பலரும் நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டியை வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக முன்வைக்கிறார்கள். அதில் செய்யப்படும் இனிப்புகள் அல்லது பலகாரங்களை, மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கவும் செய்கிறார்கள். கருப்பட்டி காபி, டீ கடைகள் எண்ணிக்கையில் அதிகரித்திருப்பதும், கருப்பட்டியில் செய்யப்படும் இனிப்பு பலகாரங்கள் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதும், மக்களுக்கு அதன் மீதான மோகத்தையே காட்டுகிறது.
வெள்ளைச் சர்க்கரைக்கு, நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி ஒருபோதும் மாற்று இல்லை என்பதே பெரும்பாலான மருத்துவர்கள் முன்வைக்கு கருத்து. கரும்பிலிருந்து முற்றிலும் சுத்திகரிக்கப்பட்டு, 100% சுக்ரோஸுடன் வருவது தான் வெள்ளைச் சர்க்கரை. அதுவே நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் என்றால், 90 முதல் 92% சுக்ரோஸ் இருக்கும். கருப்பட்டி என்றால் 85 முதல் 90% சுக்ரோஸ், தேன் என்றால் 80% சுக்ரோஸ் இருக்கும். எனவே இதில் பெரிய வித்தியாசம் இல்லை.
Also Read : சர்க்கரை வெஜ்ஜா, நான் வெஜ்ஜா! சர்க்கரையில் கலப்படும் ரசாயனங்கள் என்னென்ன? How bad is white sugar for you?
100 கிராம் வெள்ளைச் சர்க்கரையில், 398 கலோரிகள் இருக்கின்றன. அதில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகளின் அளவுகள் மிகவும் குறைவு. வெள்ளைச் சர்க்கரை என்பது ரசாயனங்களின் மூலம் ப்ளீச் செய்யப்படுவது. நம் உபயோகத்துக்கு வரும் வெள்ளைச் சர்க்கரையில், அந்த ப்ளீச்சின் மிச்சங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. வெள்ளைச் சர்க்கரையில் “அஸ்பார்ட்டம்” என்ற பொருளும், சல்ஃபர் அளவும் அதிகம்.
வெள்ளைச் சர்க்கரையோ, நாட்டுச் சர்க்கரையோ, தேனோ அல்லது பனை வெல்லமோ, எல்லாமே மாவுச் சத்து தான். 1 கிராம் மாவுச்சத்தில் 4 கலோரிகள் உள்ளது. நாட்டுச் சர்க்கரையில் இனிப்பு சுவை குறைவாக இருக்கும். எனவே ஒரு ஸ்பூன் வெள்ளை சர்க்கரை பயன்படுத்த வேண்டிய இடத்தில் 2 அலலது 3 ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை போடுவார்கள். அது மிகவும் ஆபத்து. எனவே எல்லா வகை சர்க்கரையையும் அளவாக தான் எடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும், மிதமான வெந்நீரில் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும் என்பது முழுக்க முழுக்க பொய். அதிக உடல் எடை என்பது அதிக கொழுப்பு. எளிய உண்மை என்னவென்றால், உணவைக் குறைத்து உடற்பயிற்சி செய்தால் தான் கொழுப்பு கரைந்து ஆற்றலாக மாறும். மாவுச் சத்து குறைவாக எடுப்பது, விரதம் இருப்பது போன்ற முறைகளும் உதவி செய்யலாம். வெந்நீரில் அல்லது எலுமிச்சை சாறில் தேன் கலந்து குடித்துவிட்டு, வழக்கமாக உண்ணும் உணவையே எடுத்துக்கொண்டால் எந்த பயனும் இல்லை.
ஒவ்வொரு பழத்திலும் குளுக்கோஸ், சுக்ரோஸ், பிரக்டோஸ் என மூன்று வித சர்க்கரைகளும் வெவ்வேறு அளவுகளில் உள்ளது. நேரடி சர்க்கரைக்கும் பழங்களில் உள்ள சர்க்கரைக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால், பழச் சர்க்கரை நார்ச்சத்துடன் இணைந்து வருகிறது. பழச்சாறாக இல்லாமல் முழு பழமாக எடுத்துக்கொண்டால் அந்த நார்ச்சத்து கிடைக்கும். அது போல உடலில் சர்க்கரை ஏறும் விகிதமும் (கிளைசிமிக் இன்டெக்ஸ்) குறைவாக இருக்கும். இட்லி, தோசை அல்லது சாதம் போன்றவற்றை விட பழங்கள் குறைவாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கூட்டும். ஆனால் அதற்காக பழங்களையும் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. எந்தப் பழமாக இருந்தாலும் 100 கிராம் போல எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
மேலும், நீரிழிவு பிரச்னை வரக்கூடாது, உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் நேரடி சர்க்கரையை தவிர்ப்பது நல்லது அல்லது இரண்டு ஸ்பூன் அளவு வரை எடுத்துக்கொள்ளலாம். அதுவே நீரிழிவு இருப்பவர்கள் என்றால் கண்டிப்பாக நேரடி சர்க்கரை எடுத்துக் கொள்ளக் கூடாது. அதேநேரம் நீரிழிவு நோயாளிகளுக்கு நேரடி சர்க்கரையை விட, அரிசி உணவுகள் தான் ஆபத்து. அதுதான் ரத்த சர்க்கரை அளவை உடனே அதிகப்படுத்தும்.
சில விளம்பரங்கள் ‘சுகர்-ப்ரீ’ என்ற பெயரில் பிரக்டோஸ் மட்டுமே உள்ள சர்க்கரையை தேநீர் அல்லது காபியில் கலந்து குடிக்கச் சொல்கிறார்கள். பிரக்டோஸ் ரத்த சர்க்கரை அளவை உடனே உயர்த்தாது ஆனால் நீரிழிவு நோயின் வீரியத்தை அதிகப்படுத்தும். எனவே நீரிழிவு நோயாளிகள் அறவே சர்க்கரையை தவிர்க்க வேண்டும் அல்லது மிகக்குறைவாக எடுக்க வேண்டும்.
சர்க்கரை அதிகம் எடுத்துக்கொண்டால் உடல் பருமன் மட்டுமல்லாது இதய நோய்களுக்கான அபாயமும் அதிகரிக்கும். சர்க்கரை அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது, கல்லீரல், ரத்தத்தில் கொழுப்பு கூடும், இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகமாகும். சர்க்கரை அதிகம் எடுத்து பழகியவர்களுக்கு, மற்ற உணவுகளில் திருப்தி இருக்காது. எனவே அதிகமாக உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். இது உடல் பருமனுக்கும், இதய நோய்களுக்கும் வழிவகுக்கும்.
பெண்களுக்கு பிசிஓடி எனப்படும் சினைப்பை நோய்க்குறி (PCOD) ஏற்படும். உயர்ரத்த அழுத்தம், யூரிக் ஆசிட் பிரச்னை என அதிக சர்க்கரையால் பல சிக்கல்கள் உருவாகும். எனவே வெள்ளைச் சர்க்கரை வில்லன், நாட்டுச் சர்க்கரை ஹீரோ என்பது முற்றிலும் தவறு. எதையும் அளவோடு எடுப்பது நல்லது” என்கின்றனர் மருத்துவர்கள்.
ஒரு பாட்டில் குளிர்பானத்தில் 8 முதல் 10 ஸ்பூன் என்ற அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். எனவே தினமும் குளிர்பானம் குடித்தால், கல்லீரலில் கெட்டக் கொழுப்பு கூடும். எப்படி அதிகமாக அல்லது தினமும் மது குடித்தால் கல்லீரல் கெடுமோ, அதிகமாக சர்க்கரை எடுப்பதாலும் அதே அளவில் கல்லீரல் கெடும். உடல் எடை கூடுவது, நீரிழிவு நோய், இதய நோய் என சர்க்கரையுடன் பல உடல்நலப் பிரச்னைகளுக்கு தொடர்பு உள்ளது.
இதுபற்றி ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கேட்டபோது, ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பதால் வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். நாட்டுச் சர்க்கரைக்கென பிரத்யேக மனமும் சுவையும் இருக்கும். வெள்ளைச் சர்க்கரையோடு ஒப்பிடும்போது நாட்டுச் சர்க்கரையில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்துகளின் அளவுகள் அதிகம்.
வெள்ளைச் சர்க்கரையா, நாட்டுச் சர்க்கரையா, கருப்பட்டியா எனக் கேட்டால், மூன்றில் கருப்பட்டிதான் சிறந்தது. பனையிலிருந்து எடுக்கப்படுவது கருப்பட்டி. இதில் கால்சியம் சத்து மிக அதிகம். அதாவது, 363 மில்லிகிராம் அளவு கால்சியம் இதில் இருக்கிறது. பாஸ்பரஸ் சத்தும் இதில் அதிகம். இந்த மூன்றிலுமே கலோரியின் அளவு கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனாலும், கருப்பட்டியில் மட்டும்தான் சத்துகள் அதிகம் என்பதால்தான் மற்ற இரண்டையும்விட அது சிறந்தது எனச் சொல்கிறோம் என்கின்றனர்.
நாட்டுச்சர்க்கரையில் நன்மைகள் இருந்தாலும், நீரிழிவு நோயாளிகள் இதையும் தவிர்க்க வேண்டும். சர்க்கரையில் தீங்கு அதிகம் என்றால், நாட்டு சர்க்கரையில் தீங்கு குறைவு என்று சொல்லலாம். எனவே, சர்க்கரை நோயாளிகள், வெள்ளை சர்க்கரையை போலவே, நாட்டுச்சர்க்கரையையும் தவிர்க்க வேண்டும். இந்த இரண்டு சர்க்கரைகளுக்கும் பதிலாக, கருப்பட்டி எவ்வளவோ தேவலாம்.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry