மகாகவியின் 140-வது பிறந்தநாள்! மீசையை முறுக்கு, ஆசைகளை நறுக்கு! பாரதியின் முறுக்கு மீசை பின்னணி!

0
427

3.30 minutes Read: எட்டயபுரத்தில் தன் தந்தையோடு வசித்த போது, சிறுவன் பாரதி, குடுமி வைத்திருந்தார்; தந்தை சின்னச்சாமி ஐயர் காலமான பின்பு, அத்தை குப்பம்மாளுடன், பாரதியும் காசிக்குச் சென்றார். காசி ஹனுமந்த கட்டம் சிவமடத்தில், பாரதி, தனது அத்தை, அவளுடைய கணவர் ஸ்ரீ கிருஷ்ண சிவனுடன் வசித்து வந்தார்.

காசியில், ஜெய் நாராயண் பள்ளியில் படித்து முடித்து, அலகாபாத் சர்வகலா சாலையில், சேர்ந்தார். அப்போது, அவருக்கு வயது 19. முகசவரம் செய்து கொண்டு, கலாசாலைக்கு வருவதைக் கண்ட நண்பர்கள் அவரிடம், ”நீ அடிக்கடி உன் மீசையை எடுத்து விடுகிறாயே! உன் குடும்பத்தில் அடிக்கடி யாராவது பங்காளிகள் இறந்து விடுகிறார்களா?” எனக் கேட்டனர். பதிலுக்கு பாரதி, “பிராமணர்களில் மீசை வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை. இது, எங்கள் குல வழக்கம். அதனால் தான், நான் மீசையை எடுத்து விடுகிறேன்என்றாராம்.

அப்போது ஓர் நண்பன், ”நானும் பிராமணன் தான். எவ்வளவு அழகாக, மீசை வைத்துக் கொண்டிருக்கிறேன் பார்! நீயும் மீசையை வைத்துக் கொள். உன் முகத்திற்கு, மிக அழகாக இருக்கும்என மீசையின் ஆசையை தூண்டி விட, பாரதிக்கும் மீசை மீது ஆசை வந்தது. காசியில் உள்ளவர்கள், தலையில் முண்டாசு தலைப்பாகை, முகத்தில் முறுக்கின மீசை, இடுப்பில் பஞ்சகச்சம் கட்டிய தோற்றங்களைக் கண்ட பாரதிக்கு, அந்த உருவமே, அவரது மனதிலும், ஆழப் பதிந்தது. வீட்டில் எவருக்குமே தெரியாமல், “குடுமியை கத்தரித்துக் கொண்டார். அதோடு, முகத்தில் மீசையையும் வைத்துக் கொண்டார்.

பாரதி, மீசையோடு புதுத் தோற்றத்துடன் இருப்பதைக் கண்ட அத்தையின் கணவர் கிருஷ்ண சிவன், தன் மனைவியிடம் மிகுந்த கோபத்தோடு, “பார்த்தாயா உன் மருமகனின் புது வேஷத்தை! இனி இவன் என் கூட உட்கார்ந்து சாப்பிடக் கூடாது!” எனக் கடிந்து கொண்டார். அப்போது பாரதி அவரிடம், “அத்திம்பேர்! நாம் என்ன மதம்?” என்று கேட்க, அவர் கோபத்தோடுஇந்து மதம், சிவனை பூசிப்பவர்கள் எதற்காகக் கேட்கிறாய்?” என்றார்.

உடனே பாரதி, அங்கு மாட்டியிருந்த காலண்டரில் பரமசிவன், பார்வதி, விநாயகர், சுப்பரமணியர் நால்வரும் ஒரு தனி மேடையில் வீற்றிருக்க, கீழே எதிரில் ரிஷிபம் ஒன்று படுத்திருப்பதை கொண்ட அந்த படத்தைச் சுட்டிக்காட்டி, “அதோ அந்த படத்தில் இருக்கும் சிவனை தானே பூஜிக்கிறோம். அவருக்கு அழகான மீசை இருக்கிறது, பார்த்தீர்களா? அதனால் தான், நானும் மீசையை வைத்துக் கொண்டேன். இதில் என்ன தப்பு?” என்று கேட்டதுமே, மனதிற்குள் மகிழ்ந்தாராம்.

சுவாமிகளின் படத்திற்கு, கற்பூர ஆரத்தியை காட்டும் போது, பாரதி கணீரென்று திருவெம்பாவை மற்றும் சிவ ஸ்துதிகளையும் சொன்னாராம். இதனைக் கேட்ட அத்தையின் கணவர், மனம் மாறி பாரதியின் பக்தியை மெச்சி, “சுப்பையா! நீதான் சிறந்த பக்திமான்!” எனப் பாராட்டி, அன்று முதல் தன்னுடன் உணவு அருந்த அழைத்தாராம்.

கவிபாரதி, காசியில் வாழ்ந்ததில் இருந்தே, மீசையை வைத்து இருந்தார். 1908ம் ஆண்டு முதல் 1918 வரையில், புதுவையில் வாழ்ந்த போது, மீசையுடன் தாடியும் வளர்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு, குவளை கிருஷ்ணமாச்சாரியார் என்றகுவளைக் கண்ணனிடம் நட்பு ஏற்பட்டது. ஒரு சமயம், குவளைக் கண்ணன், “நாலாயிர திவ்யப் பிரபந்தம்பாராயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற கவிபாரதியார், “கிருஷ்ணா! நீ பாராயணம் செய்யும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை, எத்தனை ஆழ்வார்கள் பாடினார்கள்?” என்று கேட்டார். பதிலுக்கு அவர்அதுவா! பத்து ஆழ்வார்கள் சேர்ந்து பாடின பாடல்கள் தான், நாலாயிர திவ்யப் பிரபந்தம்!”

என்னது! பத்து ஆழ்வார்கள் சேர்ந்து, நாலாயிரம் பாடல்கள் தானா பாட முடிந்தது? போதாது! நான் ஒருவனே, ஆராயிரம் பாடல்களைப் பாடி காட்டுகிறேன் பார்!” என்றார் பாரதி. உங்களால் முடியாது, பாரதி! ஏனென்றால், இது கலி காலம். கலி வளர, வளர மனிதனுக்கு ஆயுள் பலம், குறைந்து கொண்டே போகிறது!” என்றாராம்.

அப்படியா! ஏன் முடியாது? பார்ப்போமா!” என சொல்லிய கவி பாரதியார்எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா! யானும் வந்தேன், ஒரு சித்தன் இந்த நாட்டில்!” என்று எழுதத் தொடங்கி, சில பாடல்களை தான், அவரால் எழுத முடிந்தது. இதற்குள், அவரது வாழ்க்கையில், பலவித இடைஞ்சல்கள் ஏற்பட்டன. மேன்மேல் கஷ்டங்கள் தொடர்ந்து வந்தும், நிறுத்தாமல் எழுத முயற்சித்தார். ஆனால், அவரால் முடியவில்லை . தொடங்கிய கவிதையை, எழுதியும் முடிக்கவில்லை . புதுவையில், அஞ்ஞாதவாசம் கழித்ததும், 1919ம் ஆண்டு இறுதியில், தனது தாடியை எடுத்து விட்டு, மீசையை மட்டும் நன்றாக முறுக்கி குத்திட்டு, நிற்கும் படி வைத்துக் கொண்டாராம்.

1920ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி கவிபாரதி, இரண்டாம் முறையாகசுதேசமித்திரன்நாளிதழில், மீண்டும் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். சென்னை ஏர்ரபாலு செட்டித் தெருவிலிருந்தசுதேசமித்திரன் அலுவலகத்தில், கவி பாரதியார் தனது நாற்காலியில் உட்காரும் போது, முறுக்கிய மீசையை மேலும் முறுக்கிக் கொண்டே, மகாராஜாக்கள் சிம்மாசனத்தில் உட்காருவது போல், கால் மேல் கால் போட்டுக் கொண்டு, உட்காருவார். இடை வேளையின் போது, ஊழியர்கள் அவரிடம் பேசுவது உண்டு. பதிலுக்கு அவரும், ஊழியர்களிடம் வேடிக்கையாக பேசுவதோடு, கணீரென பாடல்களையும் பாடுவாராம்.

ஒரு சமயம், விளம்பர இலாகாவில் வேலை பார்த்து வந்த எத்திராஜு நாயக்கர் என்பவர் கவி பாரதியிடம், “சாமி! உங்கள் முகத்திற்கு இந்த மீசை ரொம்ப அழகாக இருக்கிறது! எங்களுக்கெல்லாம் இப்படி இல்லையே? உங்களுக்கு மட்டும் எப்படி மீசை கூறாக நிற்கிறது?” என்று வேடிக்கையாகக் கேட்டதற்கு அவர், “நாயக்கர்வாள்! ஆணைக்கு தந்தம் அழகு! ஆணுக்கு மீசை அழகு! மீசையை முறுக்கு! ஆசைகளை நறுக்கு! நான் திருவல்லிக்கேணியில் இருக்கிறேன். அங்கே பார்த்தசாரதி சுவாமிக்கு, முறுக்கின வெள்ளை மீசை! இந்த சின்னசாமிக்கு கறுப்பு மீசை எனச் சொல்லி விட்டு, மீண்டும் தனது மீசையை முறுக்கி விட்டுக் கொண்டாராம்!

சுதேசமித்திரன்நாளிதழில், உதவி ஆசிரியராக வேலை பார்க்கும் போதும், தான் புதுவையில் எழுதத் தொடங்கிய அந்த கவிதைத் தொகுப்பை முடிக்க, எவ்வளவோ முயன்றார். தீராத வயிற்றுப் போக்கினால், மிகவும் சிரமப்பட்ட கவி பாரதி, வீட்டிலேயே சிகிச்சைப் பெற்றார். சிகிச்சைகள் எதுவுமே பலனளிக்காமல், 1921ம் ஆண்டு, செப்டம்பர் 11ந் தேதி நள்ளிரவுத் தாண்டி, உலகம் புகழும் மகாகவி பாரதியார், தமது 39ம் வயதில் காலமானார்.

அவர் எழுதத் தொடங்கிய அந்த கவிதைத் தொகுப்பு முடிவு பெறாமல், ”சாமி நீ அம்மாயை தன்னை நீக்கி சதா காலம் சிவோஹம் என்று சாதிப்பாயே!” என்று எழுதியிருக்கும் பாடல் வரையில் எண்ணியதில், மொத்தம் 66 பாடல்களே தான், அவரால் எழுத முடிந்தது. அத்தொகுப்பிற்குபாரதி அறுபத்தாறுஎனப் பெயரிடப் பட்டது!

உலகில் கவிஞர்களால், கவிதைகள் பிறக்கின்றன! கவிஞன் மறைகிறான்! அவனது கவிதைகள் அவனோடு மறைவதில்லை. உலகில் நிலைத்து நிற்கின்றன. சாகாவரம் பெற்ற அந்தக் கவிதைகள், தங்களைப் படைத்திட்ட அந்த அமர ஜீவி கவிஞர்களின் புகழை பரப்புகின்றன! அந்த வகையில் மகாகவிபாரதி ஓர் அமரஜீவ கவி! அவரது கவிதைகள் என்றும் சிரஞ்சீவி கவிதையே. எழுத்துகளால் விடுதலை வேட்கையை விதைத்த மகாகவி பாரதியார் 140-ஆவது பிறந்தநாள் மற்றும் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள் கொண்டாடப்படும் இத்தருணத்தில் அவரை போற்றி வணங்குவோம்.

Courtesy : Dr. Ulaganayagi Palani & Mediyaan

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry