இது வரையிலான தமிழக சபாநாயகர்களிலேயே அடாவடியாக அதிகாரத்தை செலுத்தியதில் இன்றைய சபாநாயகர் அப்பாவு அவர்களை மிஞ்ச ஆளில்லை என்றே தோன்றுகிறது. செய்கிற அத்துமீறல்களை எல்லாம் செய்துவிட்டு, நியாயவானைப் போல பாவனை காட்டுவதிலும் இவரை மிஞ்சவும் ஆளில்லை..!
சட்டசபை நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தவும், மக்கள் பிரச்சினைகளை மன்றத்தில் எதிரொலிக்க உறுப்பினர்களுக்கு உரிய வாய்ப்பை தருவதும் தான் சபாநாயகரின் கடமை. ஆனால், அப்பாவு அவர்கள் உறுப்பினர்கள் யாரையுமே முழுமையாக பேச அனுமதிப்பதில்லை. பேசிக் கொண்டிருக்கும் போதே அதிரடியாகத் தலையிட்டு, ”இதைத் தானே சொல்ல வர்றீங்க. சரி, உட்காருங்க” அமைச்சர் பதில் சொல்வார் என அதட்டலாக உட்காரச் சொல்கிறார்.
இன்னும் சில நேரங்களில் அமைச்சர்களைக் கூட பதில் சொல்லவிடாமல், அவர்களின் குரலாக இவரே ஒலிக்கிறார். சட்டசபையை ‘ஒன்மேன் ஷோ’வாக மாற்றிக் கொண்டிருக்கிறார். சிவ சண்முகம்பிள்ளை, செல்ல பாண்டியன், பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், தமிழ் குடிமகன் போன்ற பெருந்தன்மையான பெரிய மனிதர்கள் அலங்கரித்த நாற்காலியை, ஒரு கட்ட பஞ்சாயத்து பேர்வழி போல செயல்பட்டு – சபாநாயகர் என்ற அந்தஸ்த்தையே சிதைக்கிறாரோ…? – என மூத்த பத்திரிகையாளர்களை அடிக்கடி நினைக்க வைக்கிறார் அப்பாவு.
Also Read : சபாநாயகரே கேள்விகளுக்கு பதில் சொன்னால், அமைச்சர்களுக்கு என்ன வேலை? எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் ஆவேசம்!
‘பகை முற்றி பிரிந்துவிட்ட இருவரையும் அருகருகே தான் உட்கார வேண்டும்’ என நிர்பந்திப்பது மிகத் தவறானது. அராஜகமானது. இது கடுமையான மன உளைச்சலை தரக் கூடியது. எனவே, ‘ஒ.பி.எஸ் இருக்கையை மாற்றி, அதிகாரபூர்வமாக அதிமுக எம்.எல்.ஏக்களால் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயகுமாரை அருகே அமர வைக்கும் மரபை பின்பற்ற வேண்டும்’ எனவும், அதிமுகவில் இருந்து 3 பேர் நீக்கப்பட்டது குறித்தும், சபாநாயகர் அப்பாவுவிடம் அதிமுக தலைவர்கள் பலமுறை மனு கொடுத்து அலுத்துவிட்டனர்.
இருக்கை பிரச்சினையில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒ.பி.எஸ்சை வலுக்கட்டாயமாக பழனிசாமி இருக்கையின் பக்கத்தில் உட்கார வைப்பது என்பதை தவிர்த்து, அதே முன்வரிசையில், அவருக்கான முக்கியத்துவத்தை குறைக்காமல் சற்று தள்ளி உட்கார வைப்பதில் என்ன பிரச்சினை இருக்க முடியும்..? எதிர்கட்சித் துணைத் தலைவராக ஒருமனதாக சட்டசபையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயகுமாருக்கு உரிய இருக்கையை தரமறுத்து, தொடர்ந்து மூர்க்கமாக நடந்து கொள்வதன் பின்னணி என்ன? நேர்மையாக அவர் செயல்பட முடியாமல் எந்த சக்தி இந்த நிர்பந்தத்தை தந்து கொண்டு இருக்கிறது?
காங்கிரஸ் கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்தவர் தான் அப்பாவு. தற்போது சபாநாயகராக உட்கார்ந்து கொண்டு சகல அமைச்சர்களிடமும் நிர்பந்தித்து காரியம் சாதித்து வரும் அப்பாவுவின் அதிகார அத்துமீறல்களை ஆவணங்களோடு மத்திய உளவுத்துறை பட்டியல் போட்டு வைத்துள்ளதாம்.பாஜகவின் தீவிர விசுவாசியான பன்னீர்செல்வத்தை திமுகவின் சபாநாயகர் ஏன் தூக்கி சுமக்கிறார்? அதுமட்டுமின்றி, சபாநாயகர் அந்தஸ்த்தையும் கடந்து, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தை விலாவாரியாக திமுகவின் பேச்சாளரைப் போல குதர்க்கமாக விவரித்து நீண்ட நேரம் பேசுகிறார்.
ஒ.பி.எஸுக்கு குறைந்தபட்ச சுயமரியாதையாவது இருக்குமானால், எடப்பாடி பழனிச்சாமி அருகே அமர்வதை அவரே தவிர்த்திருப்பார். தன்னை உருவாக்கிய கட்சியான அதிமுகவை அழிக்க இன்றைக்கு பாஜகவிற்கும், திமுகவிற்கும் கிடைத்துள்ள சிறந்த துருப்புச் சீட்டாக மாறியுள்ளார் அவர். ஜனநாயகத்தின் மூச்சுக் காற்றை சுவாசிக்கவே முடியாமல் சட்டசபையை சர்வாதிகாரத் தோரணையில் நடத்தும் அப்பாவுவின் அட்ராசிட்டி அளவு மீறிப் போவது ஆளும் கட்சிக்குள்ளேயே விவாத பொருளாகியுள்ளது. இதனால், சபாநாயகர் பதவியை இவரிடம் இருந்து பறித்து அமைச்சர் பதவியை முதல்வர் தரவிருக்கிறார் என்ற செய்திகளும் அடிபடுகின்றன..! பார்ப்போம்.
கட்டுரையாளர் : சாவித்திரி கண்ணன், மூத்த பத்திரிகையாளர். ஆசிரியர் – அறம் இணைய இதழ்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry