புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பது முழுக்க முழுக்க மத்திய அரசை சார்ந்து உள்ளது. பட்ஜெட் ஒதுக்கீடு, மானியம் உள்ளிட்ட அனைத்தும் மத்திய உள்துறையின் உத்தரவுப்படி தான் நடக்கும். எனவே இங்கு துணைநிலை ஆளுநரின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது.
பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. 2011க்கு முன்பு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் யார் என்பதே மக்களுக்கு பெரிதாக தெரியாது. துணை நிலை ஆளுநருக்கான அதிகாரம் என்ன? எப்படி செயல்படுகிறார்? என்னபது குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை.
2011ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கிய ரங்கசாமி ஆட்சியையும் கைப்பற்றினார். அப்பொழுது முதல் ஆளுநருக்கும், முதல்வருக்கும் அதிகார யுத்தம் தொடங்கியது. குறிப்பாக 2013ல் வீரேந்திர கட்டாரியா துணைநிலை ஆளுநராக பதவி ஏற்ற பிறகு, முதல்வர் – ஆளுநர் பனிப்போர் வெட்ட வெளிச்சமானது. பின்னர் 2014ல் ஏ.கே.சிங் துணைநிலை ஆளுநராக பதவி ஏற்றார். கட்டாரியா, ஏ.கே. சிங் இருவருமே காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் என்றாலும், பிரபலமில்லாதவர்கள் என்பதால் புதுச்சேரி மக்கள் இவர்களை ஆளுநராகத்தான் பார்த்தார்கள், காங்கிரஸ் கட்சிக்காரர்களாக பார்க்கவில்லை. இதனால் ஆளுநர் நடவடிக்கை குறித்து ரங்கசாமி தெரிவித்த கருத்துக்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை, மக்கள் ரங்கசாமியைத் தான் குறை கூறினார்கள்.
ஆளுநர்களின் நடவடிக்கையால் ரங்கசாமி மீது ஏற்பட்ட அதிருப்தியை காங்கிரஸ் கட்சி கச்சிதமாக அறுவடை செய்து கொண்டது. 2016ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அந்த சமயத்தில் பாஜகவின் டெல்லி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தோல்வி அடைந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடியை, மத்திய பாஜக அரசு துணைநிலை ஆளுநராக நியமித்தது. அப்போது முதல் யாருக்கு அதிகாரம் என்ற போட்டியில், ஆளுநர் சூப்பர் முதல்வராக செயல்படுவதாக அப்போதைய முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
ஆளுநர் மாளிகையில் பொதுமக்கள் குறைதீர்க்க நேரம் ஒதுக்கி மக்களை நேரடியாக சந்தித்தது வந்த கிரண்பேடி, தினமும் அதிகாரியுடன் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உத்தரவுகளைப் பிறப்பித்தார். கிரண்பேடியின் இந்த நடவடிக்கையை நாராயணசாமி மக்கள் மன்றத்துக்கு கொண்டுசென்றபோது, மக்கள் கோபம் ஆளுநர் மீது திரும்பியது. ஆளுநரை குறைகூறும் போக்கு மக்களிடம் இருந்தது. காரணம் கிரண்பேடி ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாடறிந்த முகமாக இருந்தார். இதனால் இவரை ஆளுநராக பார்க்காமல், பாஜகவைச் சேர்ந்தவராகவே பொதுமக்கள் பார்த்தனர்.
ஆட்சி முடியும் தருவாயில், தேர்தலுக்கு முன்பு கிரண்பேடியை மாற்றினால் தான் பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று பாஜகவினரே டெல்லிக்கு புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக 2021 பிப்ரவரியில், அதாவது தேர்தலுக்கு முன்பாகவே தமிழிசை சௌந்தர்ராஜனை துணைநிலை ஆளுநராக பாஜக அரசு நியமித்தது. என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தமிழிசை தமிழக பாஜக தலைவராக இருந்தவர், தமிழ் தெரிந்தவர் என்பதால் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் அவரை வரவேற்றனர்.
இனி ஆளுநர் – முதல்வர் யுத்தம் இருக்காது, ஆட்சி சிறப்பாக நடைபெறும் என்று பொதுமக்களும் எதிர்பார்த்தனர். ஆனால், கிரண் பேடியைப்போல தமிழிசை சௌந்தர்ராஜனும் கள ஆய்வுக்குச் சென்றார். அதுவும் பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயம் அமைச்சர் பொறுப்பு வகிக்கும் கல்வித்துறையில் தமிழிசை ஆய்வு செய்தார். இதை பாஜகவினர் மட்டுமின்றி பொதுமக்களும் ரசிக்கவில்லை, மாறாக வெறுப்பே ஏற்பட்டது. புதிய சட்டப்பேரவை கட்டுவதற்கான கோப்பை மாதக்கணக்கில் நிலுவையில் வைத்திருந்து கடைசிவரை தமிழிசை ஒப்புதல் அளிக்கவில்லை.
புதுச்சேரி சிறிய மாநிலம், இங்கு முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் பொதுமக்கள் எளிதில் சந்திக்க முடியும். இவர்களைத் தாண்டி தீர்க்க முடியாத பிரச்சினை என்றால், அது ஆளுநராலும் தீர்க்க முடியாது என்றே பொருள். தமிழிசை ஆய்வு செய்து என்ன மாற்றத்தை கொண்டு வந்தார் என மக்கள் கேள்வி எழுப்பினார்கள். மேலும், ஆளுநர்கள் எதற்காக அரசியல் செய்ய வேண்டும்? அரசியல் முதிர்ச்சி பெற்ற பிறகுதான் ஆளுநராக நியமிக்கப்படுகின்றனர், உள்நோக்கத்துடன் இவர்கள் அரசியல் செய்வதை எப்படி ஏற்க முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தான் சார்ந்திருந்த பாஜகவை வளர்க்க வேண்டும் என்றால், கட்சிக்கு நல்ல பெயர் வாங்கித்தர வேண்டும் என்று விரும்பினால், மாநில பாஜக அமைச்சர்கள் மூலமாகவோ, பாஜக எம்.எல்.ஏ.க்கள் மூலமாகவோ அல்லது மாநில பாஜக தலைவர் மூலமாகவோ செய்தால் அவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும், கட்சி மீதும் நல்ல அபிப்பிராயம் ஏற்படும். அதை விடுத்து ஆளுநராக ஏன் அரசியல் செய்கின்றனர் என பாஜக அனுதாபிகளே கேள்வி எழுப்புகின்றனர்.
பாஜக நியமித்த கிரண்பேடி, தமிழிசை சௌந்தரராஜன், சி.பி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் புதுச்சேரி மக்களிடம் நன்கு பரிச்சயமானவர்கள். இவர்கள் பாஜகவின் முக்கிய பதவியில் இருந்தவர்கள். இதனால் இவர்களை ஆளுநராக பார்ப்பதைவிட பாஜகவைச் சார்ந்தவர்களாகவே பொதுமக்கள் பார்க்கின்றனர் . ஆளுநர் பற்றி மக்கள் மத்தியில் நிலவும் கருத்தை மாநில உளவுத்துறை ஆளுநரிடம் தெரிவிக்க இயலாது. ஆனால் மத்திய உளவுத்துறை இதுபற்றி விரிவான அறிக்கையை மத்திய உள்துறைக்கு ஏன் அனுப்பவில்லை என்ற கேள்வி எழுகின்றது.
ஆளுநர்களின் செயல்பாடு, மக்கள் மத்தியில் அவர்களுக்கு உள்ள செல்வாக்கு, அவர்களின் நடவடிக்கை குறித்த மக்களின் கருத்து ஆகியவை தொடர்பாக மத்திய உள்துறை விரிவான அறிக்கையை பெற்று ஆளுநர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல் வழங்க வேண்டும். இல்லை என்றால் மக்கள் பாஜகவை மேலும் வெறுப்பார்கள். மக்களவைத் தேர்தலில் நமச்சிவாயத்தின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என பாஜக அனுதாபிகள் தெரிவிக்கின்றனர். இனிவரும் காலங்களில் மீடியா வெளிச்சத்துக்கு ஆசைப்படாத, பிரபலமில்லாத தலைவர்களில் ஒருவரை அடையாளம் கண்டு துணை நிலை ஆளுநராக நியமித்தால் புதுச்சேரி பாஜகவுக்கு நல்லது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry