வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 7 முதல் 8 சீட் வரையில் கேட்போம் என புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்திருக்கிறார். தாமரைப்பாசம் அவர் கண்ணை மறைப்பதால்தான் விஷமத்தனமான கருத்தை அவர் முன்வைப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா–வை கடந்த 30-ந் தேதி மதுரையில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”புதிய நீதி கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறது, குறிப்பாக வாஜ்பாய் , ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இருந்த போதும் தற்போதும் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகித்து வருகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 8 இடங்கள் வரை கேட்க உள்ளோம். போட்டியிடும் சின்னம் குறித்து கூட்டணி தலைமை முடிவு செய்யும்” என்று கூறினார். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதை ஊடகங்கள் செய்தியாக பதிவிட்டுவிட்டு கடந்துவிட்டன. தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பது மக்களவை தேர்தலுக்கானதுதான். மக்களவைத் தேர்தலின்போதுதான் தமிழ்நாட்டில் கூட்டணித் தலைமையாக பாஜக கருதப்படும். சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிதான் பாஜக. தமிழ்நாட்டில் கூட்டணித் தலைமை அதிமுக–தான். தேசியக் கட்சிகளான பாஜக–வும், காங்கிரஸும், அதிமுக, திமுக–வை சார்ந்துதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும், இதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 7 முதல் 8 சீட் வரையில் கேட்போம் – புதிய நீதிக்கட்சி நிறுவனர்…
Posted by AC. Shanmugam on Saturday, January 30, 2021
முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக, பாஜக தலைவர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கு, அதிமுக தந்த பதிலடி அனைவருக்கும் நினைவிருக்கலாம். அப்படியிருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 7-8 இடங்கள் வரை கேட்க உள்ளோம் என்று புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் கூறியிருக்கிறார். சட்டமன்ற தேர்தலில், எந்தக் கட்சி தலைமையில் கூட்டணி இருக்கும், தொகுதியை யார் பிரித்துக்கொடுப்பார்கள் என்பது கூட ஏ.சி. சண்முகத்துக்கு தெரியாமல் இருக்குமா?
இதுபற்றி அரசியல் விமர்சகர் ஒருவரிடம் பேசியபோது, “தாமரைப்பாசம் கண்ணை மறைப்பதால்தான், கூட்டணிக்கு பாஜக தலைமை என்ற ரீதியில் ஏ.சி. சண்முகம் கருத்து வெளியிட்டுள்ளார். தனது கட்சியின் பலம் என்ன என்பதைக்கூட அறியாமல், 7-8 இடங்கள் கேட்போம் என்று கூறுகிறார். எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை விட்டுத்தரமாட்டோம் என்று சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. பாஜக–வை திருப்திப்படுததுவதாக நினைத்து, மிதமிஞ்சிய பாசத்துடன் அவர் கூறிய கருத்துகள் அதிமுக தலைமையை முகம் சுளிக்க வைத்துள்ளது. இவர் மீது அதிமுக கடும் அதிருப்தியில் உள்ளது. இதுபோன்ற கருத்துகளை கூறாமல், அதிமுக–வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், ஒன்று அல்லது இரண்டு இடங்கள் கொடுத்திருப்பார்கள். இப்போது அதற்கான வாய்ப்பே இல்லை” என்று கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry