நுண்ணிய உயிரினங்களான பூஞ்சைகள் நமது சருமத்திற்குள் ஊடுருவி கட்டுப்பாடின்றி பெருகும் போது பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. டெர்மட்டோபைட்ஸ் (dermatophytes), ஈஸ்ட் மற்றும் மோல்ட்ஸ் (molds) என தொற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும் பல வகையான பூஞ்சைகள் உள்ளன.
பூஞ்சை தொற்றுகள் ஆண்டு முழுவதும் ஏற்படக்கூடியவை என்றபோதிலும், ஈரப்பதம், உஷ்ணம் மற்றும் வியர்வை அதிகமாக சுரக்கும் காலங்களில், குறிப்பாக கோடை மாதங்களில் அதிகமாக ஏற்படுகின்றன. சருமம், நகங்கள், உச்சந்தலை மற்றும் உடலின் அந்தரங்க பகுதிகள் உள்ளிட்டவை பூஞ்சைகள் நன்றாக வளர ஒரு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளன.
இந்த நோய்த்தொற்றுகள் ஒருவரது தோல், நகங்கள், தலைமுடி, வாய் மற்றும் பிறப்புறுப்புகள் உட்பட உடலின் பல்வேறு பகுதிகளை பாதிக்கலாம். பூஞ்சை தொற்று இருப்பதைப் பற்றி யாரும் வெட்கப்படவோ, சங்கடப்படவோ தேவையில்லை; ஏனெனில் அவை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய பொதுவான மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு பிரிச்சினையாகும்.
Also Read : கருப்பு கவுனி அரிசியில் இவ்வளவு சத்துக்களா? மருத்துவ பண்புகள் மற்றும் சமைக்கும் முறை!
சரியான சூழல் கிடைத்தால் பூஞ்சை தொற்று மோசமடையும். புழுக்கமாக இருந்தால் உடலில் வியர்த்து ஆங்காங்கே ஈரப்பதம் சேர்கிறது; குறிப்பாக தோல் மடிப்புகள் மற்றும் இறுக்கமான ஆடை மூடிய இடங்கள் சாதகமாக பூஞ்சை வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறது. இந்த ஈரப்பதம் பூஞ்சையின் பெருக்கத்தை ஊக்குவிக்கிறது, அத்லீட்’ஸ் ஃபூட் (சேற்றுப் புண்) மற்றும் ஜாக் இட்ச் (படை) போன்ற தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
இதேபோல், அதிக வெப்பநிலையும் பூஞ்சைகளுக்கு பல்கிப்பெருகும் நிலைமைகளை வழங்குகிறது; அதனால் ரிங்வார்ம் (படர் தாமரை) மற்றும் ஈஸ்ட் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். அதிகப்படியான வியர்வை காரணமாக அக்குள் மற்றும் இடுப்பு போன்ற காற்றோட்டம் இல்லாத பகுதிகளில், அத்லீட்’ஸ் ஃபூட் (athlete’s foot) மற்றும் இன்டர்ட்ரிகோ (intertrigo) போன்ற பூஞ்சை தொற்றுகள் அதிகரிக்கின்றன.
அடிக்கடி பொதுவாக ஏற்படும் பூஞ்சை தொற்றுகள்
அத்லீட்’ஸ் ஃபூட் : மருத்துவ ரீதியாக டினியா பெடிஸ் என்று அழைக்கப்படும் அத்லீட்’ஸ் ஃபூட், என்கிற பூஞ்சை தொற்று பெரும்பாலும் கால்களின் சருமத்தைப் பாதிக்கிறது. குறிப்பாக கால்விரல்களுக்கு இடையில் இது அதிகம் ஏற்படுகிறது. டெர்மடோஃபைட் என்கிற பூஞ்சைகளால் ஏற்படும் இந்த தொற்று அரிப்பு, எரிச்சல் சிவத்தல் மற்றும் தோல் உரிதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
ஜாக் இட்ச் : ஜாக் இட்ச், அல்லது டினியா க்ரூரிஸ், எனப்படும் இந்த பூஞ்சை தொற்று பொதுவாக கீழ் இடுப்பு, பிறப்புறுப்பு மற்றும் உள் தொடைகளில் ஏற்படுகிறது. சிவந்து போதல், அரிப்பு மற்றும் சொறி போன்றவையாக இது வெளிப்படுகிறது. இது பெரும்பாலும் ஈரப்பதம், வெப்பம் மற்றும் உராய்வு போன்ற காரணிகளால் ஏற்படுகிறது. ஜாக் இட்ச் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
ரிங்வார்ம் : ரிங்வார்ம் (வட்டப்புழு) என்று கூறப்பட்டாலும் இதற்கும் புழுவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தமிழில் படர்தாமரை என்று அழைக்கபப்டும் இந்த தொற்று டெர்மடோஃபைட்ஸ் என்கிற பூஞ்சை வகைகளால் உடலின் பல்வேறு பகுதிகளில் சருமத்தை பாதிக்கலாம். இவை காண்பதற்கு வட்ட வடிவில், சிவந்த செதில் போன்ற திட்டுகளாக ஒரு மோதிரத்தை போல இருக்கும். படர்தாமரையால் பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் சருமத்தோடு சருமம் நேரடி தொடர்பு ஏற்பட்டால், அல்லது அசுத்தமான பொருட்கள் அல்லது மேற்பரப்புகள் மூலமாகவும் இந்த பூஞ்சை தொற்று பரவுகிறது.
ஈஸ்ட் தொற்று (Yeast Infections): ஈஸ்ட் தொற்று என்பது கேண்டிடா அல்பிகான்ஸ் (Candida albicans) என்கிற நுண்ணிய பூஞ்சையின் அதீத வளர்ச்சியால் ஏற்படுகின்றது. இயற்கையாகவே உடலில் வசிக்கும் ஒரு ஈஸ்ட் பூஞ்சையான இது – வாய் (மவுத் த்ரஷ்), பிறப்புறுப்புகள் (வெஜைனல் ஈஸ்ட் தொற்று) மற்றும் தோல் மடிப்புகள் (இன்டர்ட்ரிகோ) உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளை பாதிக்கிறது.
டினியா கேபிடிஸ் (Tinea capitis) : உச்சந்தலையில் அல்லது தலைமுடியில் ஏற்படும் பூஞ்சை தொற்று பொதுவாக ட்ரைக்கோபைட்டான் டான்சுரன்ஸ் என்கிற டெர்மடோபைட் வகையால் ஏற்படுகிறது. இந்த பூஞ்சை டினியா கேபிட்டிஸ் என்கிற நிலையை ஏற்படுத்தும். பொதுவாக இது ஸ்கால்ப் ரிங்வார்ம் என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகளை பாதிக்கும் இந்த பூஞ்சை, சில நேரம் பெரியவர்களுக்கும் ஏற்படலாம்.
Also Read : சிறுநீரக கல் ஏற்படுவது எப்படி? கிட்னி ஸ்டோன் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய, தவிர்க்க உணவுகள்!
ஆரம்ப நிலை பூஞ்சை தொற்றுகளுக்கு பின்வரும் சில எளிமையான மற்றும் வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நிவாரணம் பெறலாம்.
கற்றாழை : கற்றாழை ஜெல்லில் பாலிசாக்கரைட்ஸ், பினாலிக் கலவைகள் மற்றும் ஆந்த்ராகுயினோன்ஸ் போன்ற சேர்மங்கள் உள்ளன; அவற்றிற்கு இன்ஃப்ளமேஷனுக்கு எதிரான பண்புகளும், நுண்ணுயிரிகளுக்கு எதிரான பண்புகளும் உள்ளன. மேலும் கற்றாழைக்கு காயத்தை குணப்படுத்தும் தன்மையும் உள்ளது. மேற்பூச்சாக பயன்படுத்தினால் சரும எரிச்சலை ஆற்றி, இன்ஃப்ளமேஷனைக் குறைத்து, திசுக்கள் குனமடைவதை ஊக்குவிக்கிறது. இதன் ஆன்ட்டிமைக்ரோபியல் செயல்பாடு பூஞ்சை தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, அதே நேரத்தில் அரிப்பு மற்றும் அசௌகரியத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
ஆப்பிள் சிடர் வினிகர் : ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் பூஞ்சை தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. நீர்த்த மற்றும் வெதுவெதுப்பான நீரில் கலப்பதன் மூலம் இது ஒரு இலகுவான அமில திரவத்தை உருவாக்குகிறது; இதனை சருமத்தில் தடவினால், பூஞ்சையின் வளர்ச்சியைத் தடுக்கிறது; அரிப்பு மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளுக்கும் நிவாரணம் தருகிறது. கூடுதலாக, ஆப்பிள் சிடர் வினிகரின் pH-சமன்படுத்தும் விளைவு சருமத்தின் இயற்கையான பாதுகாப்பு செயல்பாட்டை மீட்டெடுக்க உதவுவதால், இது குணப்படுத்துவதை ஊக்குவிக்கும்.
பேக்கிங் சோடா : சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பேக்கிங் சோடா, எனப்படும் சோடியம் பைகார்பனேட்டுக்கு, பூஞ்சையை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. மேலும் இது சருமத்தின் pH அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பூஞ்சை தொற்றுக்கு நிவாரணம் தரும் பேஸ்டை உருவாக்க இதனைத் தண்ணீரில் கலக்கும்போது, இது ஒரு கார (Alkaline) சூழலை உருவாக்குகிறது, அது பூஞ்சைகளுக்கு ஒவ்வாத ஒரு சூழலாகும். சரியான அளவில் கலந்து தடவும் போது, இது பூஞ்சை வளர்ச்சியைத் தடுத்து, அதனால் ஏற்படும் அரிப்பு மற்றும் இன்ஃப்ளமேஷனுக்கு நிவாரணம் தருகிறது.
தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் போன்ற மீடியம் செயின் கொழுப்பு அமிலங்கள் உள்ளன; அவை பூஞ்சைக்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளன. மேற்பூச்சாகப் பயன்படுத்தும்போது, தேங்காய் எண்ணெய் சருமத்தில் ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கி, பூஞ்சை வளர்ச்சியைத் தடுக்கிறது. அதன் இனிமையான மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமத்தின் இயற்கையான குணப்படுத்தும் செயல்முறையை ஆதரிப்பதால் பூஞ்சை தொற்றுநோய்களின் தாக்கங்கள் குறைகின்றன.
வேப்பிலைகள் : வேப்பிலைகளில் நிம்பின் மற்றும் நிம்பிடின் போன்ற சேர்மங்கள் உள்ளதால், அதற்கு பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் பண்புகள் உள்ளன. வேப்பிலைகளை அலசிய பின்பு, வேகவைப்பதன் மூலம் – பயோஆக்டிவ் சேர்மங்கள் நிறைந்த ஒரு திரவம் கிடைக்கிறது. இது பூஞ்சையால் பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், அதன் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவும்.
உப்பு நீர் குளியல் : உப்பு நீரில் குளிப்பது ஒரு ஹைபர்டானிக் சூழலை உருவாக்குகிறது. இது பூஞ்சையால் பாதிக்கப்பட்ட சருமத்திலிருந்து ஈரப்பதத்தை வெளியேற்றி பூஞ்சையின் வளர்ச்சியைத் தடுக்கிறது. அரிப்பு மற்றும் இன்ஃப்ளமேஷன் போன்ற அறிகுறிகலுக்கு நிவாரணம் தருகிறது.. கூடுதலாக, உப்பில் ஆன்ட்டிமைக்ரோபியல் பண்புகளும் உள்ளதால், அது சருமத்தின் மேற்பரப்பில் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களைக் கொல்ல உதவுகின்றது.
டீ ட்ரீ எண்ணெய் : டீ ட்ரீ எண்ணெயில் உள்ள டெர்பினென்-4-ol. (terpinen-4-ol.) என்கிற ஆற்றல்மிக்க மூலப்பொருளுக்கு சக்திவாய்ந்த பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளது. நன்கு தண்ணீர் கலந்து மேற்பூச்சாக பயன்படுத்தும்போது, இது அத்லீட்’ஸ் ஃபூட் மற்றும் ரிங்வார்ம் போன்ற பொதுவான சரும நோய்த்தொற்றுகளுக்கு காரணமான டெர்மடோஃபைட் உள்ளிட்ட பூஞ்சைகளின் வளர்ச்சியை திறம்பட தடுக்கிறது. சருமத்தில் ஊடுருவி பூஞ்சையின் உயிரணுக்களின் சவ்வுகளை அழிப்பதால் பூஞ்சை தொடர்பான தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான பிரபல நிவாரணியாக உள்ளது.
மஞ்சள் : மஞ்சளில் உள்ள குர்குமின் என்கிற மூலப்பொருளுக்கு ஆன்ட்டி-இன்ஃப்ளமேஷன் பண்புகளும், நுண்ணுயிரிகளுக்கு எதிரான பண்புகளும் உள்ளன. தண்ணீரில் கலந்து மஞ்சள் பேஸ்டை மேற்பூச்சாக பயன்படுத்தினால் அரிப்பு நீங்கி, பூஞ்சை வளர்ச்சியையும் தடுக்கிறது. இதன் ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் சரும ஆரோக்கியத்தை பேண உதவுவதுடன், சருமம் குணமடைவதையும் ஊக்குவிக்கின்றன.
தயிர் : தயிரில் லாக்டோபசில்லஸ் அசிடோபிலஸ் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. அவை உடலின் இயற்கையான நுண்ணுயிரிகள் சமநிலையை மீட்டெடுக்க உதவுகின்றன. தயிரை சருமத்தின் மீது தடவும் போது, ஒரு அமில சூழலை உருவாக்குகிறது; இது நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
Also Read : ஹேர் டையில் நல்லது, கெட்டதை கண்டறிவது எப்படி? ஹெர்பல் ஹேர் டையும் சிக்கலை ஏற்படுத்துமா? Health Tips!
இவை உரிய மருத்துவ சிகிச்சைக்கு மாற்று சிகிச்சை முறை இல்லை என்ற போதிலும், வீட்டு வைத்தியங்கள் அவற்றின் இயற்கையான பூஞ்சைக்கு எதிரான நிரூபிக்கப்பட்ட பண்புகள் காரணமாகவும், இதமளிக்கும் குணங்கள் காரணமாகவும் ஆரம்ப நிலை பூஞ்சை தொற்றுநோய்களை சமாளிக்க உதவுகின்றன. மேலும், சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் பெரிதும் உதவுகின்றன.
பூஞ்சை தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு வழக்கமான குளிப்பதும், உடலை முழுமையாக உலர்த்துவதும், உடலின் சுகாதாரத்தை பராமரிப்பதும் மிக முக்கியமாகும். பாதத்தை தூய்மையாக வைப்பது, காற்றோட்டமான ஆடைகளை அணிவது, மற்றும் பொருத்தமான காலணிகளை அணிவது போன்ற பழக்கங்களின் மூலம் ஈரப்பதம் சேர்வது குறைகிறது. பூஞ்சை வளர்ச்சியின் அபாயமும் குறைகிறது. அதுமட்டுமில்லாமல் துண்டுகள், சாக்ஸ் மற்றும் நகவெட்டிகள் போன்ற தனிப்பட்ட பொருட்களைப் பகிர்வதைத் தவிர்ப்பதன் மூலம் பூஞ்சைகள் பரவுவதை குறைப்பதோடு, மற்றவர்களிடமிருந்து பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயத்தையும் குறைக்கலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry