அண்ணாமலை பல்கலை. தொலைதூர படிப்புக்கு அங்கீகாரமில்லை! மாணவர்கள் சேர வேண்டாம் என UGC எச்சரிக்கை!

0
163

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி தொலைநிலை படிப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக UGC வெளியிட்டுள்ள அறிவிப்பில், “யூஜிசி அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும், தொலைநிலை, திறந்த நிலை மற்றும், ‘ஆன்லைன்’ படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது. அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 2014-15ம் ஆண்டு வரை மட்டுமே தொலைநிலை படிப்புகளை நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்பின், அந்த படிப்புக்கு அங்கீகாரம் பெறவில்லை. யூஜிசி அங்கீகாரம் பெறாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கதல்ல. மாணவர்களின் எதிர்காலம், வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பல்கலைக்கழகம் மட்டுமே பொறுப்பு” என்று யுஜிசி தெளிவுபடுத்தியுள்ளது.

யுஜிசி செயலாளர் ரஜினிஷ் ஜெயின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டாம். UGC அங்கீகாரம் இல்லாததால், அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர படிப்புகளில் சேர்க்கை பெறுவது மாணவர்களின் வாழ்க்கையை பாதிக்கலாம்” என்று கூறியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அனுமதியின்றி தொலைதூர படிப்புகளை வழங்குவதாக பல்கலைக்கழக மானியக் குழு நோட்டீஸும் அனுப்பியுள்ளது. இந்த செய்தி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். “இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம். சமீபத்தில் NAAC ஆல் அங்கீகாரம் பெற்றுள்ளோம், இந்த வாரத்தில் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முடிவுகள் வெளியானதும், அதிக மதிப்பெண் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது, எனவே தொலைதூரப் படிப்புகளை வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தடையும் இருக்காது.

Prof. RM Kathiresan, Vice-Chancellor of Annamalai University

தமிழகத்தில் இருந்து சுமார் 40,000 மாணவர்கள் தொலைதூர படிப்புகளில் சேர்ந்துள்ளனர். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மட்டுமே நாங்கள் செயல்படுகிறோம். நான் மூன்று மாதங்களுக்கு முன்புதான் சேர்ந்தேன், ஆனால் ரிட் மனுவின்படி நாங்கள் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுகிறோம் என்பதை பல்கலைக்கழக அதிகாரிகள் எனக்குப் புரியவைத்துள்ளனர். யுஜிசி அந்தத் தடையை நீக்கினால், எங்கள் படிப்புகள் செல்லுபடியாகும், யுஜிசியிடம் இருந்து இன்னும் நோட்டீஸ் வரவில்லை” என்று கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry