திருச்சியை சேர்ந்த தம்பதி, சொந்த செலவில் ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்து வருகின்றனர். தன்னலமற்ற இவர்களது சேவையை மக்கள் மனதாரா பாராட்டுகின்றனர்.
இதபற்றி தகவலறிந்து, யோகா ஆசிரியரான விஜயகுமார் – சித்ரா தம்பதியை வேல்ஸ் மீடியா சார்பாக தொடர்புகொண்டபோது, “முதலில் பேசிய சித்ரா விஜயகுமார், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி புத்தூர் பகுதியில் ஆதரவற்ற முதியோர்களுக்கும், உழைக்க இயலாத 50-க்கும் மேற்பட்டோருக்கு தினமும் உணவளித்து வருகிறோம். இதில் எங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. அதேபோல் இலவச நூலகமும் நடத்தி வருகிறோம்” என்றார்.
பின்னர் பேசிய விஜயகுமார், “சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் ஆதரவற்றவராக இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்கிறோம். அரசு மருத்துவமனை காவல் நிலையங்களுக்கு அனாதை சடலம் குறித்த தகவல் கிடைத்தால், அவர்கள் எங்களை தொடர்பு கொள்வார்கள். அரசு மருத்துவமனையில் இருந்து காவல்துறை உதவியுடன் அனாதை பிரேதத்தை, அரசு அமரர் ஊர்தியில் ஏற்றிச் சென்று எங்கள் சொந்த செலவில் நல்லடக்கம் செய்துவிடுவோம்.
இறந்தவரின் பெயர், ஜாதி, மதம் போன்ற விவரங்கள் எதுவுமே தெரியாது. அவர்களை எனது உறவினர்களாக கருதியே இறுதிச் சடங்குகளை செய்கிறோம். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கினை இதற்காக ஒதுக்கி விடுகிறோம். சில சமயம், ஒரே நாளில் மூன்று நான்கு ஆதரவற்ற பிணங்கள் வரும். அந்த சமயத்தில் கையில் காசு இருக்காது. கடனை வாங்கி இறுதி சடங்கு செய்ததும் உண்டு. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்ற சடலங்களை அடக்கம் செய்துள்ளோம்” என்றனர்.
இதுமட்டுமின்றி, யோகா ஆசிரியரான விஜயகுமார், உடல்தானமும் செய்துள்ளார். அதுபற்றி கேட்டபோது, “படமாய் இருப்பதை விட, பாடமாய் இருப்போம் என்பதே எனது கொள்கை. மரணம் இயற்கையானது. தவிர்க்க முடியாதது. யாராலும் விரும்பப்படாதது. மரணமானது இயற்கையாகவும் நோய்வாய்ப்பட்டும் தற்கொலைகளாலும் தண்டனைகளாலும் விபத்துகளினாலும் ஏதாவது ஒரு வடிவத்தில் மரணம் நிகழும். பிணங்கழுவி எடுத்து போய்ச்சுட்டு என்ன பயன் கண்டீர் என்றார் வள்ளலார். அவ்வகையில் எனது விருப்பப்படி எனது வாழ் நாளிற்குப் பிறகு எனது கண்களும் உடலும் திருச்சி கி ஆ பெ விசுவநாதம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க விண்ணப்பித்துள்ளேன்.
நெருப்பிற்கும் மண்ணிற்கும் இரையாகும் சடலத்தை மருத்துவ மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்கு பயன்படட்டும் என்ற வகையில், கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறைத் தலைவரை சந்தித்து முறைப்படி விணப்பம் செய்தேன். தானம் செய்ய ஒப்புக்கொண்ட எனது விருப்பத்திற்கு ஏற்ப சட்டபூர்வமான எனது உறவினர்கள் எனது வாழ் நாளிற்குப் பின் உடலினை ஆறு மணி நேரத்திற்குள் திருச்சி அரசு மருத்துவமனையிலோ, கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியிலோ ஒப்படைக்க வேண்டும். சடலங்கள் படிக்கப் பயன்படட்டும்.
இறப்பு என்பது உணர்வு சார்ந்த விஷயம். அறிவுப்பூர்வமாய் சிந்தித்தால் மட்டுமே உடல் தானம் என்பது சாத்தியமாகும். இறந்தவுடன் மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு உடலை தரும் முடிவுக்கு மனித சமுதாயம் முன்வர வேண்டும்.” என்று விஜயகுமார் கூறினார்.
உடல்தானம் குறித்த விழிப்புணர்வு
உடல்தானம் மூலம் ஒப்படைக்கப் பட்ட உடலானது எம்பார்மிங் செய்யப்படும். உடலிலுள்ள ரத்தத்தை முழுவதும் வெளியேற்றி தொடையில் துளையிட்டு செயற்கை திரவத்தை ஏற்றி உடலை பதப்படுத்தி வைத்திருப்பார்கள். ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும், ஹெபடைடிஸ் பி/சி வைரஸ் தாக்குதல் அடைந்தவர்களும், கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோய் பாதிப்படைந்தவர்களும் உடல் தானம் செய்ய இயலாது.
இயற்கையான இறப்பில்லாமல் உடற்கூராய்வு (postmortem) செய்யப்பட்ட உடல்களும் உடற்கூறியல் கல்விக்கு பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் உடல் தானம் செய்வதற்கு வயது வரம்பு கிடையாது.தன் உடலை தானம் செய்யாதவர் இறந்தால், அந்த உடலை அவரது நேரடியான சட்டப்பூர்வமான உறவினர்கள் விரும்பினாலும் தானம் செய்ய முடியும். எம்பார்மிங் செய்து பதப்படுத்தப்பட்ட உடல், மருத்துவ மாணவர்களின் உடற்கூறியல் செயல்முறை கல்விக்கு பயன்பாட்டிற்கு உதவும். உடலமைப்பு, உள் உறுப்புகளின் அமைப்பு, அதன் செயல்பாடு போன்றவற்றை அந்த உடல் மூலம் மாணவர்கள் கற்க இயலும். உடல் தானம் செய்தவர் இயற்கையாக மரணமடைந்தால் விண்ணப்ப நகலுடன் இறந்த உடலை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கலாம். வேலை நாட்களாக இருந்தால் மருத்துவக் கல்லூரியிலும், விடுமுறை நாட்களாக இருந்தால் அரசு மருத்துவமனையிலும் உடலை ஒப்படைக்கலாம்.
தொடர்புக்கு :- ‘யோகா ஆசிரியர்’ விஜயகுமார், மொபைல் எண்: 98424 12247 (திருச்சி, சுற்றுவட்டார பகுதியினர் மட்டும்)
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry
*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் தெரியும் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*