மனித உடலுக்குள் புகுந்து தசையைத் தின்று 48 மணி நேரத்தில் மரணிக்க வைக்கும் அபாயம் கொண்ட புதிய வகை பாக்டீரியா ஜப்பானில் பரவி வருகிறது.இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரண்டே வாரத்தில் 977ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. சீனாவில் தொடங்கிய கரோனா பெருந்தொற்று அபாயத்துக்குப் பிறகு, ஜப்பானில் தசையைத் தின்று 2 நாள்களில் உயிரைக் கொல்லும் பாக்டீரியா பரவி வருவது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நோய்க்கு ‘ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சின்ட்ரோம்’ (Streptococcal Toxic Shock Syndrome – STSS) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை பாக்டீரியாக்கள் ஆழமான திசுக்களிலும், இரத்த ஓட்டத்திலும் பரவும்போது எஸ்.டி.எஸ்.எஸ். பாதிப்பை ஏற்படுத்தும். இது மிகத் தீவிரமான உடல்சோர்வை ஏற்படுத்தி 2 நாள்களில் உயிரைக் கொல்லும் அபாயம் கொண்டது. ஜப்பானில் இந்தவகை பாக்டீரியாவால் (ஜூன் 2ஆம் தேதி முதல்) கிட்டத்தட்ட 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 941 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு அதைவிட கூடுதலாக பதிவாகியுள்ளது.
எஸ்.டி.எஸ்.எஸ் என்பது குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பாக்டீரியாவால் (Group A Streptococcus Bacteria) ஏற்படும் ஒரு அரிதான ஆனால் கடுமையான பாக்டீரியா தொற்று ஆகும். இந்த பாக்டீரியா நச்சுகளை உருவாக்குகிறது, உடலில் ஒருவித உயர்-அழற்சி நிலையைத் தூண்டுகிறது, இது விரைவான திசு நெக்ரோஸிஸ், தீவிர வலி மற்றும் அதிர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இந்த பாக்டீரியா இரத்த ஓட்டம் மற்றும் உறுப்புகளில் விரைவாக நுழையும் என்பதால், குறுகிய காலத்தில் பல உறுப்புகளை செயலிழக்க வைக்கிறது.
Also Read : குழந்தைப் பேறுக்கு கைகொடுக்கும் வேர்க்கடலை! பிரமிக்க வைக்கும் பயன்கள்!
காய்ச்சல், குளிர், தசை வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற ஆரம்ப அறிகுறிகளுடன் STSS பாதிப்பு தொடங்குகிறது. 24 முதல் 48 மணி நேரத்திற்குள், இது குறைந்த இரத்த அழுத்தம், உறுப்பு செயலிழப்பு, விரைவான இதய துடிப்பு மற்றும் வேகமான சுவாசத்திற்கு வழிவகுக்கும். குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (ஜிஏஎஸ்) பொதுவாக குழந்தைகளில் ஸ்ட்ரெப் த்ரோட் எனப்படும் வீக்கம், தொண்டை வலியை ஏற்படுத்துகிறது, ஆனால் பெரியவர்களில் இது மூட்டு வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் போன்ற கடுமையான அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.
குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களில் திசு இறப்பு, சுவாசப் பிரச்சினைகள், உறுப்பு செயலிழப்பு மற்றும் சில நேரங்களில் மரணம் வரை விரைவாக ஏற்படுத்தக்கூடும். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய (CDC) அறிக்கையின் படி, “சிகிச்சை அளித்தாலும் கூட STSS ஆபத்தானது. STSS உள்ள 10 பேரில், மூன்று பேர் இறப்பார்கள், அந்த அளவிற்கு ஆபத்தானது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய டோக்கியோ பெண்கள் மருத்துவ பல்கலைக் கழக பேராசிரியர் கென் கிகுச்சி, இதில் அதிக இறப்புகள் 48 மணிநேரத்தில் நடக்கிறது. காலையில் ஒரு நோயாளி பாதத்தில் வீக்கம் இருப்பதை உணர்ந்தால், மதியத்துக்குள் முட்டி வரை பரவுகிறது. மேலும், 18 மணிநேரத்தில் இறக்கவும் நேரிடுகிறது. இந்த ஆண்டு 2,500 பேர் வரை இந்த நோயால் பாதிக்கப்படலாம். இது 30 சதவீத இறப்பு விகிதத்துக்கு வழிவகுக்கும். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், புண்களை பாதுகாப்புடன் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார். இருமல் மற்றும் தும்மும்போது வாயை மூடுவதும் அவசியம்.
இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் குடலில் இருக்கலாம். மலம் கழித்துவிட்டு சுத்தம் செய்யும்போது அவை நம் கைகள் மூலம் பரவலாம் என எச்சரிக்கப்படுகிறது. எஸ்.டி.எஸ்.எஸ். பாதிப்பைக் கண்டறிவது பல சோதனைகளை உள்ளடக்கியது, இதில் குரூப் ஏ ஸ்ட்ரெப் பாக்டீரியாவைக் கண்டறிவதற்கும் உறுப்பு செயல்பாட்டை சரிபார்க்கவும் இரத்த பரிசோதனைகள் செய்யப்படும். குறைந்த இரத்த அழுத்தம், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பு செயலிழப்புக்கான அறிகுறிகளுடன் ஒருவருக்கு குரூப் ஏ ஸ்ட்ரெப் தொற்று இருக்கும்போது, STSS பாதிப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.
ஜப்பான் மட்டுமின்றி 2022ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து ஐரோப்பாவின் 5 நாடுகளிலும் ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சின்ட்ரோம் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் முடிவு வந்ததே இவ்வகை பாக்டீரியாக்கள் பரவ முக்கிய காரணம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் தொற்று பரவல் ஜப்பானில் இருந்தாலும், சர்வதேச பயணங்களால் உலகளாவிய பரவல் ஏற்படக்கூடும். STSS பரவலைத் தடுக்க, வழக்கமான கைகளை கழுவுதல் மற்றும் தோல் காயங்களுக்கு உடனடி சிகிச்சை போன்ற அடிப்படை சுகாதாரத்தை பராமரிப்பது முக்கியம். திடீரென கடுமையான உடல் வலி, அதிக காய்ச்சல் மற்றும் காயம் ஏற்பட்ட இடத்தில் சிவத்தல் போன்ற ஆரம்ப அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
சிகிச்சை என பார்க்கும்போது, எஸ்.டி.எஸ்.எஸ். பாக்டீரியாவைக் கொல்ல நரம்புகள் (I.V.) மூலம் சக்திமிக்க ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்படுகிறது. இரத்த அழுத்தம் மற்றும் உடல் உறுப்புகள் சரியாக வேலை செய்வதற்காக தொடர்ந்து திரவ மருந்துகள் செலுத்தப்படுகின்றன. சூழல் மோசமாகும்போது, பாதிக்கப்பட்ட திசுக்களை அகற்றவும், மேலும் சிக்கல்களைத் தடுக்க அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry