இந்து மதத்தில் எத்தனையோ தெய்வங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபட ஒவ்வொரு முறை வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்கு காவடி எடுப்பது, பால் குடம் எடுப்பது, பாத யாத்திரை செல்வது, மொட்டை அடிப்பது, அலகு குத்துவது, அலங்கபிரதட்சனம் செய்வது என பல வகைகளில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.
இறைவன் மீது பக்தி கொண்டவர்கள், தங்கள் வேண்டுதலை இறைவன் முன் வைக்கிறார்கள். தங்கள் கோரிக்கையை வைக்கும் போதும், அது நிறைவேறிய பின்பு நன்றி செலுத்தும் வழிபாடே நேர்த்திக்கடன் எனப்படும். அந்த வகையில் ஒரு நேர்த்திக்கடன் தான் அலகு குத்துதல். இது இறை நம்பிக்கை உடையவர்களால் செய்யப்படுகின்ற நேர்த்திக்கடன்களில் ஒன்றாகும். இது, உடலை வருத்தும் நேர்த்திக் கடன் வகையைச் சேர்ந்தது.
சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி மாத உற்சவம், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் என முருகனைப் போற்றி வழிபட பல முக்கிய விசேஷ நாட்கள் உள்ளன. இயற்கையைப் போற்றிய தமிழர்களிடம் இறை உணர்வு அதிகம் இருந்தது. நமது நாட்டில் தெய்வத் திருத்தலங்களில் அதிகம் காணப்படுவது முருகன் ஆலயமே. முருகனை வழிபட, விரதமிருந்து பாத யாத்திரை செல்வது, காவடி எடுப்பது, அலகு குத்துவது எனப் பல வகையிலும் வழிபாடு செய்கின்றனர். பிற தெய்வ வழிபாட்டில் அலகு குத்துதல் இருப்பதில்லை. ஐயனார் போன்ற சிறுதெய்வ வழிபாட்டிலும், முருகன், மாரியம்மன் போன்ற பெருதெய்வ வழிபாட்டிலும்தான் இந்த அலகு குத்தும் நேர்த்திக்கடன்கள் செய்யப்படுகின்றன.
கோயில் திருவிழாவின் போது பக்தர்கள் சிலர் தங்களது நாக்கு அல்லது கன்னங்களில் வேறுபட்ட அளவிலான வேல்களைக் குத்திக் கொண்டு கோவிலை நோக்கி பக்தி ஊர்வலமாகச் செல்வார்கள். இதுவே அலகு குத்துதல் எனப்படுகிறது. சில கோவில் திருவிழாக்களில் பால் செம்பு, காவடி போன்றன எடுப்போர் தம் வாயில் கூரிய உலோக ஊசிகளால் குத்திக் கொள்ளுவதும் உண்டு.
பக்தரின் வாயில் ஒரு கன்னத்திலிருந்து மற்றொரு கன்னத்தை நோக்கி சிறிய ஊசியால் குத்தி விடுவார்கள். ஊசியின் ஒரு முனை திரிசூலம் அல்லது வேல் போல் இருக்கும். மற்றொரு முனையை ஒரு கன்னத்தில் குத்தி, மற்றக் கன்னத்தின் ஊடாக எடுப்பார்கள். அலகு குத்துவதை அது குத்தப்படும் உறுப்புக்களின் அடிப்படையில் நாக்கு அலகு, முதுகு அலகு, காவடி அலகு, வயிற்று அலகு என்றும், குத்தப்படும் பொருட்களைக் கொண்டு வேல் அலகு, மயில் அலகு, வாள் அலகு, பறவைக்காவடி அலகு, தொட்டில் அலகு, குதிரை அலகு என பல வகையாக குறிப்பிடுவதுண்டு. பெரும்பாலும் நாக்கில், கன்னத்தில், முதுகில் தான் பக்தர்கள் அலகு குத்துவதுண்டு.
இது போன்று உடலை துளையிட்டு வேண்டுதல் நிறைவேற்றும் போது முதலில் வலிப்பதாகவும், பிறகு வலிப்பதில்லை என்றும் பக்தர்கள் கூறுவதுண்டு. அசைக்க முடியாத நம்பிக்கையும், தெய்வ பக்தியும், மனதில் வைராக்கியமும் இருந்தால் மட்டுமே இதுபோன்ற வேண்டுதல்களை நிறைவேற்ற முடியும். முருகனுக்கு நேர்த்திகடன் கழிக்க அலகு குத்திக் கொள்ளும் வழிபாடு கடுமையானதாக இருந்தாலும், பக்திப் பரவசத்துடன் நேர்த்திக்கடன் முடிப்பவர்களுக்கு நினைத்தது எல்லாம் நடக்கும் என்பது நம்பிக்கை.
பொதுவாக அலகு குத்துவதாக வேண்டிக் கொள்பவர்கள், பல வருடங்களாக தீராத குறை தீர வேண்டும் என முருகன் அல்லது அம்மனிடம் வேண்டிக் கொள்வார்கள். இந்த ஆண்டு திருவிழாவின் போது வேண்டிக் கொண்டால், அடுத்த ஆண்டு திருவிழா நடக்கும் காலத்திற்குள் அந்த வேண்டுதல் நிறைவேறி விட்டால், குறிப்பிட்ட நாட்கள் மிகக் கடுமையாக விரதம் இருப்பார்கள். அதாவது ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, காலில் செருப்புக் கூட அணியாமல் அல்லது பகல் முழுவதும் உணவு ஏதும் எடுத்துக் கொள்ளாமல், இரவில் மட்டும் எளிமயான உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பார்கள். திருவிழாவின் போது முறையாக காப்புக்கட்டி, விரதத்தை தொடர்ந்து, திருவிழா நாளில் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
முருகப் பெருமானும், அம்பிகையும் எளிதில் பக்தர்களின் வேண்டுதலுக்கு மனம் இறங்கி, எப்படிப்பட்ட மனக்குறையாக இருந்தாலும் தீர்த்து வைப்பார்கள் என்பது நம்பிக்கை. அதனாலேயே முருகப் பெருமானுக்கு அதிகமானவர்கள் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றுவதாக சொல்லப்படுகிறது. அறிவியல் ரீதியாக பார்த்தால் இதை ஒரு விதமான அக்குபன்ச்சர் முறை என்று சொல்கிறார்கள். இப்படி செய்வதால் அவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வதாகவும், அவர்களின் உடலில் வயதான காலத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry