்கள் என நினைத்தோம். ஆனால், கொலை மிரட்டல் நோக்கத்துடன் திட்டமிட்டு சுற்றி வருவதாகவும் சில நபர்களின் பெயரை பட்டியலிட்டும் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.
மேலும், கட்சிக்காக பல லட்சங்களை செலவு செய்ததற்காக, அரசு ஒப்பந்தங்களை பெற்று தருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் வாக்குறுதி கொடுத்ததாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பல லட்சங்களை செலவு செய்ததாகவும், பணத்தை திருப்பி கேட்ட போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், தன்னிடம் வாங்கிய பணத்திற்காக நிலத்தை எழுதிக் கொடுத்த ஒருவர் மும்பை ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் எஸ்.பிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தக் கடிதத்தில் சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், ஆனந்தராஜா, குத்தாலிங்கம், ஜெய்கர் உள்ளிட்டோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் கூறியுள்ளார். கட்சி பகையால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயக்குமார் தனசிங்கின் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry