தேர்தல் தோல்வி எதிரொலி! ரங்கசாமி மீது பாயும் பாஜக! அமைச்சரவையில் இருந்து வெளியேற முடிவு? டெல்லியில் ரகசியக் கூட்டம்!

0
1976
BJP accuses Puducherry CM Rangasamy of blacking out Centre's schemes | BJP Chief J.P. Nadda & N.R. Congress Chief - Puducherry CM N. Rangasamy, Union Home Minister Amit Shah| File Image

3.30 Mins Read : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அசுர பலத்துடன் களம் கண்ட பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், திமுக அலையால் படுதோல்வி அடைந்தார். நாடு முழுவதும் பாஜகவுக்கு சறுக்கல் என்றாலும், புதுவை தோல்வியை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை.

புதுவை மாநில பாஜக அரசியலை கவனிக்கும் டெல்லி குழுவினர், தேர்தல் முடிவு குறித்து விவாதித்து எடுத்துள்ள முடிவு பற்றி கசிந்துள்ள தகவல்கள், அவர்களது உள்ளக் குமுறலை வெளிப்படுத்துவதாக உள்ளது. மத்திய பாஜக அரசு புதுச்சேரி மாநிலத்துக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் செய்த உதவிகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல், ரங்கசாமி மறைத்து விட்டார் என்பதே விவாதத்தின் மையக் கருத்தாக இருந்ததாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அதிருப்தி காரணமாக காங்கிரஸில் இருந்து வெளியேறிய ரங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்து 2011ல் ஆட்சி அமைத்தார். மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு, ரங்கசாமி அரசுக்கு ஒத்துழைப்பு தராததால், அவரால் எந்த மக்கள் நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியவில்லை. மத்திய அரசிடமிருந்து ரங்கசாமி திட்டங்களை கேட்டுப்பெறவில்லை என்ற கோபத்தில், 2016 தேர்தலில் மக்கள் காங்கிரசுக்கு வாய்ப்பளித்தனர்.

நாராயணசாமி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், மத்திய பாஜக அரசால் புதுவை துணை நிலை ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டார். முதலமைச்சர் – ஆளுநர் ஆகியோர் இடையேயான அதிகார யுத்தத்தால் நியமன எம்.எல்.ஏ., வாரியத் தலைவர் உள்பட எந்த நியமனமும் நடைபெறவில்லை. நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, அதற்கு முந்தைய ரங்கசாமி ஆட்சி என 10 ஆண்டுகள் புதுவையில் எந்த ஒரு அரசுப் பணியிடமும் நிரப்பப்படவில்லை. நகரம் மற்றும் கிராமப்புற சாலைகள் சீரமைக்கப்படாமல் பல் இளித்தது.

Also Read : கூட்டணி மாற்றத்தை எற்படுத்துமா தேர்தல் முடிவு? அதிரடிக்குத் தயாராகும் பாஜக! டென்ஷனில் ரங்கசாமி!

இந்தநிலையில் தான் பாஜக கூட்டணியுடன் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ரங்கசாமி சந்தித்தார். மத்தியில் பாஜக அரசு உள்ளதால் புதுவைக்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்கும் என்ற அவரது பரப்புரை மக்கள் மத்தியில் எடுபட்டது. இதனால் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக ஆறு இடங்களிலும் வென்றது. ஆறு சுயேச்சைகளும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு பதவி ஏற்றது. ஆளுநராக தமிழிசை பதவியேற்றார். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி என்பதால் புதுவைக்கு கிடைத்த முதல் பலன், 10 ஆண்டுகள் கழித்து புதுவைக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை, என்.ஆர். காங்கிரஸ் மற்றும் ரங்கசாமியின் வெற்றி என்று அக்கட்சியினர் பிரகடனப்படுத்தினார்கள்.

அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட தொடங்கியது. அரசு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியானது. 10 ஆண்டுகளாக தேங்கியிருந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முடங்கியிருந்த ரூ.1,000 கோடி மதிப்பிலான பணிகள் வேகம் எடுக்க தொடங்கின. இதனால் புதுவை முழுமைக்கும் சாலைகள் புதிதாக போடப்பட்டன. இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் எளிதில் மக்களை சந்திக்க முடிந்தது.

2011 – 2016 காலகட்டத்தில் தனது ஆட்சிக்கு மத்தியி்ல் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எதையும் செய்யாததை வசதியாக மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு, மத்திய பாஜக அரசு இவ்வளவு உதவிகள் செய்தபோதும், ரங்கசாமி சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன்னால் செயல்பட முடியவில்லை, மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என பொதுவெளியில் தெரிவித்து வருகிறார். இது மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்டது. பெரும்பாலான திட்டங்கள் மத்திய அரசின் உதவியோடு நடைபெற்றாலும், அதை ரங்கசாமி தான் செய்தார் என்றும், ரேஷன் கடைகள் திறக்காதது; பஞ்சாலைகள் திறக்காதது என நீண்ட கால பிரச்சனைகளுக்கு பாஜக தான் காரணம் என்ற மனோபாவம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், நல்ல திட்டங்களுக்கு ரங்கசாமிதான் காரணம், செயல்படாமல் போன அனைத்து விஷயத்திற்கும் பாஜகவே காரணம் என்ற மனநிலை மக்களிடம் காணப்படுகிறது.

Also Read : இதுவரை வெளிவராத ரகசியங்கள்! பிரபாகரனுக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் போட்டுவிட்ட ராஜீவ்காந்தி! புலிகள் இயக்கத்துக்கு கொடுக்கப்பட்ட ரூ.5 கோடி நிதி! ‘The Rajiv I Knew’!

சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆறுபேரில் நேரு, பிரகாஷ் குமார், காரைக்கால் சிவா ஆகிய மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ரங்கசாமிக்கு ஆதரவு தெரிவித்தவர்கள். இவர்களுக்கு, அரசியல் செய்வதற்கான முழு உதவிகளையும் சலுகைகளையும் ரங்கசாமி செய்துகொடுத்துள்ளதாக விவாதிக்கப்பட்டது. எஞ்சிய மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான ஏனாம் கொல்லப்பள்ளி சீனிவாசா அசோக், திருபுவனை அங்காளன், உழவர்கரை சிவசங்கரன் ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள்.

இவர்களில் ஏனாம் சீனிவாச அசோக்குக்கு, என்.‌ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லாடி கிருஷ்ணராவ் மூலமும், அங்காளனுக்கு கோபிகா மூலமும் ரங்கசாமி பல நெருக்கடிகளை கொடுப்பதாக புகார் உண்டு. தனது தொகுதிக்கு இந்த அரசு எதையுமே செய்யவில்லை, என்னால் மக்களை சந்திக்க முடியவில்லை என சட்டசபையிலேயே புகார் தெரிவித்தார் உழவர்கரை சிவசங்கரன். அங்காளனுக்கு அரசு கார் கூட கவர்னர் தலையிட்டதால் கிடைத்ததாக கூறப்படுகிறது.

மத்திய அரசு புதுவைக்கு செய்ததை ரங்கசாமி தான் மறைத்தார் என்றால், இங்குள்ள பாஜகவினரும் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தவறிவிட்டனர். சொந்த கட்சி ஆளும் மாநிலத்தில் ஆளுநராக இருந்துகொண்டு தமிழிசை செய்த அரசியலையும் மக்கள் ரசிக்கவில்லை. ரங்கசாமி கட்சியின் உள்ளடி, மத்திய அரசு செய்தது எதுவும் தெரியாததால் மக்களிடையே நிலவிய அதிருப்தி என அனைத்தும் சேர்ந்து நமச்சிவாயத்தை வீழ்த்தியது.

இந்நிலையில், “மத்திய அரசு புதுச்சேரி அரசுக்கு இனியும் தேவையான ஒத்துழைப்பு கொடுத்து சலுகைகள் தந்தாலும், அது ரங்கசாமிக்கும் எதிர்க்கட்சியின் அரசியலுக்கும் மட்டுமே உதவும். பாஜகவுக்கு எந்தப் பயனும் இல்லை. ரங்கசாமியை அகற்றிவிட்டு ஆட்சியை கைப்பற்றினாலும் பொதுமக்களின் கோபத்தைத் தான் சம்பாதிக்க முடியும்; மட்டுமின்றி எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலும் பாஜகவுக்கு பெரும் சறுக்கலாகவே அமைந்துவிடும்; எனவே சபாநாயகர் பதவியை மட்டும் வைத்துக்கொண்டு, அமைச்சரவையில் இருந்து வெளியேறலாம்.

இப்படிச்செய்தால்தான் பாஜக பங்குபெற்ற ஆட்சிக்கும், பாஜக இல்லாத ஆட்சிக்கும் இடையேயான வித்தியாசத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.” என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதற்கு நிர்வாகிகள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இந்தக் கூட்டம் பற்றி புதுச்சேரி மாநில பாஜக நிர்வாகிகளை அழைக்காதது மட்டுமின்றி, அவர்களுக்கு கூட்டம் பற்றியோ, அதில் எடுக்கப்பட்ட முடிவு பற்றியோ தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Also Read :வீட்டில் கண்ணாடியை எந்த திசையில் வைக்க வேண்டும்? பெட் ரூமில் வைத்தால்…! Mirror Vastu: Tips for placing mirrors at home and office!

மத்தியில் ஆட்சி அமைப்பதில் தீவிரமாக உள்ள பாஜக மேலிடம், அந்தப் பணிகளை முடித்து சகஜ நிலைக்கு வந்த பிறகு புதுவை நிலவரம் குறித்து ஆலோசித்து முடிவு செய்யலாம் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாஜகவினரே கூறுகின்றனர். முதலமைச்சர் ரங்கசாமி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதால், ரங்கசாமி தலைமையிலான கூட்டணி அரசில் பாஜக நீடிக்குமா? அல்லது அமைச்சரவையில் இருந்து வெளியேறுமா? என்பது ஓரிரு வாரங்களில் தெரிந்துவிடும். அமைச்சரவையில் இருந்து வெளியேறினாலும், மக்களிடம் ஏற்படும் அதிருப்தியைத் தவிர்க்க ஆட்சிக்கான ஆதரவு தொடரும் என்றே பாஜகவினர் கூறுகின்றனர்.

முதலமைச்சர் ரங்கசாமி – பாஜக இடையேயான மனக்கசப்பு புதிதாக ஏற்பட்டதல்ல. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலேயே வெளிப்பட்டது. ‘தங்களது தொகுதிகளுக்கு அரசின் திட்டப் பணிகளை ஒதுக்காமல் முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணிக்கிறார், வாரியத் தலைவா், கோவில் அறங்காவலர் பதவிகள் தருவதாகச் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் எதைப்பற்றியும் ஆலோசிப்பதில்லை. திட்டப் பணிகள் குறித்து அமைச்சரவைக் கூட்டமும் நடத்தி ஆலோசனை செய்வதில்லை.’ என குற்றச்சாட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry