திருமண முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம், லக்ன நிர்ணய முகூர்த்தம் என பல வகையான முகூர்த்தங்கள் உள்ளது அனைவருக்கும் தெரியும். ஆனால் பலரும் அறியாத ஒரு முகூர்த்தம் உண்டு. அது தான் மைத்ர முகூர்த்தம். இந்த முகூர்த்தம், கடனை அடைக்க உகந்த நேரம் என சாஸ்திர விதிகள் சொல்கின்றன. எளிதில் தீர்க்க இயலாத மிகப்பெரும் கடன் சுமையை குறைக்க மைத்ர முகூர்த்தம் கைகொடுக்கும் என்று *காலபிரகாசிகை* என்னும் ஜோதிட மூல நூலில் கூறப்பட்டுள்ளது.
கடன் வாங்கிவிட்டால் அதை அடைக்கும்வரை யாருக்கும் நிம்மதியிருக்காது. ஒரு சிலர் கடன் வாங்கிக் கடன் அடைப்பது என்னும் பழக்கத்திலும் இருப்பர். இவ்வாறு செய்வதன் மூலம் தவிர்க்க முடியாத சுழலில் சிக்கியதுபோல கடன் நம்மை ஆழ்த்திவிடுகிறது. கடன்பட்டு அதை அடைக்கமுடியாமல் வருந்துகிறவர்களுக்கு ஓர் எளிய பரிகாரம் உண்டு. அதுவே மைத்ர முகூர்த்தம்.
மைத்ர முகூர்த்தம் என்பது ஒருவருக்குப் பணத்தால் ஏற்படக் கூடிய மன சஞ்சலங்களுக்கு விடிவுகாலம் தரும் முகூர்த்த காலம். வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தவிப்பவர்கள், மைத்ர முகூர்த்த நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை திருப்பி கொடுத்தால் விரைவில் கடன் முழுவதையும் திருப்பி கொடுக்கும் வகையில் வசதி வாய்ப்புகள் உருவாகும்.
மைத்ர முகூர்த்தம் என்றால் என்ன?
அசுவினி நட்சத்திர நாளின் மேஷ லக்ன நேரமும்; அனுஷ நட்சத்திர நாளின் விருச்சிக லக்ன நேரமும்தான் ‘மைத்ர முகூர்த்தம்’ எனப்படும்.பொதுவாகவே கடனை அடைப்பதற்கு மனம் சார்ந்த சில உந்துதல்கள், முயற்சிகள் தேவை. அசுவினி நட்சத்திரம் என்பது கேதுவுடைய நட்சத்திரம். இதில் மேஷ லக்னம் என்பது செவ்வாயின் ஆதிக்கம் கொண்டது. கேது பகவான் ஒரு பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியவர். கடனை அடைக்க, உழைப்பும் முயற்சியும் தேவை. அதற்குச் செவ்வாயின் அனுக்கிரகம் தேவை.
எனவேதான் கேதுவுக்கு உரிய நாளில் செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ லக்ன காலத்தில் கடனை அடைப்பதன் மூலம், கேது கடன் பிரச்னைகளைக் குறைத்து அருள்புரிவார். அதே போன்று விருச்சிக லக்னமும் செவ்வாயின் ஆதிக்கம் மிகுந்த காலம். அனுஷ நட்சத்திரம் சனி பகவானுக்குரியது. சனிபகவான் உழைப்பையும் ஊதியத்தையும் கொடுக்கக்கூடியவர். எனவே, அனுஷ நட்சத்திர நாளில் வரும் செவ்வாயின் பலம் பெற்ற விருச்சிக லக்ன நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக உழைப்பும் நம் முயற்சியும் இணைந்து நமக்கு நவகிரகங்களின் அருளைப் பெற்றுத்தரும் என்பதுதான் இதன் தாத்பர்யம்.
Also Read : CSK டீமை பலிவாங்கிய சீனியர் – ஜுனியர் அரசியல்! தோனியே இப்படிச் செய்யலாமா? மிஸ்ஸான டீம் ஸ்பிரிட்!
செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாள் மற்றும் நேரத்திலும் கடனை திருப்பிக் கொடுக்கலாம். சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டு விலகும் சமயம் கடனை திருப்பி தரலாம். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையிலும் கடனை திருப்பி தரலாம். சென்ற பிறவியின் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
மைத்ர முகூர்த்தம் என்பது ஒருவருக்குப் பணத்தால் ஏற்படக் கூடிய மன சஞ்சலங்களுக்கு விடிவுகாலம் தரும் முகூர்த்த காலம். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் ஏற்படும். உங்கள் கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் கவலைப் படவேண்டாம். உங்கள் கையில் இருக்கும் பணம் எவ்வளவாக இருந்தாலும் அதில் ஒரு சிறுதொகையை எடுத்துக் கொள்ளுங்கள். அது 100 ரூபாயாக இருந்தாலும் சரி 10 ரூபாயாக இருந்தாலும் சரி. அந்தப் பணத்தை ஒரு கவரில் வைத்து, நீங்கள் யாருக்குத் தர வேண்டுமோ அவரின் பெயரை அந்தக் கவரில் எழுதிவிடுங்கள். வங்கிக் கடனாக இருந்தால் வங்கியின் பெயரை எழுதிவிடுங்கள். பின்பு அந்தக் கவரை சுவாமிபடம், பூஜை அறை அல்லது நீங்கள் வழக்கமாகப் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிடுங்கள்.
பின்பு வீட்டில் இருக்கும் உங்கள் இஷ்ட தெய்வத்தின் படத்துக்கு அல்லது சிவலிங்கம், பெருமாள் விக்ரஹம் போன்ற சிறு மூர்த்தங்கள் இருந்தால் அதற்கு சிறிது அரிசி மாவு கொண்டு அபிஷேகம் செய்து பூ சாத்தி வழிபடுங்கள். குறைந்தது ஐந்து நிமிடம் சுவாமிக்கு முன்பாக அமர்ந்து சிவபுராணம், கோளறுபதிகம், பாசுரங்கள் பாடுங்கள். அல்லது, உங்களுக்குப் பிடித்த தெய்வ ஸ்லோகத்தைப் பாடி ஆராதியுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்களின் விருப்பமும் வேண்டுதலுமான செல்வ வளம் அதிகரிக்க இறைவன் அருள்புரிவார். அதனால் விரைவிலேயே உங்கள் கடன் அடையும். நீங்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும்போது, ஏற்கனவே கவரில் எடுத்துவைத்த அந்தச் சிறு தொகையையும் சேர்த்துச் செலுத்த வேண்டும். இது உங்களின் விருப்பத்துக்கும் பிரயாசைக்குக் கிடைக்கும் ஆசீர்வாதம் என்பதை உணருங்கள்.
மைத்ர முகூர்த்தம் எப்போது வருகிறது?
23.05.2024 வியாழன் அனுஷம் விருச்சிக லக்னம் மாலை 05.38 முதல் 07.44 வரை.
07.05.2024 அன்று ஒரு முகூர்த்தம் சென்றுவிட்ட நிலையில், இந்த மாதத்தில் 2-வது மைத்ர முகூர்த்தம் 23ந் தேதி வருகிறது. அன்றைய தினம் கடனை அடைக்க முயற்சிப்பது மட்டுமின்றி, புதிய வியாபாரத்தைத் தொடங்குதல், முதலீடு செய்தல், புதிய சொத்துக்களை வாங்குதல் போன்ற தொடங்கங்களுக்கும் சிறந்தது ஆகும்.
Also Read : சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? இதோ உங்களுக்கான பதில்! Vels Exclusive
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry