தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு எதிராக அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் தங்களது தொடர் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. பழைய ஒய்வூதியத் திட்டம், ஊதிய சமநிலை, பணப்பலன்கள், எமிஸ் பிரச்சனை உள்ளிட்டவை அவர்களின் பிரதான கோரிக்கைகளாக முன்வைக்கப்படுகின்றன.
அந்தவகையில் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் தலைமை அலுவலகமான டிபிஐ வளாகமே போராட்டக்களமாக மாறியுள்ளது. ஒருபுறம் சம வேலைக்கு சம ஊதியம் எனும் கோரிக்கையை முன்வைத்து ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் 4 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். 150-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமுற்று சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களை சேர்ந்த 3 சங்கங்களும், பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி 2013-ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் 8வது நாளை எட்டியுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நலச் சங்கம், புதிய ஒய்வூதியத் திட்ட(CPS) ஒழிப்பு இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாளப் போராட்டத்தை நடத்தியுள்ளன.
இதுதவிர தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜேக்), தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு உட்பட பல சங்கங்களும் அடுத்தடுத்து தொடர் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருவது பள்ளிக்கல்வித் துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
காலாண்டு விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும் (அக்டோபர் 3), 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு அக்டோபர் 9-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ‘ஆசிரியர் இயக்கங்களின் போராட்டங்கள் தொடரும்பட்சத்தில், அது மாணவர்களின் கற்றலில் பாதிப்பை ஏற்படுத்தும்; எனவே, ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்’ என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read : தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்! Microplastics Found in Human Breast Milk!
ஆசிரியர்களின் இந்த போராட்டங்களுக்கு மையமாக இருப்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்தான். ஏனெனில், ஆசிரியர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளில் 85 சதவீதத்துக்கும் மேலானவை தேர்தல் வாக்குறுதிகள் அல்லது எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக ஆதரவு தெரிவித்த அம்சங்களாகும். இதனால் சாத்தியமற்ற கோரிக்கைகளை ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்தால் கூட, அதை மறுக்க முடியாத நிலையில் இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் இந்து தமிழ் திசைக்கு அளித்துள்ள பேட்டியில், “அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களுக்கும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் ஆதரவு அளித்தார். சில போராட்டங்களுக்கு நேரில் வந்துகூட திமுக ஆட்சி அமைந்ததும் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்ததோடு, தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவித்தார்.
ஆனால், இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் திமுக சொன்ன பிரதான வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை. ஓய்வூதியம் என்ற வார்த்தையை முதல்வர் மறந்தும்கூட சொல்வதில்லை.
இதுசார்ந்து பல போராட்டங்களை நடத்தியபோது உரிய நடவடிக்கை எடுப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் உறுதியளித்தார். ஆனால், இதுவரை ஒரு அறிவிப்புக்கூட அமலுக்கு வரவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.
Also Read : நீடிக்கும் ஆசிரியர்கள் போராட்டம்! உதாசீனப்படுத்தும் கல்வித்துறை! தமிழக அரசுக்கு பாமக கடும் கண்டனம்!
ஜாக்டோ- ஜியோவில் இருக்கும் சிலர் அரசுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். அதனாலேயே ஆசிரியர் அமைப்புகள் தனித்தனியாக போராட்டங்களை அறிவிக்கின்றன. குறிப்பாக ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. ஆசிரியர்கள் தாக்கப்பட்டால் கல்வி அமைச்சரிடம் இருந்து அறிக்கைகூட வருவதில்லை. இத்தகைய மனஅழுத்தமே எங்களை போராட்டத்தை நோக்கி நிர்ப்பந்திக்கிறது’’என்று கூறியுள்ளார்.
இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கப் பொதுச் செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, “ஒரே கல்வித்தகுதி, ஒரே வேலை என்ற சூழலில், ஊதியம் மட்டும் வெவ்வேறு என்பதை ஏற்க முடியாது. ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறோம். கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட போராட்டத்தில் தனிக்குழு அமைத்து சரிசெய்வதாக அரசு சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் கோரிக்கை மீது முதல்வர் உறுதியான வாக்குறுதி வழங்கும் வரை போராட்டம் தொடரும்’ என்றார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry