இஸ்ரேல் மீது ஹமாஸ் சரமாரி ராக்கெட் தாக்குதல்! போர் தொடங்கிவிட்டதாக நெதன்யாகு அறிவிப்பு! இஸ்ரேலில் பெரும் பதற்றம்!

0
70
Israel declares state of war as Hamas fire over 5,000 rockets

இஸ்ரேல் நாட்டின் தென் பகுதியில், திடீர் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 20 நிமிடத்தில் 5,000 ராக்கெட்டுகளை ஏவி நடத்தப்பட்ட தாக்குதலால் இஸ்ரேலில் பதற்றம் நிலவுகிறது. நாடு முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கையை அறிவிக்கும் விதமாக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டன.

பாலஸ்தீன ஆயுதக் குழுவான ‘ஹமாஸ்’ இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. ஹமாஸ் இஸ்லாமிய ஆயுதக்குழுவினர் தெற்கு இஸ்ரேலுக்குள் பதுங்கியுள்ளனர். மோட்டார் சைக்கிள்கள், கார்கள், பேரா க்ளைடர்கள் எனப் பலவாறாக இஸ்ரேலுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் நுழைந்துள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் போர் பிரகடனத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். “நாங்கள் யுத்தம் செய்கிறோம். அதில் நாங்களே வெல்வோம். எங்களின் எதிரி யோசித்துப் பார்த்திராத விலையைக் கொடுக்க நேரிடும்” என்று கூறியுள்ளார்.ஆபரேஷன் Sowrds of Iron என்ற பெயரில் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

“காஸா பகுதியிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது, இந்தத் தாக்குதலின் போது இஸ்ரேலிய ராக்கெட்டுகள் குறி வைக்கப்பட்டன. ஹமாஸ் ஆயுதக் குழுவினர் “வெவ்வேறு இடங்களில்” இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்துள்ளனர். கண்ணில் பட்ட பொதுமக்களையெல்லாம் அவர்கள் சுட்டுக் கொல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வுகளுக்கான விளைவுகளையும் பொறுப்பையும் ஹமாஸ் எதிர்கொண்டே தீரும் என இஸ்ரேலின் பாதுகாப்புப் படை(IDF) கூறியுள்ளது.

டெல் அவிவ் மற்றும் காசாவை சுற்றியுள்ள பகுதிகளில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கேயே பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள அதே நேரத்தில், தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் “தற்காலிக முகாம்களுக்கு அருகிலேயே இருக்க” அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஹமாஸ் தாக்குதலில் பல கட்டடங்கள் தரை மட்டமானதோடு, ராணுவ வீரர்கள், பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் “அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள்” ஊடுருவியுள்ளதாகவும், சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும், ஹமாஸ் இலக்குகளை குறிவைத்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் இஸ்ரேலின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஆயுதக் குழுவின் தலைவரான முகமது டெய்ஃப், “‘ஆபரேஷன் அல்-அக்ஸா ஸ்டார்மின்’ தொடக்கத்தை நாங்கள் அறிவிக்கிறோம். எதிரிகளின் ராணுவ நிலைகள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ கோட்டைகளைக் குறிவைத்த முதல் தாக்குதலில் 5,000 ஏவுகணைகள் மற்றும் ஷெல்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளோம். இஸ்ரேலின் நடவடிக்கைகளை பொறுத்தது போதும் என்று முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஏற்கெனவே எதிரியை எச்சரித்துள்ளோம்.

இஸ்ரேலிய ராணுவம், ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பொதுமக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான படுகொலைகளை அரங்கேற்றியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பின் காரணமாக நேர்ந்த குற்றங்களால் இந்த ஆண்டு நூற்றுக்கணக்கான தியாகிகள் இறந்தனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.” என்று கூறியுள்ளார். ஆயுதங்களை எடுத்து கொண்டு போரிடுமாறு இஸ்ரேல் நாட்டில் வாழும் அரபு மக்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இஸ்ரேலில் வாழும் 20 சதவிகித மக்கள் அரபு மக்கள் ஆவர். இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேத்தில் உள்ள அல் அக்ஸா மசூதியை அடையாளம் தெரியாத இஸ்ரேலியர்கள் சேதப்படுத்தியதே ஹமாஸ் படை தாக்குதல் நடத்த காரணமாக அமைந்தது என முகமது டெய்ஃப் கூறியுள்ளார்.

பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் வான்வழித் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியுள்ளது என்பதுடன் ஹமாஸ் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளது. இதற்கிடையே, தொடக்கத்தில் 5,000 ராக்கெட்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு, மேலும் இரண்டாயிரம் ராக்கெட்டுகளை ஏவியதாக ஹமாஸ் தொலைக்காட்சி சேனல(Al Aqsa TV) அறிவித்துள்ளது.

Hamas ‘captured soldiers, civilians’, attacked Israel to ‘defend Al-Aqsa’

இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே உள்ளது காசா பகுதி. தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதி ஹமாஸ் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இவ்வமைப்புத்தான் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது இஸ்ரேலின் நீண்ட கால குற்றச்சாட்டு. ஹமாஸுக்கு தேவையான நிதி உதவிகளை ஈரான் செய்து வருவதாகவும் இஸ்ரேல் கூறிவருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து காசாவைக் கைப்பற்ற முயற்சிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொள்வதும் தாக்குதல் நடத்திக் கொள்வதும் தொடர்கதையாக இருக்கிறது. 

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry