இரவு முழுவதும் தூங்காமல் இருப்பது இன்றைய காலத்தில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. நான் இரவெல்லாம் தூங்கமாட்டேன், இரவு முழுவதும் வேலை செய்து கொண்டிருப்பேன். நான் இரவில் பயணம் செய்வேன்; எனக்கு இரவில் ஊர்சுற்றுவது பிடிக்கும் என்றெல்லாம் பலரும் பெருமையுடன் சொல்லி வருகிறார்கள்.
நவீன வாழ்க்கை முறை, தொழில்நுட்ப வளர்ச்சி, மொபைல் பயன்பாடு என பல காரணங்களால் இன்றைய இளைஞர்கள் இரவில் தாமதமாக தூங்குகின்றனர். டிஜிட்டல் யுகத்தில் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் வெகுநேரம் வரை போன், லேப்டாப் போன்றவற்றை பார்ப்பதை வழக்கமாக்கியுள்ளனர். சிலர் இரவு 12 மணிக்கு மேல் கண்விழித்து வேலை செய்கிறார்கள். எனவே இரவு நேரத்தில் தூங்குவது எவ்வளவு முக்கியம் என்பதையே பலரும் மறந்து இருக்கிறார்கள்.
Also Read : தூக்கத்துக்கான 3-2-1 ரூல்! இந்த விதியைப் பின்பற்றினால் விரைவான, ஆழமான தூக்கம் வருமா?
இரவில் தாமதமாக தூங்குவதும், தாமதமாக எழுவதும் நமது உயிரியல் கடிகாரத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் மற்றும் மனநலம் கடுமையாக பாதிக்கப்படும் என எச்சரிக்கின்றனர். பிரிட்டனில் உள்ள நார்த்வெஸ்டர்ன் மற்றும் சர்ரே பல்கலைக்கழகங்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, இரவில் தாமதமாக தூங்குபவர்களுக்கு நீரிழிவு, மனநல கோளாறுகள், நரம்பியல் பிரச்சினைகள், வயிறு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் அதிகரிப்பது தெரியவந்துள்ளது.
லான்சென்ட் ஹெல்த் ஸ்டடி நடத்திய ஒரு ஆய்வில், தென்கொரியாவில் இருந்து 3757 பேர் பங்கேற்றனர். கிட்டத்தட்ட 16.7 ஆண்டுகளுக்கு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 40 வயது முதல் 69 வயது வரை இருப்பவர்களில், தூங்குவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்பவர்கள் அல்லது மிகவும் தாமதமாக தூங்குபவர்கள் வழக்கமான ஆயுள்காலத்தை விட, இளம் வயதிலேயே இறந்து விடுகிறார்கள் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இரவில் தூங்காமல் இருப்பவர்களுக்கு பகல் நேரத்தில் கூடுதலாக நிறைய நேரம் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. இதன் மூலம் உடல் நலம் பல வகைகளில் பாதிக்கப்படும். எனவே தினமும் இரவில் தாமதமாக தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் அதில் இருக்கும் ஆபத்துகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இரவு முழுவதும் விழித்திருப்பது அல்லது இரவு நேரத்தில் தினசரி தாமதமாக தூங்குவதால் காக்னிட்டிவ் செயல்பாடுகள் என்று கூறப்படும் நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன் மற்றும் சிக்கலை தீர்க்கும் திறன் ஆகியவற்றில் குறைபாடு அல்லது பாதிப்பு ஏற்படும்.
கவனச்சிதறல் மற்றும் சாதாரண செயல்பாடுகளில் கூட எதிர்மறையான பிரச்சனை ஏற்படும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. எனவே உடலுக்கு ஓய்வு என்பது மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் மன நலத்திற்கும் தூக்கம் மிகவும் அவசியம். நீண்ட காலத்திற்கு சரியாக தூங்காமல் இருந்தால் மனநலம், காக்னிட்டிவ் செயல்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் தீவிரமாக பாதிக்கப்படும்.
இரவில் தாமதமாக தூங்கும் பழக்கம், நீண்ட காலம் நீடித்தால் தூக்கமின்மை பிரச்சனைகளை ஏற்படுத்தும். தூக்கமின்மை காரணமாக, நாம் பகலில் சோர்வாகவும், மனச்சோர்வாகவும் உணருவோம். இது நம் உற்பத்தித்திறன், நினைவாற்றல் மற்றும் கவனம் செலுத்தும் திறனை பாதிக்கும்.
எடை அதிகரிப்பு : இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் இருப்பது அல்லது தூங்கும் நேரம் மாறி மாறி இருப்பது உள்ளிட்டவை உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை கட்டாயமாக உண்டாக்கும். அதுமட்டும் இல்லாமல் இது பசி மற்றும் உடலின் வளர்சிதை மாற்றத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாற்றங்கள் உடல் பருமனுக்கு வழிவகுத்து, உடல் எடையையும் அதிகரிக்கும்.
தூக்கம் சரியில்லாத பொழுது, அடிக்கடி பசி எடுப்பது போன்ற உணர்வு தோன்றும். லெப்டின் மட்டும் க்ரேலின் என்று கூறப்படும் ஹார்மோன்களின் இம்பேலன்ஸ் அடிக்கடி பசிப்பது போல உணர வைக்கும் அல்லது பசியின்மையையும் ஏற்படுத்தும். எனவே ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற உணர்வு தோன்றும். வழக்கத்தை விட அதிகமாக உணவு உட்கொள்வீர்கள். எனவே உடல் எடை ஆரோக்கியமாக இருப்பதற்கு உடல் பருமனை தவிர்ப்பதற்கு சரியான நேரத்தில் போதுமான அளவு தூங்குவது மிகவும் அவசியம்.
பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம் : நீண்ட கால தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகவே காணப்படும். உடலுக்கு போதிய அளவு ஓய்வே இல்லை என்றாலே, உடல் சக்தியை இழக்கும். இதனால், நோய்தொற்றுகளை எதிர்த்து போராடும் திறனும் பாதிக்கப்படும். உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தில், நோய் எதிர்ப்பு செல்கள் உருவாக்கும் தன்மை குறைந்து, ஆன்டிபாடீஸ் எண்ணிக்கையும் குறையும். இதனால், சின்ன சின்ன பாதிப்புகளுக்குக் கூட உடல் பாதிக்கப்படும்.
மனநிலை மாற்றங்கள் & இதய நோய்கள்: தூக்கமின்மை, மனச்சோர்வு, பதற்றம் மற்றும் கோபம் போன்ற மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும். இது நம்முடைய தனிப்பட்ட உறவுகளையும், தொழில் வாழ்க்கையையும் பாதிக்கும். பல ஆய்வுகள், தூக்கமின்மை இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறுகின்றன. தூக்கமின்மை, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத்தின் செயல்பாட்டை பாதிக்கும்.
Also Read : தொப்புளில் தினமும் எண்ணெய் வைப்பதால் இவ்வளவு பலன்களா..! Benefits Of Applying Oil on Belly Button!
நீரிழிவு ஏற்படும் அபாயம் : திடீரென்று உடலில் ஏற்பட கூடிய பலவிதமான குறைபாடுகள் மற்றும் நோய்களுக்கு போதிய அளவு தூக்கமின்மை முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. இதில் நீரிழிவு நோயும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கூற்றுப்படி தினசரி 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு நீரிழிவு நோயை சரியாக நிர்வகிக்க முடியாத அளவுக்கு பாதிக்கப்படுவார்கள்.
அதுமட்டுமல்லாமல் தூக்கமின்மை என்பது இன்சுலின் ரெசிஸ்டென்ஸை அதிகரித்து, உடல் சர்க்கரை அளவை சரியாக பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளும். எனவே உடலில் இருக்கும் பலவிதமான ஹார்மோன்களுக்கும் தூக்கமின்மை ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இதனால் நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதை கட்டுக்குள் வைப்பதற்கு சிரமப்படுவார்கள்.
முன்கூட்டிய முதுமை: தோல் சேதம், முடி உதிர்வு மற்றும் சுருக்கங்கள் போன்ற முன்கூட்டிய முதுமையின் அறிகுறிகளை தூக்கமின்மை ஏற்படுத்தும். தூக்கம் போதுமானதாக இல்லாத போது, உடலில் கொலாஜன் உற்பத்தி குறைந்து, தோல் இளமையாகவும், மிருதுவாகவும் இருப்பதை இழக்கும்.
ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, நாம் நம் தூக்க சுழற்சியை சீராக்க வேண்டும். இதற்கு, ஒரே நேரத்தில் படுத்து உறங்கி, ஒரே நேரத்தில் எழுந்து பழக வேண்டும். மேலும், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு, மொபைல் போன், லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry