லாவண்யா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி! நீதி கிடைக்கும்வரை போராட்டம்! அண்ணாமலை திட்டவட்டம்!

0
142

அனிதாவை வைத்து மற்றவர்கள் அரசியல் செய்தது போல் பாஜக செய்யவில்லை, அனிதாவிற்கு ஒரு நியாயம், லாவண்யாவிற்கு ஒரு நியாயமா என மாநில பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சை திருக்காட்டுப்பள்ளி விடுதி வார்டன் சித்ரவதையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மாநில மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் லாவண்யாவின் படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர்கள், ரூ.10 லட்சம் நிதி உதவியும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “அனிதாவிற்கு ஒரு நியாயம், லாவண்யாவிற்கு ஒரு நியாயமா? மாணவியின் தற்கொலைக்கு நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க. போராடும். பா.ஜ.க. குழு நாளை மறுநாள் அரியலூர் வர உள்ளது. பா.ஜ.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. மாணவியின் குடும்பத்திற்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டும்.

இந்த போராட்டம் எந்த மதத்திற்கு எதிரான போராட்டமும் இல்லை. மாணவிக்கு நீதி கேட்கும் போராட்டம். இதில் மனிதர்கள் தவறு செய்துள்ளனர். இதற்கு சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். மாணவியின் வீடியோவை அடிப்படையாக வைத்து பா.ஜ.க. கட்சி தன்னுடைய குரலை கொடுத்து வருகின்றது. வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து பா.ஜ.க. போராடுகிறது.

ஆட்சியாளர்கள் பொறுப்பில் இருப்பவர்கள், பொறுப்பில்லாமல் பேசுவது நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் வந்துள்ளது. இறக்கும் தருவாயில் எந்த ஒரு குழந்தையும் பொய் சொல்ல வாய்ப்பில்லை. ஒரு மதத்தை சேர்ந்த 2 மனிதர்கள் செய்த தவறு தான் இது. இதில் புலனாய்வு துறை தவறான அறிக்கையை முதல்வருக்கு தெரிவித்துள்ளனர். தமிழக அரசு மோசமாக கையாண்டுள்ளனர். அற்புதமான காவல் துறைக்கு கலங்கம் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையை சுதந்திரமாக செயல்படவிடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry